Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்க இப்படி பேச ஆரம்பிச்சா தான், எல்லாம் சரியானபடி நடக்கும்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி:

எதிரிகள் பலர், திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து வருகின்றனர். அதைப் பாதுகாக்கும் கடமை, ம.தி.மு.க.,வுக்கு உள்ளது. ஆர்.கே.நகரில், மருதுகணேஷ் வெற்றி பெறுவதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஆளுங்கட்சி வெற்றி பெறுவதற்காக எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை, மக்கள் உறுதி செய்வர்.


குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் பேட்டி:


நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், அதிக எண்ணிக்கையில், காலிப் பணியிடங்கள் இருப்பதால் தான், வழக்குகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன; நீதிபதிகளுக்கான பணிச்சுமையும் அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் பயன்படுத்த முடியுமா என்பது, மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விரைந்து, அதேசமயம், சரியான நீதி வழங்குவதிலேயே, நீதித்துறையின் மேன்மை அடங்கி
இருக்கிறது.


'கவலைப்படாதீங்க... உங்க கூட்டணியில, 'பலம்' வாய்ந்த வைகோ இருக்காரு... தி.மு.க.,வுக்கு, 'யோகம்' தான்...' எனக் கூறத் தோன்றும் வகையில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற கட்சிகள், ஒரே அணியில் இணைய வேண்டியது, காலத்தின் கட்டாயம். அந்தத் தொகுதியில், நடிகர் விஷால் போட்டியிடுவதால், தி.மு.க., வேட்பாளரின் வெற்றி, எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், வட மாவட்டங்களை, 'சாகர்' என்ற புதிய புயல் தாக்கக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மீண்டும் புயல் தாக்கினால், அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவது, மிகவும் கடினம். எனவே, புயல் தாக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, கூடுதல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை முன்கூட்டியே அனுப்பி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


'உங்க கட்சி ஏன் ஒதுங்கிச்சு... அதன் சார்பா, உங்களை ஏன் நிற்க வைக்கலேன்னு பல சந்தேகங்கள் எழுகிறது மேடம்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அகில இந்திய, காங்., செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி:
ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தேன். வாழ்த்திற்கும், ஆதரவிற்கும் வித்தியாசம் உள்ளது; விஷால் என் நண்பர் என்பதால் வாழ்த்தினேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; விஷாலும் வரலாம். அவரும், இந்நாட்டின் குடிமகன் தான்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement