Advertisement

உலக சாதனை குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பன்

சதீஷ் குருவப்பன் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அத்தனையும் சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட குறும்படங்கள். இவர் இயக்கிய 'Mr.Cobbler' குறும்படத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை 14 கோடிப்பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். 40 லட்சம் பேர் இந்தக் குறும்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 30 லட்சம் பேர் இந்த குறும்பட வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள். வேறு குறும்படங்களுக்காக விருதுகளையும் வென்றிருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிப் பேசும் 'SHE', எண்ணங்களே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன எனும் கான்செப்ட் கொண்டு எடுக்கப்பட்ட 'PHD' ஷார்ட் ஃபிலிம், சினிமா நடிகர்களுக்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் ஒரு வன்முறைக்குப் பிறகு திருந்து வாழ்வது பற்றிய படமான 'வெறி',எல்லோரையும் நேசிக்கவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகிற 'விரும்புடா', முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் மருமகள்களைப் பற்றிய 'அன்புள்ள அப்பா' என இவரது எல்லாப் படங்களுமே நல்ல சமுதாயக் கருத்தை வலியுறுத்துகின்றன.

குறும்பட இயக்குநரான ஐ.டி., நபர்




குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பனுடன் ஒரு சந்திப்பு:

உங்களைப் பற்றி ஒரு முன்னோட்டம்...

சொந்த ஊர் மதுரை. இப்போ சென்னையில ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறேன். சினிமா மேலேயும் சமூகத்து மேலேயும் ரொம்ப ஈடுபாடு. சமூக நோக்கம் கொண்ட குறும்படங்கள் எடுக்கலாமேனு ஐடியா வந்துச்சு. வார விடுமுறை நாட்கள்ல குறும்படங்களைப் படம்பிடிச்சு வொர்க் பண்ணி வெளியிட ஆரம்பிச்சேன். நான் இயக்கியவற்றில் 12 படங்களில் நானும் நடிச்சிருக்கேன். என் நண்பர்கள், ஆபிஸ் மேட்ஸ், குடும்பத்தில் அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் நடிச்சிருக்காங்க. என் மனைவி வாய்ஸ் ஆர்டிஸ்டா என் படத்திற்கு வொர்க் பண்ணிருக்காங்க. சுத்தி இருக்கிறவங்களை இணைச்சு நல்ல ஐடியாக்களை ஸ்கிரிப்டா வெச்சு குறும்படங்கள் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

எதிர்பாரா வரவேற்பு




'Mr.Cobbler' படம் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும்னு நினைச்சீங்களா?

இவ்வளவு பெரிய ரீச் இருக்கும்னு நிச்சயமா எதிர்பார்க்கலை. முதலில் சிலர் பகிர்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு ஃபேஸ்புக் பேஜில் என்கிட்ட அனுமதி வாங்கி இந்தக் குறும்படத்தை வெளியிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் தாறுமாறா வியூவ்ஸ் அதிகரிக்க ஆரம்பிச்சது. இதுவரைக்கும் 14 கோடிப் பேருக்கும் மேல் இந்த ஷார்ட் ஃபிலிம்மை பார்த்திருக்காங்க. 40 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருக்கிறார்கள். உலக ஃபேஸ்புக் வரலாற்றிலேயே எந்தக் குறும்படத்துக்கும் இந்தளவுக்கு வ்யூவ்ஸ் கிடைச்சதில்ல. இந்தச் சாதனைக்காக கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கோம்.

நடிப்பிலிருந்து இயக்குநராக...




படம் எடுப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?

நான் சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். போட்டோகிராஃபியில் ரொம்ப ஆர்வம். பல இடங்களுக்குப் போய் சுத்தி போட்டோக்கள் எடுத்துட்டு வர்றதை பொழுதுபோக்கா வெச்சுருக்கேன். அப்படித்தான் ஷார்ட்ஃபிலிம் எடுக்குறதுலேயும் ஆர்வம் வந்துச்சு. காதல், நட்பு, ஃபேமிலி சென்ட்டிமென்ட் இப்படி இல்லாம சமூக மாற்றத்துக்காக எதையாவது நறுக்குனு சொல்றமாதிரி இருக்கணும்னு கான்செப்ட் வெச்சு எடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு படத்தையும் ஒரே நாள்ல ஷூட் பண்ணி முடிச்சிடுவோம். 'குயவர்', 'வெறி', 'அன்புள்ள அப்பா' படம் மட்டும் கொஞ்சம் நீளமானதுங்கிறதால ரெண்டு நாள் எடுத்தோம்.

கண்ணீர் விட்ட பெண்கள்




"SHE" படத்தின் Concept என்ன

பெண்களை ஈவ்-டீசிங் பண்றது, காதலிக்க ஒத்துக்கலைனா ஆசிட் அடிக்கிறது, பெண்களுக்கு எதிரான வன்புணர்வு போன்ற விஷயங்களை வெச்சு SHE (Stop Harassment Everywhere) ஷார்ட் ஃபிலிம்ஸ் 3 பார்ட் எடுத்திருக்கேன். SHE -ன் முதலிரண்டு பாகங்களைப் பார்த்துட்டு பல பெண்கள் கால் பண்ணி, படம் பார்க்கும்போதே அழுகை வந்துடுச்சுனு நெகிழ்ச்சியா சொன்னாங்க. இவை எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம். 'SHE 2' படம் ஃபேஸ்புக் வியூவ்ஸ் ஒரு கோடியை தாண்டிடுச்சு. இன்னும் 'விரும்புடா' உள்ளிட்ட சில படங்களின் ஃபேஸ்புக் வியூவ்ஸ் ஒரு கோடியை நெருங்கிட்டு இருக்கு. 'குயவர்', 'ஜூலி' குறும்படங்களுக்கு இந்தோ - ரஷ்யன் அவார்டு கிடைச்சது. 'SHE', 'DB' குறும்படங்களுக்கு "Something For Society" அவார்டுகள் கிடைச்சுது.

வெள்ளித்திரைக்கு வர்ற ஐடியா இருக்கா?
2020-க்குள் டைரக்டர் ஆகுற ஐடியா இருக்கு. ஆனா, இப்போ மாசம் பொறந்தா இ.எம்.ஐ கட்டிக்கிட்டு இருக்கேன். ஃபேமிலி கமிட்மென்ட்ஸ்னால உடனே சினிமாவுக்குப் போக முடியல. கண்டிப்பா சில்வர் ஸ்க்ரீன்ல வரணும்ங்கிற எண்ணம் இருக்கு. சினிமாவிலேயும் சமூகக் கருத்துகொண்ட படம்தான் எடுப்பேன்.
இயக்குநர் சதீஷ் குருவப்பன் தொடர்பு கொள்ள

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement