Advertisement

தடைதாண்டும் தன்னம்பிக்கையாளர்கள் : டிச.3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

கடும்பாறையையும் உடைத்து அதன் இடுக்குக்குள்ளிருந்து வெளிக்கிளம்பித் துளிர்விடும் சிறுசெடிபோல் உடலால் ஏற்படும் சவால்களைத் துணிச்சலுடன் உடைத்து எதிர்கொண்டு சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளிகளைப் போற்றிப்பாராட்டும் நாள் உலகமாற்றுத்திறனாளிகள் தினம். மலைகுலைந்தாலும் நிலை குலையாத மனஉறுதி மிக்கவர்கள் மாற்றுத்திறனாளிகள்! மறுபதிப்பு செய்ய முடியா ஒருபதிப்பாகத் திகழும் இந்த வாழ்வின் பாதிப்பில் அவர்கள் நிறுத்தப்பட்டாலும் வருத்தப்படாமல் எல்லோரையும்விட ஒருபடி மேலாய்மகத்தான சாதனைகளை மிக நேர்த்தியாய் செய்யத்தான் செய்யும் தன்னம்பிக்கையாளர்கள்தான் மாற்றுத்திறனாளிகள்.
சாதிக்கப் பிறந்தவர்கள் கடந்துபோன ஊர்களில் நடந்து போன நிகழ்வுகளைப் போல்
ஏதோவொரு சொல்லோ ஏதோவொரு பார்வையோ இவர்களை பாதிக்கத்தான் செய்கின்றன.
ஆனாலும் சொற்களால் சமூகம் நடத்தும் வன்முறைகளையும் அவர்கள் நன்முறையாய், உள்வாங்கி அதை ஒற்றைப் புன்னகையால் இயல்பாய் கடந்து சாதனை வானில் சிறகடிக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் சாதனைகள் மற்றவர்களுக்குத் துாண்டுகோலாய் அமைகின்றன. சங்கடப்படுவதற்கா பிறந்தோம்? சாதிக்க அல்லவா பிறந்தோம் என்று உற்சாகமாய் நம்பிக்கை நாட்களைக் கடக்கிறார்களே! ஊற்றெடுக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டாமா? தன் வாழ்வு தன்னைச் சவால்கள் சூழ்ந்தபோதும் சிரிப்பைச் சிந்தும் உதடுகள், எப்படி வெறுப்பைச் சிந்தாமல் தன் இருப்பை மிக இயல்பாய் காட்டிக்கொண்டே இருக்
கின்றனவே! அனைத்து உறுப்புகளும் வலுவாக இருந்தும் மனவலிமையில்லாமல் கவலைத்
தாயின் சவலைப் பிள்ளைகளாய் பல மனிதர்கள் வாழும்போது, சவால் பிள்ளைகளாய் எல்லாவற்றையும் மனஉறுதியோடு எதிர்கொள்ளும் மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் மகத்தானவர்கள்தானே!

மகத்தான மாற்றுத்திறனாளிகள்

மாரியப்பன்: துயரம் தாண்ட முடியாத மனிதர்களுக்கு மத்தியில் பாரா ஒலிம்பிக் போட்டியில்
உயரம் தாண்டி உலகசாதனை படைத்த தமிழகத்தைச் சார்ந்த மாரியப்பன் மாற்றுத்திறனாளி
களிடையே போற்றும் திறன்மிக்க ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்தியது சாதாரண நிகழ்வா?
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அருணிமா சின்கா: உத்தரப் பிரதேச மாநிலத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அருணிமா சின்கா ரயில்விபத்தில் துண்டான தன் வலதுகாலின் வலியைச்
சற்றும் பொருட்படுத்தாமல் இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாரே! எது அவரைச் சிகரமேற்றியது? சமூகசேவகர் பாலம் கல்யாணசுந்தரம்: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லுாரி நுாலகராய் பணியாற்றிய சமூக சேவகர் பாலம் பா.கல்யாண சுந்தரம் பிறவியிலிருந்தே குரல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆனால் எந்தவிதத் தாழ்வு மனப்பான்மையுமின்றி திடமானமனத்தோடு பள்ளி நாட்களிலிருந்தே சமூகசேவையில் ஈடுபட்டு புத்தாயிரத்தின் மிகச்சிறந்த சாதனையாளர் என்ற பன்னாட்டு விருதைப் பெற்றாரே! எழுபது வயதைக்
கடந்தும் இன்றும் சென்னையில் பாலம் எனும் சமூகசேவை இயக்கத்தை நடத்திவருகிறாரே!

எப்படி முடிகிறது இவரால்?

வானில் பறந்த ஜெசிக்கா காக்ஸ்: அமெரிக்க நாட்டின் அரிசோனா நகரில் பிறந்தபோதே கைகள் இல்லாத குழந்தையாகப் பிறந்த ஜெசிக்கா காக்ஸ் வானில் பறக்க ஆசைப்பட்டார். அவர் இளமைக் காலத்தில் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் 2008 ஆண்டு விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பத்தாயிரம் அடி உயரம் பறக்கும் இலகு ரக விமானத்தை மிகத்திறனோடு ஓட்டிச் சரித்திரத்தில் இடம் பெற்றாரே! தன்னம்பிக்கையோடு பேசிக் கேட்போரை எழுச்சியடையச் செய்யும் ஜெசிக்கா காக்ஸ் மாற்றுத்திறனாளியாய் விமானம் ஓட்டியவர் என்ற சிறப்பின் மூலம் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றாரே! இந்தச் சாதனை வித்தின் ஆணிவேர் எது?நம்பிக்கையோடு நடந்த தடகளவீரர் டெர்ரி பாக்ஸ்: கனடாவைச் சார்ந்த உலகப்புகழ் பெற்ற தடகளவீரர் டெர்ரி பாக்ஸ், புற்றுநோயில் தனது வலதுகாலை இழந்தார். நம்பிக்கையோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் ஆய்வுகள் நிகழ்த்துவதற்காக 1980ல் கனடா வில் நம்பிக்கை நெடுந்தொலைவு நிகழ்வில் ஒற்றைக் காலோடு 143 நாட்கள் ஓடினார். காலைப் பாதித்த புற்றுநோய் அவரது நுரையீரல்வரை பரவி எலும்புப் புற்றுநோயால் 143 வது நாளில் 22 வது வயதில் இறப்பைச் சந்தித்தார். ஒற்றைக்
காலில் அவர் நிகழ்த்திய சாதனையின் விளைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் ஆய்வுகளுக்காக அதன்பின் அறுபதுநாடுகள் பங்கேற்ற நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு 500 மில்லியன் கனடிய டாலர் நிதி திரட்டப்பட்டது.
எது அவரை ஓட வைத்தது? உறுப்பு செயலிழப்பது கொடுமை யன்று உறுதியிழப்பதே கொடுமை! ஓடும்வரை ஓட்டிக்கொண்டே தானிருக்கும் வாழ்க்கை!பாதைவகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி படைத்தவரால் எத் தடைக்கும் தடைபோட்டு அதையே திறனாக மடைமாற்ற முடியும். மாற்றுத்திறனாளிகளுக்காக நாடுமுழுக்க ஆயிரமாயிரம் அன்பகங்கள்இருக்கின்றன.

சிவசைலம் சாந்தி இல்லம் : திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலத்தில் சாந்தி இல்லம் எனும் செவித்திறன் இழந்தோர் மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி சிவசைலம் அவ்வை ஆசிரமம் மற்றும் திண்டுக்கல் காந்தி
கிராமப்பல்கலைக்கழக உதவி யோடு செயல்பட்டு வருகிறது. நுாற்றுக்கணக்கான செவித்திறன் இழந்த குழந்தைகளுக்குப் பயிற்சிதரும் சிறப்புப்பள்ளி அங்கே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஆய்க்குடி அமர்சேவா சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் சமூகசேவகர் மாற்று திறன் சாதனையாளர்கள் ராம
கிருஷ்ணன் சங்கரராமன் ஆகி யோரின் வழிகாட்டலில் செயல்பட்டுவரும் அமர்சேவா சங்கத்தில் நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி அங்கே சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. புதுடெல்லி இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படிப்புமையமாகவும் அமர்சேவா சங்கம் செயல்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்குக் கணினிப் பயிற்சியினை வழங்கி
வருகிறது.மாற்றுத்திறனாளிகள்

எதிர்நோக்கும் சவால்கள் : ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3ம் தேதியை உலக மாற்றுதிறனாளிகள் தினமாய் கொண்டாடினாலும் இன்னும் அவர்களுக்கான சிரமங்களை சமூகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தம் தரும் உண்மைதான்.பேருந்து நிலையங்களில் அவர்
களுக்கான சிறப்பறைகள் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டாலும் உயரமான படிக்கட்டுகளை உடைய பேருந்துகளில் அவர்களால் ஏறமுடியாத அவலநிலைதான் இன்னும் உள்ளது.
பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் இன்னும் அவர்கள் எளிமையாகப் பயணிக்கும் சரிவுப்பாதைகள் அதிகமாய் ஏற்படுத்தப்படவில்லை.விழித்திறன் இழந்தோர் தேர்வு எழுத உதவியாளர் தேவை என்பதால் பல கல்வி நிறுவனங்கள் அவர்களைப் பயிலச் சேர்த்துக்கொள்வதே இல்லை.
விழித்திறன் குறைந்தோர் பயிலும் பள்ளிகள் தமிழ்நாடெங்கும் உருவாகவில்லை. அவர்களுக்கான பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட நுால்களும் தமிழில் குறைவு. இவற்றிற்கெல்லாம் தீர்வு காணவேண்டும்.

புன்னகைப் பூக்கள் : சில சாதனைகளால் அவர்கள் வியக்க வைகிறார்கள். சில நேரங்களில் உற்சாகத்தால் அவர்கள் நம்மை இயக்கவைக்கிறார்கள். எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் எல்லோரையும் விட மிகப் பெரிய சாதனைகளைச் செய்யும் மாற்றுத்திறனாளிகளைப் போற்றிப் பாராட்டுவது நம் கடமை.பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லையே! புறக்கணித்துப் புறந்தள்ளுவோரைக் கூடப் புன்னகையோடு எதிர் கொள்வது எவ்வளவு பெரிய துணிவு! “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று சொன்ன வள்ளுவரின் அருங்குறளை நினைத்துபார்த்தால் சமூகம் இவர்களைச் சங்கடப்படுத்தாது. காத்திருக்கும் சாதனைச்
செடிகள் முன் பூத்திருக்கும் மனிதப்பூக்கள் இவர்கள். நம் விரல்கள் அவர்களின் மென்மையான
இதழ்களைப் பிய்த்தெறிந்துவிடக்கூடாது. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அனுதாபத்தை அல்ல மாசுமருவற்ற அன்பைத்தான். அன்பின் மொழியில் அந்தச் சாதனையாளர்களிடம் பேசுவோம்.

பேராசிரியர் சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி, திருநெல்வேலி
99521 40275
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement