Advertisement

மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 மருத்துவ குழுக்கள் அமைப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், மழை கால நோய்கள் பரவாமல் தடுக்க, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 40 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள் பலர், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதை தடுக்க, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் கூறியதாவது: பருவ மழையால், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரை, மழைக்கால நோய்கள் உடனடியாக தாக்கும். இதனால், தேசிய சுகாதார குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஒன்றியத்திற்கு, இரண்டு குழுக்கள் வீதம், மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், 40 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில், இரண்டு டாக்டர்கள், நர்சு, மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என, பத்து பேர் இருப்பர். இவர்கள், அந்தந்த அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவ, மாணவியரை பரிசோதனை செய்வர். அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை முடிந்து குணமாகிய பிறகும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement