Load Image
Advertisement

அத்திக்கடவு திட்ட நிதி இருக்கு... ஆனா இல்லை! : தமிழக அரசு நிலையால் போராட்டக்குழு கவலை

திருப்பூர்; அத்திக்கடவு ---- அவிநாசி திட்டத்துக்கு, டிசம்பரில், அடிக்கல் நாட்டப்படும் என, முதல்வர் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசிடம் நிதி கோரியிருப்பதால், போராட்டக் குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, வறட்சி கிராமங்கள் பயன்பெறும் வகையிலும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு ஆதாரமாக, 72 குளங்கள், 630 குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டமான, அத்திக்கடவு- --- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 14 நாள் தொடர் உண்ணாவிரதம், கிராமங்களில் போராட்டம் என, பிரச்னை அதிகரித்ததால், அரசு ஆணை வெளியிட்டு, 2.37 கோடி ரூபாய் ஆய்வுக்காக ஒதுக்கியும், அப்போதைய முதல்வர், ஜெ., உத்தரவிட்டார். ஜெ., மறைவுக்குப் பின் முதல்வரான,
பழனிசாமி, பட்ஜெட்டில், 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 'அத்திக்கடவு திட்டம், உறுதியாக மாநில அரசு நிதி மூலமே நிறைவேற்றப்படும். டிச., மாதத்தில், அடிக்கல் நாட்டப்படும்' என, உறுதியளித்தார். ஆனால், அத்திக்கடவு திட்டத்துக்கு, அரசு நிதி ஒதுக்கிய நிலையில், திட்ட வடிவமைப்பு உட்பட ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ள தனிப்பிரிவு மற்றும் அலுவலகம் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், 'அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி, மனு அளித்துள்ளார்.
'டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, அடுத்து இரண்டு ஆண்டுக்குள் பணி முடியும்' என உறுதியளித்த முதல்வர், தற்போது மீண்டும் மத்திய அரசிடம் நிதி கோரியிருப்பது, 'வழக்கம் போல், மக்களை ஏமாற்றும் செயல்' என, போராட்டக் குழுவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அத்திக்கடவு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரபு கூறுகையில், ''திட்ட வடிவமைப்பு, மதிப்பீடு பணி கூட நடக்கவில்லை. உலக அளவிலான நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்க வேண்டிய நிலையில், குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்பாவது,
டெண்டர் வைக்க வேண்டும். எதுவும் நடக்காமல், திடீரென மத்திய அரசிடம் நிதியை கோரியிருப்பது, மீண்டும் இழுத்தடிக்கும் வேலை துவங்கியுள்ளதாகவே கருதுகிறோம். திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி, உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement