Advertisement

கஞ்சா வியாபாரியுடன் இன்ஸ்பெக்டர் கூட்டணி!

''எதிர்க்கட்சியில இருந்தும், என்னமா சம்பாதிக்காவ தெரியுமா வே...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''தி.மு.க.,வினரை சொல்றீங்களா...'' என்றார் அந்தோணிசாமி.''ஆமாம்... திருச்சி மாநகராட்சியில, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதுார் பகுதி கவுன்சிலர்களா இருந்தவங்க கவிதா, முத்துச்செல்வம்... கவிதா கணவர் செல்வமும், முத்துவும், 'மாஜி' அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான நேருவுக்கு நெருக்கமானவங்க வே...''இவங்க ரெண்டு பேரும், நெடுஞ்சாலைத் துறை இடத்துல, பொதுமக்கள் வசதிக்காக, மார்க்கெட் வைக்குறதா சொல்லி, எடமலைப்பட்டிபுதுார் மேம்பாலத்தை ஒட்டி, வாரச் சந்தைக்கு ஏற்பாடு செஞ்சாவ...''இதை, எம்.எல்.ஏ., நேரு கையால திறந்தும் வச்சுட்டாவ... இப்ப, அங்க கடை போடுறவங்களிடம், தலைக்கு, 150 ரூபாய்னு, ஆள் போட்டு வசூல் பண்ணுதாவ... வசூல் பண்றவங்க, ௫௦ ரூபாயை எடுத்துட்டு, ௧௦௦ ரூபாயை, 'மாஜி' கவுன்சிலர்களிடம் குடுத்துடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துல இருக்கிற, ஒரு ஊராட்சி செயலர், அடாவடி ஆசாமியா இருக்காரு பா...'' என்ற அன்வர் பாயே தொடர்ந்தார்...''கட்டட அப்ரூவல், குடிநீர் இணைப்புக்கு வசூல்னு, இவர் மேல ஏகப்பட்ட புகார்கள் இருக்கு... இவரை பத்தி, கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அளவுக்கு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை பா...''சமீபத்துல, பொதுமக்கள், 'எங்க பகுதியில கொசு மருந்து அடிங்க'ன்னு சொன்னதுக்கு, 'டெங்கு வந்த பிறகு சொல்லுங்க... அப்புறமா அடிக்குறேன்'னு திமிரா பேசியிருக்காரு பா...''அதுவும் இல்லாம, 'நீங்க எங்க புகார் குடுத்தாலும், என்னை அசைக்க முடியாது'ன்னு தெனாவெட்டா பேசுறாரு...'' என, முடித்தார் அன்வர்பாய்.ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, 'மாக்கினாம்பட்டி சுந்தரமா... சாயந்தரம் கூப்பிடுதேன்...'' என, 'கட்' செய்தார்.அடுத்து வாயை திறந்த அந்தோணிசாமி, ''தென் சென்னையில ஒருத்தர், ரியல் எஸ்டேட், கஞ்சா வியாபாரம் பார்த்துட்டு இருக்காருங்க... தன்னை மத்திய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்னு வேற சொல்லிக்கிறார்... இவருக்கு ஆதரவா, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்காருங்க...''இந்த இருவர் கூட்டணி, பெரிய அளவுல நிலங்களை வளைச்சு போடுறவங்க, கல்லுாரிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்றவங்களுக்கு, பாதுகாப்பு அரணா இருக்குங்க...''இதுல கிடைச்ச பணத்துல, புழல் பக்கத்துல, இன்ஸ்பெக்டர் வீடு கட்டிட்டு இருக்காரு... இது எல்லாம், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், மேலிட செல்வாக்கு இருக்கிறதால, இன்ஸ்பெக்டர் மேல நடவடிக்கை எடுக்க முடியாம தவிக்குறாங்க...'' என, ஒரே மூச்சில் முடித்தார் அந்தோணிசாமி.''ராஜ்குமாருக்கும், சிவகுமாருக்கும் பத்திரிகை குடுத்தாச்சா பா...'' என, எதிரில் வந்த நண்பரிடம் அன்வர்பாய் விசாரிக்க, அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement