Advertisement

அக்கம் பக்கம்

தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஷா நவாஸ் உசேன், மீனாட்சி லேகி உள்ளிட்ட, பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் மீது, டில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

முந்தைய, காங்., ஆட்சியின்போது, மத்திய அரசு தொடர்பான நிகழ்ச்சி மற்றும் விழாக்களில், பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த பிரச்னை இருக்காது' என, பா.ஜ.,வினர் கூறி வந்தனர். ஆனால், 'பா.ஜ., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டு ஆகியும், நிலைமை இன்னும் மாறவில்லை' என, டில்லி பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

'ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் பற்றி கேட்பதற்கு, போனில் தொடர்பு கொண்டால், ஷா நவாஸ் உசேன் உள்ளிட்ட செய்தி தொடர்பாளர்கள், போனை எடுப்பது இல்லை' என, புலம்பினர்.இதுபோல், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்தால், தங்கள் மொபைல் போன்கள் செயல்படுவது இல்லை என, ஷா நவாஸ் உசேனிடம், சரமாரி புகார் செய்தனர்.

ஒரே நேரத்தில் பலர் இந்த கேள்வியை கேட்டதால், திணறிப் போனார், ஷா நவாஸ். ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்திய அவர், 'இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தலைமை அலுவலகத்தில், யாருடைய மொபைல் போனும் செயல்படுவது இல்லை. 'டவர்' பிரச்னை உள்ளது' என்றார்.

அவரது சமாதானத்தை ஏற்ற பத்திரிகையாளர்கள், 'முதலில், அந்த டவர் பிரச்னையை சரி செய்யுங்கள்' என, கண்டிப்பான குரலில் தெரிவித்தனர்.ஷா நவாஸ் உசேனோ, 'தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளுக்கு எல்லாம், நம்மை போட்டு வறுக்கின்றனரே...' என, புலம்புகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement