Advertisement

எது அழகு? - 'மேயாத மான்' பிரியா பவானி சங்கர்

கதிரொளி வீசும் முகத்தை காட்டி 'காளை'யர்களின் உள்ளத்தை அள்ளும் கில்லி; ஆர்ப்பரிக்கும் அழகால் வசீகரிப்பவர். வெள்ளித்திரையில் முகம் பதித்த 'மேயாத மான்' என்ற முதல் படத்திலேயே கதாநாயகியாக 'டாப் ஸ்கோர்' அடித்து, இளசு முதல் பெரிசு வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அவர்தான் கற்பனை கலக்காமல் கவிஞர்கள் வர்ணிக்க தகுதியான புதுமுக நடிகை பிரியா பவானி சங்கர். 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி

* பிறந்தது வளர்ந்தது, குடும்பம் குறித்து?
அப்பா பவானிசங்கர், அம்மா தங்கம், அண்ணன் சிவசங்கர், அண்ணி திவ்யா, 'டெஸ்மண்ட்' செல்லம் (நாய்குட்டி) அப்படின்னு எங்கள் குடும்பம் பாசப்பிணைப்புள்ளது. திருச்சியில் பிறந்தேன். ஒரு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டோம். பள்ளிப்படிப்பு, இன்ஜினியரிங் கல்லுாரி படிப்பை சென்னையில் முடித்தேன். தந்தை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பணியாற்றினார். அங்கு வீட்டை விட்டு வெளியில் வந்ததும் கண்கொள்ளாக் காட்சியாக விரியும் கொடைக்கானல் மலை அத்தனை அழகு. அதனால் 'பெரியகுளம்'தான் ரொம்ப இஷ்டம்.

* வெள்ளித்திரை வாய்ப்பு
இன்ஜினியரிங் படிக்கும்போதே மீடியாவுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்குபின் செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்து, முதல் முன்று ஆண்டுகள் கழிந்தது. அப்போதுதான் ஊடகங்கள் குறித்த அனுபவம் கிடைத்தது. அதன்பின் 'டிவி'யில் 'கல்யாணம் முதல் காதல்வரை' சீரியல் முதல் மூன்று மாதங்கள் முடிந்த பின்தான், நடிப்பு குறித்த புரிதல் ஏற்பட்டது. அதுவே வெள்ளித்திரை வாய்ப்பை கொடுத்தது.

* உங்களுக்கு பிடித்த நடிகைகள்?
'மரியான்' நாயகி பார்வதி, நித்யா மேனன். சிம்ரன் ஆல் - டைம் ஸ்பெஷல் கதாநாயகி. 'கிளாமர்' என்ற ஒன்றுக்கு மட்டுமே புகழடைந்த கதாநாயகியாக அவரை நினைக்க முடியாது. நடிப்புத் திறன்களிலும், நடனத்திலும்கூட சிம்ரன் குறை சொல்ல முடியாத கதாநாயகி. அவர் தான் எனக்கு பேவரைட்.

* அழகு பராமரிப்பு, பிட்னெஸ் ரகசியம்?
அழகு பராமரிப்பு, பிட்னெஸ் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதில் எனக்கு அதீத நம்பிக்கையும் இல்லை. மற்றவர்கள் நம்மை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் தான் நம்முடைய தனித்துவ மிக்க அழகே உள்ளது. தேவையான அளவில் எதுவும் இருந்தால் அழகுதான்.

* உங்களின் ரோல் மாடல்?
நான் கற்றுக்கொள்பவள். செல்ல வேண்டிய துாரமும் அதிகம். அதனால் யாரையும் ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ளவில்லை. என் திறன்களை வளர்த்துக் கொள்வதில் முழு மூச்சாக உள்ளேன்.

* நடனம் ஆடுவீர்களா
பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், நாட்டுப்புற நடனம் என இதை எல்லாம் பிறர் ஆடினால் கண்டு ரசிப்பேன். எனக்கு தெரியாது. இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* வெள்ளித்திரை அனுபவம்?
முதல் படம் மேயாத மான் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொஞ்ச காலங்கள் கழிந்ததும் இன்னும் அனுபவங்கள் பெறலாம். திரைப்படத்தில் பிரேம் டூ பிரேம் அதிக விபரங்களை சேர்க்கிறார்கள். குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த விபரங்கள் அதிகம். அது தனி அனுபவம்தான்.

* பிடித்த உணவு?
'ஆல்-டைம்' பேவரைட் பிரியாணி. மட்டன் பிரியாணி அதிக இஷ்டம்

* சமீபத்தில் பார்த்த திரைப்படம்?
விஜய் நடித்த 'மெர்சல்'. பின், நான் நடித்த 'மேயாத மான்'.

தொடர்புக்கு... facebook priyabhavanishakar

வீஜெயெஸ்
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement