Advertisement

ஹிமாச்சலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

சுற்றுலா பிரதேசமான, ஹிமாச்சல பிரதேசத்தில், அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு இப்போது, காங்., ஆட்சி நடக்கிறது. 83 வயதான, வீர்பத்ர சிங் முதல்வராக உள்ளார். இவர், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். இவருக்கும், காங்., துணைத் தலைவர், ராகுலுக்கும் ஆகாது.

இவருக்கு வயதாகி விட்டதால், இவரை மீண்டும் முதல்வராக்கும் எண்ணம், ராகுலுக்கு இல்லை. மாநில, காங்., தலைவர், சுக்வீந்தர் சிங்கை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டிருந்தார் ராகுல். உடனே, 'இந்த தேர்தலில் பிரசாரம் செய்வேன்; ஆனால், கட்சிக்கு பணம் தர மாட்டேன்' என, கூறி விட்டார் வீர்பத்ர சிங்.

காங்கிரசிடம் நிதி வசதி முன் மாதிரி இல்லை. பல மாநிலங்களில் ஆட்சி பறிபோய் விட்டதால், பணப்புழக்கம் சுத்தமாக குறைந்துவிட்டது. 'அண்டை மாநிலமான, பஞ்சாப் உதவுமா' என, கட்சி மேலிடம் கேட்ட போது, 'வீர்பத்ர சிங் முதல்வராக அறிவிக்கப்பட்டால், நிதி அளிக்க தயார்' என, பஞ்சாப் முதல்வர், அம்ரீந்தர் சிங் கறாராக கூறிவிட்டார். வேறு வழியின்றி, வீர்பத்ர சிங்கையே, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார், ராகுல்.

அதே நேரத்தில், 'எப்படியும் இந்த முறை ஆட்சியை பிடிப்போம்' என, பா.ஜ.,வினர் உற்சாகமாக இருக்கின்றனர்; காரணம், வீர்பத்ர சிங் மீது, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், பா.ஜ.,விலும், உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அனுராக் தாக்கூர், முதல்வராக
வேண்டும் என ஆசைப்படுகிறார்; ஆனால், இவர் மீதும் வழக்குகள் உள்ளன.

மத்திய அரசின், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள நட்டா, இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்; இவரை முதல்வராக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது. இவர் மீதும் புகார்கள் உள்ளன. 'உட்கட்சி பூசல் இருந்தாலும், வெற்றி எங்களுக்கு தான்' என, அடித்துக் கூறுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

குஜராத் நிலவரம் என்ன?

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'எப்படியாவது இங்கு, பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும்' என, காங்., துணைத் தலைவர், ராகுல், கோவில் கோவிலாகப் போய், நெற்றி நிறைய குங்குமத்துடன் பிரசாரத்தை துவங்கி
விட்டார்.மோடியும், தன் பிரசாரத்தை துவங்கி விட்டார்.

சமீபத்தில் நடந்த கூட்டத்தில், மேடையில் அமர்ந்திருந்தவர்களின் பெயர்களைச் சொல்லி பேச்சை துவக்காமல், 'எங்களுக்கு, 150 தொகுதிகளை கொடுக்க வந்த மக்களே' என, பேச்சை துவக்க, கூட்டம் ஆர்ப்பரித்தது.கடந்த, 1995ல், காங்கிரசிடமிருந்து பறிபோன குஜராத், இதுவரை அந்த கட்சிக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியால், குஜராத் தொழிலதிபர்கள், மோடி மீது கடுப்பில் உள்ளனர்.

படேல் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பா.ஜ.,வை எதிர்க்கின்றனர். இதனால், 'மோடியை மண்ண கவ்வ வைப்போம்' என்கின்றனர், காங்கிரசார்.பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும் குஜராத்தைச் சேர்ந்தவர்; இந்த சட்டசபை தேர்தலில், 150 சீட்கள் பெற வேண்டும் என்பது, இவரது குறிக்கோள். 'பகல் கனவு காண்கிறது காங்கிரஸ்; ராகுலின் பிரசாரம் எந்த அளவிற்கு எடுபடும் என்பது, அனைவருக்கும் தெரியும்; வெற்றி எங்களுக்குத் தான்' என்கிறது, பா.ஜ.,

தமிழக அரசின் தீபாவளி பரிசு- மசாலா!
டில்லியில், தீபாவளியின் போது பரிசு பரிமாறிக் கொள்வது வழக்கம். சின்ன சின்ன அலுவலகத்திலிருந்து, பெரிய நிறுவனங்கள் வரை, இந்த பழக்கம் உள்ளது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்பிருந்து, இந்த பரிசு வினியோகம் துவங்கும். 'டிவி'யிலிருந்து, ஸ்வீட் பாக்ஸ் வரை, நிறுவனங்களின் பொருளாதார நிலையை பொறுத்து, இந்த பரிசுகள் வேறுபடும்.

இப்போது, பலவித பிரச்னைகளால், இந்த பரிசு கலாசாரம், சற்று குறைந்துள்ளது. தமிழக அரசும், டில்லியில் இப்படி பரிசு வழங்கி வருகிறது. இங்குள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது.

இந்த முறை, தமிழக அரசு, டில்லியில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அளித்த பரிசு, சற்று வித்தியாசமானது. மசாலாவிற்கு வாசனை சேர்க்கும் கிராம்பு, பட்டை, சோம்பு என, ஐந்து அயிட்டங்கள் ஒவ்வொன்றும், 150 கிராம் உடைய சின்ன பாக்கெட்களில் போட்டு, ஒரு அழகான அட்டை டப்பாவில் வைத்து, அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் உதவியாளர்களுக்கு, 'பர்ஸ்' வழங்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement