Advertisement

இது உங்கள் இடம்

பிரதமர் மோடியின்'கிரீன் சிக்னலால்'கல்வி மேம்படும்!
சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும், 500 பல்கலைகளில், இந்திய பல்கலைக் கழகம் எதுவுமே இடம் பெறவில்லை; இது, ஒவ்வொரு இந்தியனையும் தலைகுனிய
வைத்துள்ளது.


உலகத் தர பட்டியலில், இந்தியா இடம் பெற வேண்டுமாயின், கல்வியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும். பழைய கற்பித்தல் முறையை கை விட்டு, கல்வியில் புதிய மாற்றங்களை புகுத்த வேண்டும்.


பீஹார் மாநிலம், பாட்னா பல்கலையின் நுாற்றாண்டை ஒட்டி நடந்த விழாவில், பிரதமர் மோடி, 'பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்த, ஐந்தாண்டுகளுக்கு முதற்கட்டமாக, 20 பல்
கலைக் கழகங்களுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, அறிவித்தார்; இந்த அறிவிப்பிற்கு சபாஷ் போடலாம்.


இதன் மூலம், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 80 கோடி இளைஞர்களின் கல்வித் தரம் மற்றும் பணி ஆற்றல் மூலம் மகத்தான சாதனை நிகழ்த்த முடியும்.தேர்ந்தெடுக்கப்படும், 20 பல்கலைகளை, பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அரசியல்வாதிகளோ தேர்ந்தெடுக்கப் போவதில்லை; கல்வித் துறை வல்லுனர்களால், மூன்றாம் தரப்பு அமைப்புகளே, தரத்தின்
அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளன.


பா.ஜ.,வின் மூன்றாண்டு கால ஆட்சியில், பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு, மக்கள் மத்தி யில் பாராட்டும், விமர்சனங்களும் வருகின்றன.எதிர்வரும் காலங்களில், சர்வதேச அளவில் பட்டியலிடப்படும், பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலில், இந்திய பல்கலைகளும் இடம் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பிரதமர் ஒதுக்கீடு
செய்துள்ளார்.


அவரின் எண்ணம் நிறைவேற, கல்வியாளர், அறிவியல் நிபுணர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். பிரதமரின் வளர்ச்சி திட்டங்களை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை; யாரும் துாற்றி பேசாதீர்!


கனிம வளத்தை பாதுகாக்க கோர்ட் பேச்சை கேளுங்க!
வி.கார்மேகம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆற்றில் தண்ணீர் வராமல் விவசாயம் பொய்த்து போனதால், வயலில் குவாரி அமைத்து மணல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர், சில விவசாயிகள்.


அரசியல்வாதிகளின் பினாமிகள், இரவோடு இரவாக மாட்டு வண்டி, டிராக்டர், லாரிகளில் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். மணல் கொள்ளையை தடுக்க, நீதிமன்றம் களம் இறங்கியுள்ளது.


'மணல் குவாரிகளை ஆறு மாத இடைவெளியில் முற்றிலுமாக மூட வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டு உள்ளார்.'கால அவகாசமே கூடாது. உடனடியாக மூட வேண்டும்' என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு; அவர் கூறுவது நுாற்றுக்கு நுாறு உண்மை!'நீர்நிலைகளில் யாரும் மணல் அள்ளக்கூடாது. குவாரிகளில் மணல் விற்பனையை அரசே நடத்தும்' என, சட்டம் போட்டனர்.


தஞ்சை அருகே திருவையாறு அரசு குவாரியில், ஒரு லோடு மணல் பெற, நான்கு முதல் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு குவாரியில் ஒரு லோடு மணல், 1,500 ரூபாய்க்கு
பெறுகின்றனர்.


அதை, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கின்றனர். தன்னிடம், 'பெர்மிட்' உள்ளதாக கூறி, அரசியல்வாதிகளின் பெயரை கூறி, அரசு குவாரிகளில் நுாற்றுக்கணக்கான மணல் லோடுகளை, ஒரு சிலரே பெறுகின்றனர்.


இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு, நீதிமன்றம் வந்து விட்டது.'ஆற்று மணல் மட்டுமல்ல; பூமியிலிருந்து ஒரு சட்டி மண்கூட யாரும் எடுக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.மணல், கிரானைட் கல் உள்ளிட்ட கனிமப் பொருட்களை பாதுகாக்க வேண்டிய அரசே, மெத்தனமாக உள்ளது.


இனியாவது, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, மணல் குவாரிகளை உடனடியாக மூட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தட்டுப்பாட்டை போக்க, வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து மணல் வாங்க வேண்டும். மணலுக்கு மாற்றுப் பொருளான, எம் - சாண்ட் மணலை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

'நண்பன்' பட 'காமெடி!'

முனைவர், மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தஞ்சாவூரில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி, 'கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்' என, வாய் தவறி கூறி விட்டார். முதல்வரை கேலி செய்து, வலைதளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.


முதல்வர், அமைச்சர்கள், சட்டசபை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேச வேண்டியதை, அதிகாரிகள் தயாரித்து அளிப்பர். அதை பார்த்து, அவர்கள் படிக்க வேண்டியது தான்.ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், 'பிட்' அடிக்கும் மாணவன் போல், எழுதிக் கொடுத்ததை, என்ன ஏது எனக் கூட படித்துப் பார்க்காமல், அப்படியே, ஈ அடிச்சான் காப்பியாக வாசிக்கக் கூடாது!
எழுதிக் கொடுத்ததில் தவறு ஏற்பட்டதால், இன்று கேலிக்கு ஆளாகி இருப்பது, பழனிசாமி தானே!


மேல் மட்டத்தில் தவறு நடக்கும் போது, பொதுமக்கள் விமர்சனம் செய்வது வாடிக்கை. எழுதியவர் தவறுதலாக சேக்கிழார் என்றே எழுதி இருப்பினும், பழனிசாமிக்கு தெரிய வேண்டாமா?
நண்பன் படக் காட்சியில், விஜய் மற்றும் நண்பர்கள், உடன் பயிலும் கோமாளி சத்யனை கலாய்க்க முடிவு செய்வர்.


கல்லுாரி ஆண்டுவிழாவில் வாசிக்க வேண்டிய வரவேற்புரையில், சில மாற்றங்களை செய்து விடுவர்; அதை அறியாத, சத்யன் வாசிப்பார். அனைவரும் சிரித்து கேலி செய்வர்.


சினிமாவில் வரும் காமெடி போல், இன்று தமிழக அரசியல் மாறி விட்டது!
இதை விட, வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல், தனியார், 'டிவி'க்களும் களத்தில் குதித்தன. தமிழ் அறிஞர்களை அழைத்து, 'முதல்வர் வரலாற்றுப் பிழை செய்து விட்டார்' என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் கூறி, விவாதம் நடத்துகின்றன.


உரை தயாரிக்கும் இடத்தில் நடந்த தவறால், தமிழே செத்து விட்டது போல், 'டிவி'க்களின் விவாத மேடைகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின.இனியாவது, ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்துடனும், அக்கறையுடனும் முதல்வர் செயல்பட வேண்டும். ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் கூட, சமூக வலைதளங்கள், 'டிவி'க்களில், மக்கள் வறுத்தெடுத்து
விடுகின்றனர்.


முதல்வர் மட்டுமல்ல... அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் உஷாராக பேசுங்கள். வம்பில் சிக்கி கொள்ளாதீர்!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆமாம், ஏதோ மேடையும் மைக்கும் கிடைத்தது, யாரோ எழுதிக்கொடுத்தார், படித்தேன். நான் கம்பரைக் கண்டேனா, சேக்கிழாரைத்தான் அறிவேனா ? அப்பவே பேசி, அப்போதே. மறந்தும் விட்டேன். இதைப்போய் பெரிய இஷியூ ஆக்கிக்கொண்டு

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    அப்பாக்கள் மந்திரிகள் அவா பிள்ளைகள் எல்லாமே பிராடுகள் 2000 ரூபாய் நோட்டுகள் பல்லாயிரம் கோடீலெவன்ச்சுருந்த eps பிள்ளை கேஸ் என்னாச்சு முக்கியாச்சா ஓபிஸ் என்னஒளுங்கா இந்த ரெட்னு கொள்ளைக்கூட்டம் நெறஞ்ச ரெண்டுகாலகமும் ஒளிஞ்சால்தான் தமிழ்நாடு செழிக்கும் மக்களுக்கோ காசுதான் எவனோ தந்தாள் வாங்கிண்டுபோயி கொட்டுவாங்க டாஸ்மாக்கிலே ஒரேவருவாய் தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக்கிலேத்துமட்டும்தானே செயலே படாமல் எல்லோருமே குர்ஸிலேயேதான் கண்ணா இருக்கானுக சொல்லி அலுத்துப்போச்சுங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement