Advertisement

இது உங்கள் இடம்

காந்தி சொன்ன வார்த்தை பலிக்குமா?
கு.அருண், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரசில், நேருவின் காலத்தில் துவங்கிய குடும்ப அரசியல், அவரின் மகள் இந்திரா, அவரின் வாரிசுகளான, சஞ்சய், ராஜிவ் வரை தொடர்ந்தது. ராஜிவ் படுகொலைக்கு பின், அவரது மனைவி சோனியா, 20 ஆண்டுகள் தலைவர் பதவியை அலங்கரித்து விட்டார். ஆனால், அவரால் கட்சியை வலிமையாக வழி நடத்த முடியவில்லை. பல முறை, மத்தியில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து, காங்கிரஸ் ஆட்சி நடந்தது.


கூட்டணி கட்சிகள் செய்த ஊழல்களால், காங்கிரசுக்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. கடந்த, 2014க்கு முன், 10 ஆண்டு கால மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியில், '2ஜி' ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் என, ஊழல் பட்டியல் வரிசைக் கட்டி நின்றன. இதனால், ஒட்டுமொத்த மாக, காங்கிரஸ் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. மத்தியில், 2014ல் பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தது. அதன் பின், பல மாநில தேர்தல்களிலும், காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.


தற்போது, ராகுல் தலைவராக வர உள்ளார். அவருக்கு பாராட்டுகளை தெரிவிப்போம்! அன்று, வெள்ளையர்களுக்கு எதிராக போராடி, சுதந்திரம் பெற்று தந்தது, காங்கிரஸ். இன்று, குடும்ப அரசியலில் சிக்கி சுதந்திரமாக செயல்படுவதில் தடுமாறி நிற்கிறது. காந்தி மறைந்த போது, அவரிடம் காலணா காசு கூட கிடையாது. அவரிடம் இருந்தது ஒரு கோவணத் துண்டு மட்டுமே. மூக்குக்கண்ணாடி, பைபிள், குரான், பகவத் கீதை, எச்சில் துப்புவதற்கு ஒரு கோப்பை, மூன்று குரங்கு பொம்மைகள் தான்! இன்று, கதர் சட்டை அணிந்து, மெகா கோடீஸ்வரர்களாக, காங்கிரஸ்காரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.


குஜராத் தேர்தல் வெற்றியில் தான், கட்சியின் பலம் உள்ளது. ஒருவேளை, ராகுல் தலைமையில் அங்கு, காங்கிரஸ் வெற்றி பெற்றால், தொடர் வீழ்ச்சியில் இருந்து, அக்கட்சி மீள வாய்ப்புள்ளது. இல்லையென்றால், அன்று காந்தி கூறியதைப் போன்று, காங்கிரஸ் காணாமல் போய் விடும்!


****


'டேக்கா' விடும் வார்டன்களுக்கு விரைவில், 'ஆப்பு!'

எஸ்.ஆதங்கன், செம்பட்டி, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: 'அரசு விடுதியில் தங்கி, பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை கண்காணிக்க, பயோ - மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்' என, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்; இது வரவேற்கக்கூடியது!


அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்காக, ஆண்டு தோறும் பல நுாறு கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது, மாநில அரசு; ஆனால், முழு பயன் மாணவர்களை சென்றடையவில்லை. அரசு விடுதிகளை ஆய்வு செய்து கண்காணிக்கும் தலைமை அதிகாரிகள் சரியாக இருந்தால், விடுதி வார்டன், சமையல்காரர், பிற பணியாளர் மற்றும் மாணவர்கள் சரியாக இருப்பர்! பெரும்பாலான விடுதி களில், வார்டன் முழு நேரமும் இருப்பதில்லை. விடுதியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும், தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.


பெயர் அளவுக்கு விடுதியில் சேர்ந்து, வெளியில் இருந்தோ, வீட்டில் இருந்தோ, வந்து போகும் மாணவர்களும் இருக்கின்றனர். வார்டன்களை வேலை வாங்க, ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன், வார்டன்கள் தப்பித்து கொள்கின்றனர். பயோ - மெட்ரிக் முறையை அமல்படுத்தினால், மாணவ - மாணவியரை கண்காணிக்க முடியும்! வார்டன், சமையல்காரர் உள்ளிட்ட பணியாளர்களும் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற முன் வருவர்.


சில விடுதிகளில், சமையல்காரரிடம் பொறுப்பை ஒப்படைத்து, வார்டன்கள் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். தங்கள் சொந்த வேலைகளை பார்ப்பதில் குறியாக உள்ளனர்.இதை தடுக்க, பயோ - மெட்ரிக் முறையுடன், கண்காணிப்பு கேமராவும் விடுதிகளில் பொருத்த வேண்டும். சுழற்சி முறையில் விடுதி வார்டன் பொறுப்பை, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு, அரசின் பலன் முழுமையாக கிடைக்க, வார்டன்கள் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, சோம்பேறிகளாக இருக்கக் கூடாது!


****


மனசாட்சியுடன் செயல்படுங்கள் விஜயபாஸ்கர்!
வி.ஜெயராமன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: என் மகள், நவ., 22 அன்று இரவு, 11:00 மணிக்கு சாலை விபத்தில் சிக்கினார். விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தேன். சிகிச்சைக்குப் பின், மறுநாள் உள்நோயாளியாக, 124வது வார்டுக்கு, என் மகள் மாற்றப்பட்டார். அங்கு, எந்த நோயாளிக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி என, எதுவுமே தரவில்லை.


குடிநீர் கூட, வெளியிலிருந்து தான் வாங்கி வந்து குடிக்க நேரிட்டது. ஆள் துணை இல்லா நோயாளிகளின் கதி எப்படி இருக்கும் என, எண்ணி பார்க்கவே அச்சமாக இருந்தது.இரண்டாவது தளத்தில் இருந்து எத்தனை முறை, கீழே இறங்கி வந்து உணவு மற்றும் குடிநீர் வாங்கி வர முடியும்... கையில் பணம் இல்லாதோரின் நிலை என்னவாகும்! மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாததால், நவ., 24ல் நோயாளிகள் பலர், தாங்களே முன்வந்து, 'டிஸ்சார்ஜ்' செய்து வெளியேறி விட்டனர். மூன்று வேளையும், நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதிக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் மாத்திரை, 'ஸ்டாக்' இல்லை; காயத்திற்கு மருந்து இல்லை.


மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவமனையில், நோயாளிகளுக்கான எந்த ஒரு உதவியும் இன்றி செயல்படுவதை பார்க்கும் போது, மனம் வலிக்கிறது. நோயாளிகளுக்கு உணவும், மருந்தும் கொடுக்க, அரசு பணம் ஒதுக்கவில்லையா அல்லது கொடுக்கவில்லையா என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் விளக்க வேண்டும். அமைச்சர், கலெக்டர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் பொறுப்பேற்று சரியான பதில் சொல்ல வேண்டும் அல்லது மருத்துவமனையில் நிலவும் குறைகளை சரி செய்ய வேண்டும்.


இவர்களை தவிர, அந்த தொகுதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,வும் பொறுப்பேற்று சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனையை விட்டால், ஏழைகளுக்கு புகலிடம் கிடையாது. எனவே, மனசாட்சியுடன் செயல்பட வாருங்கள், விஜயபாஸ்கர்!
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement