Advertisement

ராகுலை தலைவராக்க ஏன் அவசரம்?

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன், ராகுலுக்கு முடி சூட்ட, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு முறையும், 'ராகுலை தலைவராக்குவோம்' என, தேதி குறித்து, பின் தள்ளிப் போட்டு வந்த காங்கிரஸ், இப்போது, திடீரென மனம் மாறியதன் காரணம் என்ன?'ஹிமாச்சல பிரதேசம், குஜராத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு எதிராக இருந்தால், நிர்வாகிகளின் மனநிலை மாறி விடும். 'காங்கிரசை தோல்வி பாதையில் கொண்டு செல்லும் ராகுலை, தலைவராக்குவது அவசியமா; சோனியாவே தொடரட்டும்' என, பல தலைவர்களும், தொண்டர்களும் பேச துவங்கி விடுவர். அதனால் தான், தேர்தல் முடிவிற்கு முன்பாகவே, அவரைத் தலைவராக்குகிறோம்' என்கின்றனர், காங்., தலைவர்கள்.ஹிமாச்சல பிரதேசத்தில், காங்., தோல்வி நிச்சயம் என, சொல்லப்படுகிறது. அதனால் தான், ராகுல் அதிகமாக அங்கு பிரசாரம் செய்யவில்லை. 'குஜராத்தில், எப்படியாவது
ஆட்சியை பிடித்துவிட வேண்டும்' என, கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளார், ராகுல். ஆனால், 'அதுவும் கடினம் தான்' என, காங்கிரசாரே கூறுகின்றனர்.இந்த இரண்டு மாநில வெற்றி வாய்ப்பு குறித்து, பா.ஜ., எடுத்துள்ள ரகசிய சர்வே, 'பா.ஜ.,விற்கு வெற்றி நிச்சயம்' என்கிறதாம்.

யார் அந்த பிரமுகர்?


அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., நெருக்கமாக உள்ளது என பேசப்பட்டாலும், மோடி - -கருணாநிதி சந்திப்பு, சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அதிலும் ஓர், அ.தி.மு.க., பிரமுகர் மீது, பா.ஜ., தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். இந்த பிரமுகரின் திடீர் மன மாற்றம், பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.தமிழகத்தில், சசி குடும்பத்தினருக்கு எதிராக, வருமான வரித்துறை, 'ரெய்டு் நடத்தி, பல கோடி ரூபாய் ஆவணங்கள், பணம் மற்றும் நகை என கைப்பற்றியது. இந்த, 'ரெய்டு' தொடர்பாக, வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பிரமுகர், டில்லியில், பா.ஜ., முக்கிய தலைவர்களை சந்தித்து, 'சசி குடும்பத்தினருக்கு எதிராக செயல்பட வேண்டாம்' என, கேட்டார்.'ஏன் இப்படி சொல்கிறார் இவர்; அந்த பக்கத்தில் இருந்து ஏதாவது, 'வாங்கி' விட்டாரா?' என, ஒரு பா.ஜ., தலைவர், தனக்கு நெருக்கமான, தமிழக பிரமுகரிடம் கேட்டுள்ளார். மேலும், 'அந்த, அ.தி.மு.க., பிரமுகரிடம், மிகவும் கவனமாக இருங்கள்' என, எச்சரிக்கையும் செய்துள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, டில்லியில் பிரதமரை சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.,வின் சில முக்கிய பிரமுகர்களை குறிப்பிட்டு, 'அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர்; அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்' என, மோடியிடம் கூறியதாக தெரிகிறது. அப்படி, ஜெ., கூறிய நபர்களில் ஒருவர் தான், இந்த, அ.தி.மு.க., பிரமுகர் என்கிறார், பா.ஜ., புள்ளி ஒருவர்.
ஜெயிக்க போவது யாரு?
எந்தவொரு விஷயத்தையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில், அரசியல்வாதிகள் கில்லாடிகள். இதில் தற்போது சிக்கி இருப்பது, ஹிந்தி படமான, பத்மாவதி. தீபிகா படுகோனே, பத்மினியாக நடித்துள்ள இந்த படம், வட மாநிலங்களில் செல்வாக்குமிக்க, ராஜபுத்ர சமூகத்தினரை இழிவு செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.'முகலாய மன்னன், அலாவுதீன் கில்ஜியையும், ராணி பத்மாவதியையும் தரக்குறைவாக சித்தரிக்கிறது' என, ராஜஸ்தானில் உள்ள, ராஜபுத்ர இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; இதனால், இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில், இந்த சினிமாவிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது; சில மாநில, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால், மத்திய, பா.ஜ., தலைவர்கள், இது குறித்து எதுவும் பேசாமல், அமைதியாக உள்ளனர்; காரணம், ராஜபுத்ர இனத்தவரின் ஓட்டு வங்கி.இதே போல, காங்கிரசும் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளது. ராஜபுத்ர சமூகத்தினருக்கு எதிராக பேசினால், ஹிந்துக்கள் ஓட்டு அடிபடும்; கில்ஜிக்கு எதிராக பேசினால், முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்காது என்பதால், இந்த அமைதி. காங்., - எம்.பி., சசி தரூர், பத்மாவதி சினிமாவுக்கு ஆதரவாக பேசியதுடன், 'ராஜபுத்ர அரசர்கள், ஆங்கிலேயரின் அடிவருடிகள்' என்றார். உடனே, அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், காங்., - எம்.பி.,யுமான, ஜோதிராதித்ய சிந்தியா, சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.அடுத்த மாதம் நடக்க உள்ள, குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், இந்த பத்மாவதி பட விவகாரம், பா.ஜ.,வினரால் பெரிதுபடுத்தப்படுகிறது. 'இதில், ஜெயிக்கப் போவது மோடியா அல்லது அலாவுதீன் கில்ஜியா?' என, கிண்டலாக சொல்லும், பா.ஜ., தலைவர்கள், 'யார் வெற்றி பெறுவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே...' என்கின்றனர்.


தாஜ்மஹாலுக்கு, 'நோ'


தற்போது, உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலும் பிரச்னையில் சிக்கி உள்ளது. 'உ.பி., மாநிலம், ஆக்ராவில், முகலாய மன்னரால் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹால், இந்தியர்களில் ரத்தத்தில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது' என, உ.பி., - பா.ஜ., முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறிஉள்ளார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில், மறைமுகமாக ஓர் அதிரடி நடந்துள்ளது, யாருக்குமே தெரியாது. வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள், நம் நாட்டுக்கு வரும் போது, அவர்களுக்கு, இந்தியாவின் நினைவுச் சின்னமாக, தாஜ்மஹால் மாடல் ஒன்றை, ஜனாதிபதி பரிசாக கொடுப்பார். ஆனால், இப்போது தாஜ்மஹால், பரிசாக கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக, இந்திய பழங்குடியின மக்கள் செய்யும், கலைநயமிக்க பொருட்களை, நினைவு பரிசாக, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் தருகிறார்.'ஏன் இப்படி ஜனாதிபதி மாறி விட்டார்?' எனக் கேட்டால், 'இதற்கு முந்தைய ஜனாதிபதி, என்ன செய்தாரோ, அதைத் தான் இவரும் பின்பற்றுகிறார்' என்கின்றனர், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்த போதே, இந்த தாஜ்மஹால் மாற்றம் வந்துவிட்டதாம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement