Advertisement

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

தார்ச்சாலை பாதிப்பு; கிராம மக்கள் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, வயலூர் பஞ்சாயத்து கிராமத்தில் இருந்து, பஞ்சப்பட்டி வரை செல்லும் தார்ச்சாலை, பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். இந்த வழியாக அரசு பஸ்கள், கல்லூரி பஸ்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.

அம்மா பூங்காவில் எரியாத விளக்கு: திருகாம்புலியூர் பஞ்சாயத்து, மாயனூர் பாலம் அருகில், புதிதாக அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என அனைவரும், பூங்காவை சுற்றி பார்க்க தினமும், 50க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் பூங்காவில் அமைக்கப்பட்ட ஒரு சில சோலார் விளக்குகள் மட்டும் எரியாமல் உள்ளது. இதனால், பூங்காவை பார்க்க வரும் மக்கள் சிரமப்படுகின்றனர்.


சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா? லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி கொடிக்கால் தெரு செல்லும் வழியில் செயல்படுகிறது. 1,200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி உள்புறம் மாணவர் கள் பயன்படுத்தும், சுகாதார வளாகம் சேதமடைந்து, தண்ணீர் செல்லும் குழாய்கள் உடைக்கப்பட்டு, மோசமான நிலையில் இருந்து வருகிறது. மாணவர் கள் சுகாதார வளாகம் பயன்படுத்துவதில் சிரமப்படுகின்றனர். சுகாதார கழிப்பிட கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடத்தல் லாரி மணலில் செடிகள்: கரூர், திருச்சி சாலை மாயனூர் நெடுஞ்சாலையில், போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. போலீசார் ரோந்து செல்லும் போது, மண் கடத்தலில் ஈடுபடும் மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மாயனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் மணல் லாரிகள், வழக்கு முடியும் வரை அந்த இடத்தில் நீண்ட நாட்கள் வரை நிறுத்தப்படுகிறது. மணலுடன், லாரிகள் நிற்பதால் அதன் மேல் புறத்தில் உள்ள மணலில், செடிகள் வளர்ந்து வருகிறது.

வாய்க்காலில் படித்துறை சேதம்: லாலாப்பேட்டை அடுத்துள்ள, கருப்பத்தூர் பகுதி காவல்காரத் தெருவில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் பயன்படுத்தும் வகையில், கட்டளை தென்கரை வாய்க்காலில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. தற்போது படித்துறை முற்றிலும், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும், படித்துறை செல்லும் வழியில், முள் செடிகள் வளர்ந்துள்ளது. முட்புதர்களை சரி செய்ய வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement