Load Image
Advertisement

மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து மூன்று பேர் பலி

சோழவரம் : வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்டசாலையில், நிறைவடையாத பாலத்தின் வழியாக சென்ற கார், தலைகுப்புற கீழே விழுந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்,
உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தை சேர்ந்தவர், அய்யப்பன், 40. முன்னாள் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகையின் உறவினரான இவர், காங்கிரஸ் கட்சி பிரமுகராக உள்ளார்.
அய்யப்பன், நேற்று முன்தினம், தன் மனைவி பவித்ரா, 30, மாமனார் பழனி, 60, மாமியார் நவநீதம், 56, ஆகியோருடன், மீஞ்சூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, இன்னோவா காரில் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் இரவு, 10:30 மணிக்கு, மீஞ்சூரில் இருந்து வண்டலுார் செல்லும் வெளிவட்ட சாலை வழியாக, மணிமங்கலம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை, கதிர்வேல் என்பவர் ஓட்டினார்.
வெளிவட்ட சாலையில், சோழவரம் அடுத்த நல்லுாரில், சென்னை- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலப்பணி முடிவு பெறாமல், பாதியில் நிற்கிறது. பாலத்தில் வாகனங்கள் செல்லாமல் இருக்க, எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில், அந்த பாலத்தின் வழியாக கார் சென்ற போது, பாலம் முடிவடையாமல் பாதியில் இருப்பதை, அருகில் சென்ற போது கண்ட, ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால், கார், பாலத்தில் இருந்து, தலைகுப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பழனி, நவநீதம், பவித்ரா ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கதிர்வேல் மற்றும் அய்யப்பன் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்களும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருந்தாத அதிகாரிகள்!
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும், மேம்பால பணி, நிறைவு பெறவில்லை. பாலத்தில் வாகனங்கள் செல்லாமல் இருக்க, பாலம் துவங்கும் இடத்திலும், பாலம் கட்டுமானம் நிறைவு பெறாமல் இருக்கும் பகுதியிலும், எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை. இதனால், புதிதாக இப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு, மேம்பாலம் முழுமை பெறாமல் இருப்பது தெரியாது.
தற்போது, விபத்து நடந்து, மூவரின் உயிரை பறித்த பின், அங்கு கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், இந்த விபத்து நடந்துள்ளது.
தடுப்பு வைக்காமல், விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் தான், எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவத்தை தவிர்க்க முடியும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement