Advertisement

இது உங்கள் இடம்

தமிழகத்தையே ஒரு நாள் அடகு வைப்பர்!

சுப்பு.லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்கரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: விதைக்கும் போது துாங்கி விட்டு, அறுவடையின் போது அரிவாள் எடுத்து செல்வதை போன்றுள்ளது, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாகம்!
தற்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களையும், பேருந்துகளையும், 2,455 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து, நிர்வாகம் நடப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது, அரசுக்கு
அவமானம்!

ஆனால், தமிழகத்தை ஆண்ட, தி.மு.க.,வும், ஆளும், அ.தி.மு.க.,வும் குறை கூறி, அறிக்கை போர் நடத்துகின்றன; அவர்கள் களஞ்சியங்கள் தான் நிரம்புகின்றன. தினமும், இரண்டு கோடி மக்கள் பயணம் செய்யும் போது, எப்படி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு வருகிறது... அதை சிந்தித்து பார்க்க வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஓட்டை உடைசல் பஸ்கள் தான் இயங்குகின்றன. பழுதடைந்த பஸ்களுக்கு, போலி உதிரி பாகங்கள் பொருத்தப்படுகின்றன.டிரைவரும், கண்டக்டரும் கஷ்டப்பட்டு எட்டு மணி நேரம் பணி புரிந்து, கலெக் ஷன் ஈட்டுகின்றனர். அப்படி பார்த்தால், மொத்தமுள்ள எட்டு கோட்டங்களிலும், வருமானம் கொட்டோ கொட்டு என, கொட்ட வேண்டும். ஆனால், அனைத்து போக்குவரத்து
கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர்.


ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப் பலன்கள் தர பணம் கிடையாது. கப்பலே கடலில் மூழ்குவது போல், பணிமனைகளும், பேருந்துகளும் அடகு வைக்கப்பட்டு, தற்போது ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. கோவை பணிமனை, 1,466 கோடி ரூபாய்க்கும், சென்னை பணிமனை, 580 கோடி ரூபாய்க்கும், மதுரை கோட்ட பணிமனை, 363 கோடி ரூபாய்க்கும் அடகு வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல; ஏனைய மாவட்ட கோட்ட பணிமனைகளும், பஸ்களும் விரைவில் அடகு வைக்கப்படலாம். தமிழகத்தில், பொது நிறுவனங்கள் ஒவ்வொன்றாக அடகு வைக்கப்படும். இறுதியில் தமிழகத்தையே அடகு வைக்க வேண்டிய நிலை வரும். அன்று, கோவணத்துடன் தமிழன் நடுரோட்டில் நிற்பான்!


வழக்கு போட்டுதண்டிக்கணும்!
மருத்துவரும், முன்னாள், எம்.பி.,யுமான, ஏ.என்.கலாநிதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், விசிறி என்ற படத்தின் இசைத் தட்டு விழாவில், இயக்குனர், சந்திரசேகர் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது.
'இங்குள்ள கோவில்களை விட்டு விட்டு, திருப்பதி உண்டியலில் பணம் போடுவது லஞ்சம். படிக்காமல் உண்டியலில் காசு போட்டால் பாஸ் கிடைக்குமா?' என, பேசிஉள்ளார்.
படிக்காத மேதை காமராஜர், குழந்தைகளுக்கு சத்துணவு தந்தார்; பள்ளிக் கட்டடங்களை நிறுவினார்; தொழில் கட்டமைப்புக்கு முன்னோடியாக, தமிழகத்தை முன்னிறுத்தினார்!
உங்கள் மகன், ஜோசப் விஜய் தெலுங்கில், மெர்சல் படத்தை வெளியிட்டு, ஆந்திர மக்களின் பணத்தை சுரண்டியது லஞ்சம் இல்லையா...தமிழர்களும், தெலுங்கர்களும் சகோதரர்களாக வாழும், தமிழகத்தில் இனக் கலவரத்தை துாண்டுவதாக பேசுவதா... இரு மாநிலங்களும் நல்ல உறவில் இருப்பதை பிரிக்க நினைக்கிறீர்களே!
ஆந்திர அரசு, பரந்த மனப்பான்மையோடு சென்னைக்கு, கிருஷ்ணா நதி நீரை தருகிறது. திருப்பதி உண்டியலில் பணம் போடுவது லஞ்சம் எனக் குறிப்பிடலாமா, மிஸ்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனே!சபரிமலை செல்வதும், அங்கு காணிக்கை செலுத்துவதும்
லஞ்சம் என, நீங்கள் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
'இரு மொழி பேசுவோர் இடையே, கலகம் மூட்டி, சட்டம் -ஒழுங்கை அழிக்க முயற்சி செய்கிறார்' என, அவர் மீது வழக்கை போடலாம். ஹிந்து மத மக்கள், 'திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும்' என்ற நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது போன்ற குற்றத்திற்காக, அவர் மீது கிரிமினல் வழக்கு கூட பதிவு செய்து, இது போன்ற பேச்சுக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மெர்சல் படத்தின் வெற்றியால், இவர்கள் இது போன்று பேசுவது, கண்டிக்கத்தக்கது!

காப்பீடு திட்டத்தால்யாருக்கு லாபம்!
எஸ்.ராமு, ஆசிரியர், ஆத்துார், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுக்கென மாதந்தோறும், 180 ரூபாய் வீதம் ஊதியத்தில் பிடித்தம்
செய்யப்படுகிறது.திருமணம் ஆகாதோர் என்றால், அவரின் பெற்றோரையும், மருத்துவக் காப்பீட்டு வளையத்திற்குள் கொண்டு வந்து விடலாம். திருமணம் ஆகிவிட்டால், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும். பெற்றோர், 'கழற்றி' விடப்படுகின்றனர். அரசு பணியாளர்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் தான், மருத்துவக் காப்பீட்டின் பயனைப்
பெறுகின்றனர்.
பல லட்சம் பேர், பெயரளவுக்கு மட்டுமே, 'பிரீமியம்' தொகை கட்டி வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்து கொள்வோர், போராடி, வாக்குவாதம் செய்த பின், செலவு தொகையை, இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக் கொள்கிறது.
'அறுவை சிகிச்சை, காப்பீட்டு திட்டத்திற்குள் வராது' என, சாக்குப் போக்கு சொல்லியும், பலர் தட்டிக் கழிக்கப்படுகின்றனர். பல்வேறு கால கட்டங்களில், கட்டணம் செலுத்தியே, என் பெற்றோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
ஆண்டுக்கு எத்தனை கோடி வசூலாகிறது... காப்பீட்டு நிறுவனம், எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை செலவு செய்தது என்பதை, தெரிவிக்க வேண்டும். திருமணம் ஆன அரசு ஊழியர், ஆசிரியர்கள், இதர அரசு பணியாளர்களின் பெற்றோருக்கு, மருத்துவக் காப்பீட்டுச் சலுகை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'பெற்றோரை பராமரித்து, மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்' எனச் சொல்வதை விட்டு விட்டு, 'பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு கிடையாது' என, அரசு சொல்வது ஏமாற்றத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது.
பண பலன் கிடைக்க, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
போராடும் ஆசிரியர் சங்கங்கள், அரசிடம் பேசியோ அல்லது நீதிமன்றத்தை நாடியோ, இதற்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும். என் போன்றோரின் வலியைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

    திரு.டாக்டர் கலாநிதி மாதிரி எம்பீக்களெல்லாம் காணாமல் போனது நமது துர்பாக்கியமே. என்ன தெளிவாக மரியாதையுடன் எழுதுகிறார். சினிமாக்காரனுக்கு அடிவருடாமல் குற்றம் குற்றமேயென்று பதிவு செய்தமைக்கு பல கோடி நன்றிகள். அப்பா, கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது,தமிழ் கூறும் நல்லுலகம் பிழைக்கும் என்று.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    விஜய் ஒரு காலத்தில் ஆந்திரத்தின் மகேஷ் பாபு நடித்த எல்லா படங்களையும் காப்பி அடித்து தான் இந்த இடத்திற்கு வரமுடிந்தது, அதற்காக அந்த மகேஷ் பாபுவிற்கு நன்றியாவது சொல்ல முடிந்ததா சான்றசேகர் ?

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement