Advertisement

'யமுனை நதிக்கரை சேதத்துக்கு வாழும் கலை அமைப்பே பொறுப்பு'

புதுடில்லி: 'டில்லியில் உள்ள யமுனை நதிக் கரையில், உலக கலாசார விழா நடத்தியபோது ஏற்பட்ட சேதத்துக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பே பொறுப்பு' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள யமுனை நதிக் கரையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில், கடந்தாண்டு, உலக கலாசார விழா நடத்தப்பட்டது.
இதற்காக மேடை அமைத்தது போன்றவற்றால், யமுனை நதிக் கரை சேதப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, சேதத்துக்கு இழப்பீடாக, ஐந்து கோடி ரூபாயை செலுத்தினால் மட்டுமே, விழாவுக்கு அனுமதி அளிப்பதாக, பசுமை தீர்ப்பாயம் கூறியிருந்தது.
இந்த வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதேந்திர குமார், உறுப்பினர்கள் நீதிபதி, ஜாவத் ரஹீம், சுற்றுச்சூழல் நிபுணர், பி.எஸ். சஜ்வான் அமர்வு, நேற்று தீர்ப்பை அறிவித்தது. தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
யமுனை நதிக் கரையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், யமுனை நதிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு, வாழும் கலை அமைப்பே பொறுப்பு என தீர்ப்பளிக்கப்படுகிறது.
இதற்காக, கூடுதல் அபராதம் ஏதும் தற்போது விதிக்கப்படவில்லை. சேதம் குறித்தும், அதை சீரமைக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து, டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆய்வு செய்து, அறிக்கையாக அளிக்க வேண்டும். சீரமைப்புக்கு கூடுதல் செலவானால், அதை வாழும் கலை அமைப்பிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
ஏற்கனவே செலுத்திய, ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக செலவானால், மீதமுள்ள தொகை திருப்பி தரப்படும்.
யமுனை நதிக்கரை பகுதியில் பராமரிப்புப் பணிகளை, டில்லி மேம்பாட்டு ஆணையம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அங்கு, எந்தவொரு நிகழ்ச்சி நடத்தவும் இனி அனுமதி அளிக்கக் கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, வாழும் கலை அமைப்பு கூறியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    இது நிச்சயமா ஐரோப்பிய அடிமைகள் பின்னணியில் இருந்து செய்யிற காரியம். வேணுமினிட்டே செஞ்சிருக்காக.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement