Advertisement

அந்த இரண்டு பேர்!

அந்த இரண்டு பேர்!


தமிழகத்தில் இப்போது, மழையை பின்னுக்கு தள்ளிவிட்டு, சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான, வருமான வரித்துறை சோதனை தான், முக்கிய செய்தியாக வலம் வருகிறது. இப்படி ஒரு சோதனை நடத்த, பலத்த முன்னேற்பாடுகள் தேவை.மூன்று மாதங்களாக, இதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சசிகலாவின் சொந்தங்கள் பட்டியல், அவர்களது சொத்து பட்டியல், அவர்கள் என்ன தொழில் செய்கின்றனர் என, மூன்று மாதங்களாக, தகவல்களை சேகரித்தது, வருமான வரித்துறை.'முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக சோதனை நடத்தும் போது, சசிகலா குடும்பத்தினர் மீது, சட்டம் பாயாமல் அமைதியாக இருப்பது ஏன்?' என, கேள்விகள் எழுந்தன. அதற்கு பதில் தரும் விதமாக, இந்த சோதனை அமைந்துள்ளது என்கிறது, டில்லி அரசியல் வட்டாரம்.
மேலும், தினகரன், சகட்டுமேனிக்கு மத்திய அரசை திட்டி வருகிறார். 'மடியில் கனம் இருக்கும் போது, திட்டினால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?' என்கின்றனர், டில்லி, பா.ஜ., வட்டாரங்கள்.மத்திய அரசின், நிதித் துறை செயலராக இருப்பவர், ஹஷ்முக் ஆதியா என்ற, மூத்த அதிகாரி. இவர், குஜராத்தைச் சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். வருமான வரித்துறை சோதனைகள் அனைத்தும், இவரது உத்தரவின்படி தான் நடக்கும்.இவரது, 'பாஸ்' நிதி அமைச்சர், அருண் ஜெட்லி. சில நேரங்களில், அமைச்சருக்கு கூட சொல்லாமல், பிரதமருக்கு மட்டும், இந்த சோதனை விவகாரம் குறித்து தகவல் சொல்வார், ஆதியா. சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப் போவது குறித்து முடிவெடுத்தது, இவர் தான்.'இந்த சோதனை விவகாரத்தை, தமிழக முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், டில்லி மேலிடம் முன்னதாக சொல்லி இருக்கும்' என, செய்திகள் உலா வருகின்றன.


-இந்த வாரம் தீர்ப்பு?


அ.தி.மு.க., தேர்தல் சின்னமான, இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை, சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது, தேர்தல் கமிஷன். பல நாட்களாக நடந்த இந்த விசாரணையில், டில்லியின் சீனியர் வழக்கறிஞர்கள், இரு பக்கமும் ஆஜாராகி வாதாடினர். அவர்களுக்கு, நல்ல வருமானமும் கிடைத்தது.இவ்வளவு நாள் இழுத்தடிக்கிறதே என, பலரும் கவலைப்பட்டாலும், தேர்தல் கமிஷனில் டீக்கடை நடத்தி வருபவர், மகிழ்ச்சியில் இருந்தார். அவரது கடையில், நல்ல வியாபாரம் நடந்தது. சசிகலா மற்றும் பழனிசாமி - பன்னீர் தரப்பில், தமிழக அரசியல்வாதிகள் நிறைய பேர், இந்த விசாரணையை பார்க்க வந்திருந்தனர்.விசாரணை துவங்கிய சிறிது நேரத்திலேயே, இவர்கள் வெளியேறி டீக்கடைக்கு செல்வர். 'வழக்கறிஞர்கள் என்ன பேசுகின்றனர் என்பது, பின்னால் அமர்ந்திருக்கும் எங்களுக்கு கேட்பதில்லை; காரணம் அங்கு, 'மைக்' கிடையாது; எவ்வளவு நேரம் தான், உள்ளேயே உட்கார்ந்து கொண்டிருப்பது; அதனால் தான், டீக்கடைக்கு போகிறோம்' என்பது, இவர்களது வாதம்.வழக்கு முடிந்த நிலையில், வியாபாரம் குறைந்து விட்டதால், டீக்கடைக்காரர் வருத்தத்தில் உள்ளார். 'இந்த மாதிரி அடிக்கடி ஏதாவது, வழக்கு இங்கு நடந்தால் தான், எனக்கு வருமானம் கிடைக்கும்' என்கிறார், அவர். இதற்கிடையே, தீர்ப்பை எழுத துவங்கி விட்டனர், தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.'தீர்ப்பிற்கு தேவையான விஷயங்களை எழுத துவங்கி விட்டோம். கடைசி பாராவில், என்ன முடிவு என்பதை, மூன்று தேர்தல் கமிஷனர்களும் முடிவெடுப்பர். பெரும்பாலும், இந்த வார இறுதிக்குள், இரட்டை இலை யாருக்கு என்ற தீர்ப்பு வெளியாகும்' என்கின்றனர், அதிகாரிகள்.


குழப்பத்தை ஏற்படுத்திய மோடி, 'விசிட்'


சமீபத்தில், சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, போகிற போக்கில், தமிழக அரசியலில், ஒரு சலசலப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டார். திடீரென, தி.மு.க., தலைவர், கருணாநிதியை, அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, நலம் விசாரித்து சென்றது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.பிரதமரே கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றது, தி.மு.க., தொண்டர்களை, 'குஷி'ப்படுத்தி உள்ளது. இதனால், தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைக்குமா என்ற குழப்பம், தமிழக அரசியலில் நிலவுகிறது.'இது, ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு; அரசியல் கிடையாது' என, இரு தரப்பினரும் கூறினாலும், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. இதில் ஏதோ உள்குத்து உள்ளது என, தொண்டர்கள் நினைக்கின்றனர். இந்த சந்திப்பு, தமிழக காங்கிரசை அதிகம் பாதித்துள்ளது; கூட்டணியில் பிரச்னை வருமோ என, தமிழக, காங்., அச்சப்படுகிறது.
இது குறித்து, டில்லி, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு, தமிழக அரசியல் ஆசானாக பார்க்கப்படுபவர், கருணாநிதி தான். பிரதமர் மோடி, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஜெ., இருந்த வரை, கருணாநிதியை, மோடி சந்திக்க முடியாமல் இருந்தது.மேலும், காங்., - தி.மு.க., கூட்டணி தொடரக் கூடாது என்பது, எங்கள் விருப்பம். காங்கிரசை தனிமைப்படுத்தி, கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது தான், மோடி - -கருணாநிதி சந்திப்பின் நோக்கம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    இந்த கட்டுரை எழுதிய மஹாநுபாவன் யாரு ? மோடியின் தூய்மை எங்கே உள்ளயே பிரதானம் என்று இருக்கும் இவன் எங்கே சசிக்கு சொந்தம்னா அவளோட போச்சு ஏன்னா இப்போ நம்ம நாட்டின் எகானாமியே இதுகள் கைலே மாட்டிண்டுருக்குபோல பில்டப் தேவையா ? எல்லோரையும் பிடிச்சு உள்ளேதள்ளனும் எல்லாத்தையும் பிடிங்கிண்டு கஜானா லெசேர்க்கவேண்டும் தன வயத்துக்கே சொரில்லேண்றச்ச அடுத்தவீட்டுக்கு என்னய்யா உபச்சாரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement