Advertisement

இறந்த குரங்கை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, இறந்த குரங்கிற்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று, பொதுமக்கள் புதைத்தனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கத்தில் உள்ள காலனியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மரத்தில், 30 க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்து வந்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு, பாணாவரத்தைச் சேர்ந்த பக்தர் ராமசாமி, 45, கோவிலுக்கு வந்தார். அவரிடமிருந்த பழங்களை பறிக்க குரங்குகள் பாய்ந்தன. இதனால், அங்கிருந்த கம்பால் குரங்குளை அடித்தார். இதில் ஒரு குரங்கு இறந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், தெய்வ குற்றமாக கருதினர். இதனால் குரங்கிற்கு பாடை கட்டி, ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவை, குரங்கை கொன்ற, ராமசாமி ஏற்க வேண்டும் என்று கூறினர். இதற்கு ராமசாமியும் சம்மதித்தார். இதையடுத்து, மதியம், 3:00 மணிக்கு பாடை கட்டி, அதில் குரங்கை கிடத்தினர். பெண்கள் ஒப்பாரி வைத்து, சங்கு ஊதி, ஊர்வலமாக எடுத்துச்சென்று, அங்குள்ள சுடுகாட்டில் புதைத்தனர். பின், நடந்த சாவு விருந்தில், 100 பேர் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement