Advertisement

மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த கிராமத்தில் மருத்துவ முகாம்

அரூர்: அரூர் அருகே, மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்த, கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராகவன், 23 இவர், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், ராகவனுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், வீரப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு காய்ச்சல் அதிகரித்ததால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், அரூர் தாசில்தார் பரமேஸ்வரி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கலைவாணன் மற்றும் பஞ்., துப்புரவு பணியாளர்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு டெங்கு ஒழிப்பு தூய்மை பணியை மேற்கொண்டனர். இதில், தெருக்களில் இருந்த குப்பை, செடி, செடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக உள்ள பாலிதின் கவர், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றியதுடன், கொசு மருந்து அடித்து தூய்மைப் பணி மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சல் குறித்தும், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். மேலும், தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரகுநாத் தலைமையிலான மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement