Advertisement

பணமே இல்லை!

'குஜராத் சட்டசபை தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்' என, கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல். ஆனால், கட்சிக்கு பெரும் பிரச்னையாக இருப்பது பணம்தான். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி பறிபோய்விட்டது. மத்தியிலும் ஆட்சி கிடையாது. இதனால் பண வரவு வற்றிவிட்டது.

நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில், பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டது காங்கிரஸ். பஞ்சாபிலிருந்து, காங்., முதல்வர் அமரீந்தர் சிங் உதவியதால், ஒரு வழியாக தேர்தலை சமாளிக்க முடிந்தது. கர்நாடக காங்கிரஸ் அரசும், முடிந்த பண உதவியைச் செய்து வருகிறது.பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு ஏன் இந்த நிலை? 'பிரதமர் மோடி, கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கை கோர்த்துள்ளார்; அதன் முதலாளிகளை நன்கு கவனித்துக் கொள்கிறார்' என, ராகுல் குற்றம் சாட்டி, பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ராகுலின் இந்த பேச்சு காங்கிரசுக்கு, 'ஆப்பு' வைத்துவிட்டது.

மிகப் பெரிய நிறுவனங்கள் காங்கிரசின் இந்த குற்றச்சாட்டால் தேர்தல் நிதி தர மறுத்துவிட்டன. மாநிலங்களில் ஆட்சியை பிடித்தால் தான், நிதி நிலைமை சரியாகும் என்கின்றனர் காங்., தலைவர்கள். இதனால் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் இந்த விஷயத்தைப் பற்றி பேசவேயில்லை ராகுல்.

இவ்வளவு பணமா?சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறையின் சோதனைகள் தான், டில்லி அரசியல் வட்டாரங்களில், தற்போதைய பரபரப்பு செய்தி. இது குறித்து டில்லி அதிகாரிகள் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சோதனை களுக்கு, 'ஆப்பரேஷன் எலிபென்ட்' என, ரகசிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, இதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின், இதுவரை நடந்த மிகப் பெரிய வருமான வரித்துறை சோதனைகளில், இது மூன்றாவது என்கின்றனர் அதிகாரிகள். 'இவ்வளவு பெரிய சோதனையை, இப்போது தான் பார்க்கிறோம்' என, சில அதிகாரிகள் ஆச்சரியத்துடன் சொல்கின்றனர்.

ஓர் ஆவணத்தை ஆராய்ந்தால், அது வேறொருவரைக் காட்டுகிறது; அவரிடம் விசாரித்தால், அவர், மற்றொரு நபரை கை காட்டுகிறார். இப்படி தோண்ட தோண்ட பணம்,பத்திரங்கள், நகை என, வந்து கொண்டேயிருக்கின்றன.சசி குடும்பம் எங்கெல்லாம் சொத்து வைத்துள்ளது என்ற துல்லியமான தகவல் எப்படி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது; எல்லாம் உள்குத்து தான். சசி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான், இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. தினகரனுக்கும், இவருக்கும் ஆகாது.

அதனால், உள் விவகாரங்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார். 'தினகரன் மாட்டிக் கொள்வார்; சசி கோஷ்டி அ.தி.மு.க., தன் பக்கம் வந்துவிடும்' என, எதிர்பார்த்த இந்த உள்குத்து பிரமுகருக்கு, இப்போது பெரும் அதிர்ச்சி. அதிகாரிகள் இவரையும் போட்டு குடைந்து எடுத்து விட்டனர். இவரது சொத்தும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளது.இதைத் தவிர, சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமான, கோவையைச் சேர்ந்த ஒரு முக்கிய தொழில் பிரமுகரும்,
அதிகாரிகளிடம் பல தகவல்களை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பிய பிரதமரிடம், இந்த சோதனையில் கிடைத்த முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகம் எங்கே போகிறது?தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் அடிக்கடி டில்லி வருகிறார். அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலை குறித்து தகவல் அளித்து வருகிறார். சமீபத்தில் இந்த பிரமுகர் டில்லி வந்திருந்தார். பா.ஜ., முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். தி.மு.க.,வின் நிலை அவ்வளவு சொல்கிற மாதிரி இல்லை. மற்றொரு பக்கம், ரஜினி அரசியலுக்கு வந்தால், அவர் பின், பலர் அணி திரளும் நிலை ஏற்படும். புதிய கூட்டணிகள் உருவாகும். ரஜினி- - பா.ஜ., உறவு ஏற்பட்டால், கமல் - -ரஜினி சினிமா போட்டி மாதிரி, அரசியல் போட்டியும் வந்துவிடும்.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஓட்டுக்கு பணம் கொடுத்து, அரசியல் செய்தவர்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் பணம் கொடுக்க முடியாது; காரணம், பணம் இப்போது தினகரன் வசம் உள்ளது. எனவே தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணம் உருவாகும் என, அந்த தமிழக பிரமுகர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement