Advertisement

வேலூர் திருட்டு கும்பல் தலைவன் சேலத்தில் 100 பவுன் பறித்தது அம்பலம்

சேலம்: வேலூர் சங்கிலி பறிப்பு கும்பல் தலைவன், சேலத்தில், 25 பெண்களிடம், 100 பவுன் நகையை பறித்துள்ளது, போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. நகைகள், நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் விசாரிக்க, போலீசார், வேலூர் சென்றுள்ளனர்.

சேலம், கன்னங்குறிச்சி, வீராணம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த, நான்கு மாதங்களில், 35 சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 20 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதி, பதிவு செய்யப்படாமல், நகைகளை மீட்டுத்தருகிறோம் என, போலீசார் அளித்த தகவலின்படி, பறிகொடுத்தவர்கள் காத்திருக்கின்றனர். சம்பவ இடங்களில் இருந்த கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்ததில், வேலூர் மாவட்டம், காட்பாடி மணிகண்டன், 40, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததை, போலீசார் உறுதி செய்தனர். அவன் மீது, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என, தமிழகம் முழுவதும், 60 வழக்குகள் உள்ளன. அதில், 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரு கொலை வழக்குகள் தவிர்த்து, மற்றவை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தவை என பட்டியல் நீள்கிறது. சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனை, சேலம், கன்னங்குறிச்சி போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சேலம் மாநகரம், வீராணம், கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட பெண்களிடம், 100 பவுன் தங்க சங்கிலிகளை பறித்தது தெரியவந்தது. அதில், 40 பவுனை, 'அட்டிகா கோல்டு' வேலூர் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றதும், 60 பவுன் நகையை, பல்வேறு நிதி நிறுவனங்களில், அடகு வைத்து பணம் பெற்று இருப்பதையும் ஒப்புக்கொண்டான். நிதி நிறுவனங்களிடம் விசாரிக்க, மணிகண்டனுடன், சேலம் தனிப்படை போலீசார், வேலூர் சென்றுள்ளனர். மணிகண்டனிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும்பட்சம், பல செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் குறித்த முழு தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement