Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அவங்க பணம் கொடுத்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்... யாராவது இப்படி உங்களைச் சொல்லச் சொன்னாங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் மற்றும் அவரது தரப்பினர், தினகரனை கண்டு தான் பயப்படுகின்றனர் என, நினைத்தால், நடிகர் விஷாலை கண்டும் அச்சப்படுகின்றனர். பணம் கொடுத்து, மனுவை நிராகரிக்க செய்துள்ளனர். இந்தச் சதி வேலையை செய்த மதுசூதனனுக்கு, ஆர்.கே.நகர் மக்கள் பாடம் புகட்டுவர்.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் பேச்சு: மன்னர்கள் காலத்தில், அவர்களது கட்டுப்பாட்டில் அல்லது அவர்கள் வென்ற பகுதி வரை, அந்நாட்டின் எல்லை இருந்தது. தற்போது, மொழி தான் ஒரு நாட்டின் எல்லையாக உள்ளது. அந்த வகையில், புலம் பெயர்ந்தவர்கள் என்பவர்கள், வேறு நாடுகளுக்கு தாங்கள் மட்டும் செல்லாமல், தங்களது மொழியையும் எடுத்துச் செல்வதால், தமிழர்கள் வாழும் பகுதி தான் நம் எல்லை. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்வதால், நமக்கு எல்லையே இல்லை.

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தை முழுமையாக நிறுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வு, உளுந்தம் பருப்பு வினியோகம் நிறுத்தம் என, தொடர்ச்சியாக குடும்ப அட்டை வினியோகத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா உறுதி செய்யப்பட்டதால், அங்கு முன்னர், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதில் தொடர்புடையவர்கள் மீது, தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க., அரசின் மீது, மக்களுக்கு கோபம் அதிகரித்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: ஒரு வேட்பாளருக்கு உதவுவது தான், தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமை; அவரது மனுவை எப்படியெல்லாம் நிராகரிப்பது என்பது அல்ல. நடிகர் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிப்பதற்கு தெரிவித்த காரணத்தை, எந்தவொரு வேட்பாளருக்கும் இனி சொல்ல முடியும்; இது, ஆபத்தான முன்னுதாரணம். தற்போதைய தேர்தல் நடத்தும் அதிகாரியை, தேர்தல் கமிஷன் மாற்ற வேண்டும்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், 2015 - 2016ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்திய அளவில் உயர்கல்வியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதேபோல், மத்திய அரசின் தொழில் துறை நிறுவனங்களின், சி.ஐ.ஐ., அறிக்கையின்படி, தமிழகம் வேலைவாய்ப்பு வழங்குவதிலும், முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement