Advertisement

அக்கம் பக்கம்

பிரதமரே சொல்லிட்டாரு!

'யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; பிரதமர் மோடி, என்னை பாராட்டி விட்டார்; எனக்கு அது போதும்' என, உற்சாகத்துடன் கூறுகிறார், உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத்.


சமீபத்தில், உ.பி.,யில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள, 16 மாநகராட்சிகளில், 14 மேயர் பதவிகளை, பா.ஜ., கைப்பற்றியது. இது பற்றிய தகவல்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பா.ஜ.,வுக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் பாராட்டுகள் குவிந்தன. இதில் கடுப்பான, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், 'மாநகராட்சி தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்றது உண்மை தான். ஆனால், நகராட்சி, பஞ்சாயத்துகளில், பெரும்பாலான பகுதிகளில் தோல்வி அடைந்து உள்ளது' என, குற்றம் சாட்டினர்.


சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு படி மேலே சென்று, 'ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இடங்களில் தான், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்ட இடங்களில் தோல்வி அடைந்துள்ளது' என, தன் பங்கிற்கு அணுகுண்டை வீசினார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில், உ.பி.,க்கு வந்த பிரதமர் மோடி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, பா.ஜ., பிரதிநிதிகளை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், யோகி ஆதித்யநாத்துக்கும் பாராட்டு தெரிவித்தார். இதனால், மகிழ்ச்சி கடலில் மிதக்கும் யோகி, 'இனி, யார் என்ன கூறினாலும் எனக்கு கவலைஇல்லை' என, புன்னகையுடன் வலம் வருகிறார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement