Advertisement

தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகை

நாமக்கல்: நாமக்கல்லில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி, தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். நாமக்கல், சேலம் சாலை, முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகத்தில், 'திரிபுரா சிட்ஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, 10 ஆயிரம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. தினசரி, மாதம் ஒருமுறை என, முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், 45 நாட்களுக்கு முன், முதலீட்டாளர்களுக்கு சரியாக முதிர்வு தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நிறுவனம் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, மூடப்பட்ட நிறுவனத்தை, அதில் பணியாற்றி வந்த மண்டல மேலாளர் ராஜேஷ் திறந்து உள்ளே சென்றார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டு, அவரிடம் தகராறு செய்தனர். அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த முதலீட்டாளர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த, நாமக்கல் போலீசார், முதலீட்டாளர்களை சமரசம் செய்து, மண்டல மேலாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது: இந்த நிறுவனத்தில், 1,000க்கும் மேற்பட்டோர், கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில், சரியாக முதிர்வு தொகையை வழங்கினர். சமீபகாலமாக, முதிர்வு தொகை வழங்கவில்லை. சிலருக்கு காசோலைகள் வழங்கப்பட்டு, கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. நிதிநிறுவன அதிபர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement