Advertisement

முதியோர் உதவித்தொகை கேட்டு தாசில்தாரை மிரட்டிய இளைஞர் மீது போலீசில் புகார்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை கேட்ட இளைஞரை, தனி தாசில்தார் விரட்டிய சம்பவத்தில், இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், 60, கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். நேற்று மதியம், சம்பத் உறவினர் மருதேரியை சேர்ந்த ராமன், 25, 'நான் மனித உரிமை கமிஷனில் உள்ளேன். சம்பத்திற்கு, முதியோர் உதவித்தொகை ஏன் வழங்கவில்லை' என, தனி தாசில்தார் முனுசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது நடந்த பேச்சு வார்த்தையை, ராமன் தனது மொபைல்போனில் பதிவு செய்துள்ளார். இதையறிந்த முனுசாமி, 'தேவையில்லாமல், மொபைலில் படம் பிடிக்கக் கூடாது, விண்ணப்பதாரர் வந்தால், தகுந்த பதில் அளிக்கிறேன்' என்று கூறி, அவரை வெளியே போகுமாறு விரட்டினார். அப்போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நியாயம் கேட்க வந்தவரை, தனி தாசில்தார் முனுசாமி விரட்டியதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் ராமன், சம்பத் ஆகியோர் தடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், தனித்தனியே போச்சம்பள்ளி போலீசில் இருவரும் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில், போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத் கூறியதாவது: மனித உரிமை கமிஷன் என்று கூறி, பலரும் அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். ராமன் என்பவர், பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களை அழைத்து வந்து, தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். நேற்று நடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement