Advertisement

கமல், ரஜினி: -பா.ஜ., நிலை என்ன?

தமிழக அரசியலில், சில நடிகர்கள், எம்.ஜி.ஆர்., போல முதல்வராக முயற்சிக்கின்றனர். அன்றாட பிரச்னைகளை, கமல் டுவிட்டரில் அலச, 'வருவேன்; ஆனா எப்ப வருவேன்னு தெரியாது' என்கிறார், ரஜினி. இவர்கள் குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேசி வருகின்றனர். ஆனால், டில்லி, பா.ஜ., தலைமையோ, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.இது குறித்து, ஒரு சீனியர், பா.ஜ., தலைவர் கூறியதாவது:தமிழக அரசியலில், நாங்கள் ஏற்கனவே பாடம் கற்றுள்ளோம். அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர் பிரிந்த போது, 'அவருக்கு நிறைய, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர்; அவரை ஆதரிக்க வேண்டும்' என, அவரது அணியில் இருந்த ஒருவர், எங்களிடம் கூறினார்.
நாங்களும் அவரை நம்பினோம். கடைசியில் என்ன ஆயிற்று... பன்னீர் விவகாரத்தில், எங்களுக்கு சரியான அடி; எனவே, அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம் என, முடிவெடுத்து உள்ளோம்.கமல், இடதுசாரி எண்ணம் உடையவர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ஆனால், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது தான் முக்கியம். ரஜினியை பொறுத்தவரை, மோடி அவரை சந்தித்துள்ளார். ரஜினி ஓர் ஆன்மிகவாதி; முதலில், அவர் அரசியலுக்கு வரட்டும்; கட்சி துவங்கட்டும்; பின் பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார் . 'மத்திய அமைச்சர், நிதின் கட்கரியும், ரஜினியும் நெருக்கம்; இருவருமே மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். பல விஷயங்களில், ரஜினிக்கு, கட்கரி உதவி உள்ளார்' என, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.


வழக்கறிஞர்களுக்கு ஓஹோ!

அ.தி.மு.க., கோஷ்டி தகராறில், அதிக லாபம் அடைந்து வருபவர்கள், டில்லி சீனியர் வழக்கறிஞர்கள் தான். தினகரன் ஒரு பக்கம் வழக்கு போட்டால், அதற்கு எதிராக, பழனிசாமி - பன்னீர் கோஷ்டி, மற்றொரு வழக்கு போடுகிறது. இரு தரப்பிற்கும் கோர்ட்டில் வாதாட, பல சீனியர் வழக்கறிஞர்கள்; இவர்களுக்கு உதவ, ஜூனியர் வழக்கறிஞர்கள் என,
பட்டியல் நீள்கிறது.தேர்தல் கமிஷனில் துவங்கிய வழக்கு, உச்ச நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்றம் என, அலை பாய்கிறது. போதாக்குறைக்கு, ஒருசில வழக்குகளில், தி.மு.க.,வும் சேர்ந்து, அரசுக்கு எதிராக வாதாட, மூத்த வழக்கறிஞர்களை நியமிக்கிறது.தமிழக முதல்வர் மற்றும் பன்னீர் அணிகளுக்கு, முன்னாள் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோகத்கி, சீனியர் வழக்கறிஞர்கள், சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் குரு கிருஷ்ணகுமார் என, பெரிய பட்டாளமே களத்தில் இறங்கி உள்ளது. தினகரன் தரப்பு, இதற்கு கொஞ்சமும் சளைக்காமல், காங்., - எம்.பி.,க்களான, கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வியை களமிறக்கி உள்ளது.
'அதிரடியாக வாதாடுபவர்' எனச் சொல்லப்படுபவர், முகுல் ரோகத்கி. வாதாடும் போது, தன் குரலை உயர்த்தி, எதிராளிகளை நடுங்க வைப்பதுடன், நீதிபதிகளையும் தன் பக்கம் இழுத்து விடுவார். இவருக்கு இணையாக, கபில் சிபலும் உச்ச குரலில் வாதாடுவார். இவர்களுக்கு இடையே சிக்கி திண்டாடுபவர்கள், நீதிபதிகள் தான்.
முகுல், சிபல் ஆகியோர் வாங்கும் கட்டணம் அதிகம் என்பது, அனைவருக்கும் தெரியும். இப்படி, அ.தி.மு.க., கோஷ்டிகள் லட்சக்கணக்கில் வழக்குகளுக்கு பணம் செலவிடுகின்றன. வழக்கு முடிவதற்குள், இதற்கான செலவு, சில கோடிகளை தாண்டி விடும் என, சொல்லப்படுகிறது.
'பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயார்; ஆனால், ரொக்கமாக தான் தருவோம்' என, சில வழக்கறிஞர்களிடம், அ.தி.மு.க., கோஷ்டிகள், 'கண்டிஷன்' போட்டு உள்ளதாம்.

நெகிழ்ந்து போன கவர்னர்!

அமெரிக்க அதிபர் மகள் பங்கேற்கும் விழா, மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா ஆகியவற்றுக்காக, சமீபத்தில், ஐதராபாத் சென்றிருந்தார், பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இறங்கிய மோடியை வரவேற்றார், கவர்னர், நரசிம்மன். 'என் காரிலேயே வாருங்கள்' என, அவரை தன் பக்கத்திலேயே உட்கார வைத்துள்ளார், மோடி.கார் கிளம்பியதும், 'உங்கள் தாயார் காலமானார் என, கேள்விப்பட்டேன்; என் ஆழ்ந்த அனுதாபங்கள். 94 வயதானாலும், அம்மா அம்மா தானே; அவர்களுக்கு யார் ஈடாக முடியும்' என, மோடி கூறினார். இதை கேட்ட நரசிம்மன் நெகிழ்ந்து போனார். நரசிம்மன், அவர் தாயார் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் என்பதை, மோடி தெரிந்து வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளார்.
மற்றொரு சுவாரசியமான சம்பவமும், ஐதராபாதில் நடந்துள்ளது. இங்கு, மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்து, ரயிலில் பயணம் செய்தார், மோடி. 'பெண்கள் தான் இங்கு டிரைவராக உள்ளனர்; இன்னும் சற்று நேரம், இங்கிருந்து இதையெல்லாம் பார்க்க வேண்டும்' என, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், மோடியிடம் கூறினார்.
உடனே மோடி, 'குஜராத் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடக்கிறது; நான் இங்கிருக்கும் நேரத்தை, அங்கு பிரசாரத்தில் செலவிட்டால், எங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும்' எனக் கூறி, பிரசாரத்தில் பங்கேற்க குஜராத் சென்றார், மோடி.


பிரச்னையில் சிக்கிய ராகுல்!

குஜராத் தேர்தல் பிரசாரத்தில், அதிரடியாக இறங்கி உள்ளார் ராகுல். மோடியை திட்டுகிறார்; மோடியும், காங்கிரசை கிண்டலடித்து பிரசாரம் செய்கிறார். இதற்கிடையே, சோம்நாத் கோவிலுக்கு போன ராகுல், அங்கு பிரச்னையில் சிக்கி விட்டார். ராகுலும், அகமது படேலும், சோம்நாத் கோவிலுக்குச் சென்றனர். அங்குள்ள பதிவேட்டில், 'நான் ஹிந்து அல்ல' என, அகமது படேல் குறிப்பிட்டார்; ராகுலும், 'நான் ஹிந்து அல்ல' என, எழுதி விட்டார்.
இதை, பா.ஜ., பெரும் பிரச்னையாக்கி விட்டது. 'பூணுால் போட்ட பிராமணர் ராகுல்' எனக் கூறியதுடன், ராகுல், சட்டைக்கு மேலே பூணுால் போட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு, இந்த பிரச்னையை சமாளிக்கிறது, காங்கிரஸ்.
குஜராத்தில் உள்ள, துவாராகா கோவிலுக்குள் போகும் போது, ஹிந்துக்கள் அல்லாதோர், அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்; ஆனால், சோம்நாத் கோவிலில் அந்த கட்டாயம் இல்லை. 'இதை, ஏன் ராகுலோடு உடன் வந்தோர் தெரிந்து கொள்ளவில்லை' என, கேள்வி எழுப்புகின்றனர், குஜராத் காங்கிரசார்.
'குஜராத் தேர்தல் விவகாரங்களை கண்காணிப்பது, டில்லி மற்றும் மும்பை, காங்., தலைவர்கள் தானாம்; அதனால் தான், உள்ளூர் விவகாரங்கள், அவர்களுக்கு தெரியவில்லை. மீடியா விவகாரங்களை கவனிக்கிற, ஒரு டில்லி, காங்., பிரமுகர் தான், இப்படி தவறுதலாக சோம்நாத் கோவில் பதிவேட்டில் கையெழுத்திட காரணம்' என்கின்றனர், காங்., தலைவர்கள்.
இதனால் கடுப்பாகி உள்ள, குஜராத், காங்., தலைவர்கள், 'எங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க, ம.பி.,யைச் சேர்ந்த, தமிழர் மீனாட்சி நடராஜனை, ராகுல் நியமித்தார்; இப்படி இருந்தால், கட்சி எப்படி உருப்படும்' என, நொந்து போய் சொல்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement