Advertisement

வருமானத்துடன் இயற்கை உரமாகிறது! - சொல்கிறார்கள்

ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வருமானத்துடன், மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம் சாகுபடி குறித்து கூறும், பிரதாபன்: தஞ்சாவூர் மாவட்டம், மாத்துாரைச் சேர்ந்த, இயற்கை விவசாயி நான். விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு, சிறு வயது முதலே, இதில் ஆர்வம் அதிகம்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து, முழு நேர விவசாயியாக மாறி விட்டேன். 1 ஏக்கர் நிலத்தை, இரண்டு சால் உழவு ஓட்டி, 100 கிலோ கனஜீவாமிர்தம் இட வேண்டும். மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, 2.5 அடி அகலத்தில், பார் அமைக்க வேண்டும். இரு பார்களுக்கு இடையில், விதைக்கு விதை, 1 அடி இடைவெளி இருக்குமாறு, வீரிய ரக மக்காச்சோளம் விதைக்க வேண்டும்.

இதன்படி, 1 ஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவை. விதைத்தவுடன், 200 லி., ஜீவாமிர்தத்தில், 600 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம்., கரைசலைச் சேர்த்து, 3, 7, 13 மற்றும், 15ம் நாட்களில், பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

விதைத்த, 25ம் நாள், 100 லி., தண்ணீரில், 3 லி., மூலிகைப் பூச்சி விரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 30 நாட்களுக்குப் பின், வாரம் ஒரு முறை பாசன நீருடன், ஜீவாமிர்தம், இ.எம்., கரைசல் விட வேண்டும். 32ம் நாள், 100 லி., தண்ணீரில், 20 லி., ஜீவாமிர்தம் கலந்து, பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.

இவற்றை சரியாக கடைபிடித்து வந்தால், விதைத்த, 100 நாட்களுக்குப் பின், கதிர்கள் முற்றத் துவங்கும். 120 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். 60 நாட்களிலேயே மக்காச்சோளக் கதிர்கள் ஒடிக்கலாம்.

வெளியூரில், ஒரு கதிர், 10 ரூபாய், உள்ளூர்க்காரர்களுக்கு, மூன்று ரூபாய் என விற்பனை செய்தேன். 2,000 பால் கருதுகள் விற்பனை மூலம், 9,500 ரூபாய் வருமானம் கிடைத்தது.உழவில் இருந்து இதுவரை செய்த செலவுகளுக்கு, இதுவே சரியாகி விட்டது. அடுத்து, ஒன்றரை மாதத்தில் அறுவடை செய்யும் மக்காச்சோளம் முழுவதுமே, லாபம் தான்.

அறுவடை செய்வதை காய வைத்து, உதிர்த்து, விதைக்கு போக, மீதியை சோளப்பொரி, சோளமாவு தயாரிப்பவர்களிடம் விற்க முடிவு செய்துள்ளேன்.அறுவடையின் போது கிடைக்கும், 20 குவின்டாலில், ஒரு குவின்டால் குறைந்தபட்சமாக, 2,500 ரூபாய்க்கு விற்றாலே, 50 ஆயிரம் ரூபாய் வரும்.

மேலும், அறுவடை முடிந்த பின், சோளத் தட்டைகளை, வயலில் போட்டு மட்க விட்டால், அது மண்ணுக்கு சிறந்த இயற்கை உரமாக இருக்கும்.பின், மடக்கி உழுதால் மண் வளமாகிவிடும். அடுத்த போக பயிரில், நல்ல மகசூல் எடுக்கலாம். தொடர்புக்கு: 98437 90737.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement