Advertisement

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்...


திருவண்ணாமலை என்றாலே கார்த்திகை தீபமும் கிரிவலமும்தான் நினைவிற்குவரும்,தீபம் பார்த்துவிட்டு கிரிவலம் வரும் கூட்டத்தை பார்த்தால் மொத்த தமிழகமே திரண்டு வந்து விட்டதோ எனும்படி மலைப்பாதையை மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு சுற்றி கிரிவலம் வருகின்றனர்.மலையில் தீபம் ஏற்றும் போது கோவில் கோபுரங்களில் விளக்குகள் எரிவதும் அப்போது கோவில் சார்பாக வான வேடிக்கை நடத்துவம் வழக்கமான ஒன்று அந்த வானவேடிக்கையின் பின்னனியில் கோபுரங்களை இந்த வருடம் படம் எடுக்கலாம் என எண்ணி மலை மீது கேமிரா ட்ரைபாட்டுடன் காத்திருந்தேன் எல்லாம் நல்லபடியாக நடந்தது ஆனால் வானவேடிக்கை மட்டும் நடக்கவில்லை ஏதாவது சிக்கலா? அல்லது சிக்கன நடவடிக்கை என்பது இனிமேல்தான் எரியும்,எப்படியோ எனக்கு ஒரு நல்ல படம் மிஸ்சிங்.


சரி கிரிவலப்பாதையில் பயணிப்போதும் படங்கள் கிடைக்கும் என தேடுதலை அந்தப்பக்கம் தொடர்ந்தேன்.பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள் என்பதை அவர்கள் பேசிச்செல்லும் மொழியில் இருந்து அறிய முடிந்தது.

கிரிவலம் செல்லும் போது வாழைப்பூ வடை சாப்பிட்டால் நல்லது என்று யாரேனும் சொல்லிவிட்டார்களா? தெரியவில்லை வழி நெடுகிலும் வாழைப்பூ வடை கிடைக்கும் என விளம்பர தட்டிகள் வரவேற்கின்றன.
மற்றபடி ஒரு ஐஸ்கீரீம் வாங்கினால் ஒரு ஐஸ்கீரிம் இலவசம்,லெமன் சோடா,சுக்கு காபி என்று சாப்பிட பருக என ஒரு அடிக்கு ஒரு கடை இருக்கிறது கூட்டமும் மொய்க்கிறது.

அஷ்ட லிங்கத்துடன் இப்போது அநேக லிங்கங்கள் வழியெங்கும் இடம் பெற்றுள்ளன உங்கள் திருஷ்டி போக்க உள்ளே வாருங்கள் காணிகை போட்டு செல்லுங்கள் என விடாமல் மைக் அலறுகிறது.
நாட்டில் இத்தனை சாதுக்கள் இத்தனை பிச்சைக்காரர்கள் இருப்பார்களா என்று மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் அமர்ந்துள்ளனர்.இவர்களுக்கு பிச்சை போட்டு சோம்பேறி ஆக்கியது போதாது என்று காட்டில் மரத்திற்கு மரம் தாவி சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த குரங்குகளுக்கு பழம் பிஸ்கட் போட்டு அதையும் சோம்பேறியாக்கிவிட்டனர்,இப்போது சோம்பேறியாகி ரோட்டில் உட்கார்ந்து நமக்கும் யாராவது ஏதாவது தருவார்களா என உட்கார்ந்து இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் குதிரை சந்தை மாட்டுச்சந்தையும் நடக்கிறது குதிரை வாங்க வருபவர்கள் கிரிவலப்பாதையில்தான் ட்ரியோ ட்ரியோ என்று டிரையல் பார்க்கிறார்கள்,செருப்பில்லாமல் நடக்கும் பக்தர்கள் பயந்து போய் வழிவிடுகின்றனர்.
அன்னதானம் நடக்கிறது அண்ணாமலையார் அர்த்நாரிக் கோலத்தில் எழுந்தருளுவதை முன்னிட்டு திருநங்கைகளை கௌரவப்படுத்தும் விழாவும் நடக்கிறது,எங்கும் அன்னதானம் நடக்கிறது.

இவ்வளவு கூட்டத்தையும் எப்படித்தான் சமாறிக்கிறார்களோ என்று கேட்டால் எல்லாவற்றையும் அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என்கின்றனர், டன் கணக்கில் சேரும் குப்பைகளையும், சுற்றுச்சுழல் கேடையும் கூட அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடாமல் நிர்வாகம் அதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும்...
எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    சுத்தம் இல்லை என்றால் பக்தி இல்லையா? ஆனால் இங்க பக்தி இருந்தால் சுத்தம் தேவை இல்லையாம்? அரோகரா?அரோகரா?

  • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

    சுற்றுப்புறத்தை பாதுகாப்பதே சிவ தொண்டு ஆகும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement