Advertisement

தொகுதி தேடுகிறார் ராகுல்?

'விரைவில், காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார், ராகுல்' என, சோனியா சொல்லிவிட்டார். மகன் நன்றாக இருக்க வேண்டும் என, எந்த தாய் தான் நினைக்க மாட்டார். ஆனால், இவர்களுடைய குடும்ப பார்லிமென்ட் தொகுதியான, உ.பி.,யில் உள்ள அமேதியில், இவர்களுக்கு பிரச்னை காத்திருக்கிறது. இந்த தொகுதியிலிருந்து, எம்.பி.,யாக வெற்றி பெற்றவர், ராகுல். 2019 பார்லி., தேர்தலில், ராகுலை, இந்த தொகுதியில் தோற்கடிக்க, பா.ஜ., அதிரடி ஏற்பாடுகளை செய்து வருகிறது.ஏற்கனவே, ஸ்மிருதி இரானி, இங்கு, ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். இப்போது, அமித் ஷாவும் களம் இறங்கியுள்ளார். காங்கிரசிலிருந்து, சில உள்ளூர் தலைவர்கள், பா.ஜ.,வுக்கு வந்து விட்டனர். தனக்கு பிரச்னை ஏற்படுத்திய ராகுலை, எப்படியாவது இங்கு தோற்கடிக்க வேண்டும், என முழு வீச்சில், அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார்.ஏற்கனவே, உ.பி.,யில், காங்., மோசமான நிலையில் உள்ளது. இவர்களுடைய குடும்ப தொகுதி என்பதால், ராகுல், அமேதியிலிருந்து இதுவரை வெற்றி பெற்றுள்ளார்; ஆனால், 2019 தேர்தலில், அவர் வெற்றி பெறுவது கஷ்டம் என்கின்றனர், சில, காங்., தலைவர்கள். இதனால், 2019 லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகளில், ராகுல் போட்டியிடுவார் என, சொல்லப்படுகிறது.ஒன்று, அமேதி; மற்றொன்று, கர்நாடகாவில், இந்திரா போட்டியிட்ட சிக்கமகளூரு தொகுதி, அல்லது சோனியா போட்டியிட்ட, பெல்லாரி தொகுதி என, பேச்சு அடிபடுகிறது.


மோடியுடன் சந்திப்பு ஏன்?
துணை முதல்வராக பதவியேற்ற பின், முதன்முறையாக, பிரதமர், நரேந்திர மோடியை, டில்லியில் சந்தித்தார், பன்னீர்செல்வம். இதையடுத்து, 'பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்தாலும் பிரச்னை தீரவில்லை; அதை, மோடியிடம் சொல்ல, டில்லி வந்துள்ளார், பன்னீர்' என, செய்திகள் வெளியாகின. இவரோடு, பழனிசாமி கோஷ்டியின் அமைச்சர், தங்கமணி, டில்லி வந்திருந்தார். ஆனால், பிரதமரை, பன்னீர் சந்தித்த போது, அவர் உடன் இல்லை. மாறாக, மைத்ரேயன் உடன் இருந்தார். 'நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம்; எந்த பிரச்னையும் இல்லை; மரியாதை காரணமாக, பிரதமரைச் சந்தித்தேன்' எனச் சொன்னார், பன்னீர்செல்வம்.
'மரியாதை நிமித்தமாக சந்திக்க, சென்னையிலிருந்து டில்லி வர வேண்டுமா? இந்த சந்திப்பின் காரணம் வேறு' என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்களும், பிரதமருக்கு நெருக்கமானவர்களும். இந்த சந்திப்பின் போது, ஒரு முக்கியமான விஷயம் விவாதிக்கப்பட்டதாம். 'மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வைச் சேர்த்துக் கொள்ளுங்கள்' என, பிரதமரிடம், பன்னீர் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய அரசை ஆதரித்து வருகின்றனர். மேலும், பன்னீர் அணியில் உள்ள சிலருக்கு பதவிகள் கிடைத்தாலும், எம்.பி.,க்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை; எனவே, அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்கித் தர, மோடியுடன், பன்னீர் பேசியுள்ளார் என்கிறது, டில்லி வட்டாரம்.தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தயாராக உள்ளது; அடுத்த பார்லிமென்ட் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு தான் உள்ளது; எனவே, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, பன்னீர் கேட்டுக் கொண்டதாக, பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.மத்திய அரசுக்கு, அ.தி.மு.க.,வின் உதவி தேவையில்லை; ஏற்கனவே, முழு மெஜாரிட்டி உள்ளது; இருப்பினும், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு, அ.தி.மு.க., தேர்தல் ரீதியாக உதவ முடியும்; எனவே, பிரதமர் என்ன முடிவெடுப்பார் என்பது, அவருக்கும், அமித் ஷாவிற்கு மட்டும் தான் தெரியும் என, பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.தமிழக எம்.பி.,க்கள் மவுனம் ஏன்?

டில்லி- சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி., எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்திருந்தால், எப்படி மோசமான நிலையில், இந்த ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன என, தெரிய வரும். கிழிந்து போன சீட்கள், பராமரிக்கப்படாத டாய்லெட், சாதாரண இரண்டாம் வகுப்பிலிருந்து, 'ஏசி' வகுப்பு வரை, ஒரு பக்கம் எலி, இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சி என, உங்களோடு பயணம் செய்யும். சாப்பாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். அத்தோடு, ரயில் பெட்டிகளும் பழமையானவை.ஆனால், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போகும் ரயில்கள், இந்த அளவிற்கு மோசம் இல்லை; ஓரளவிற்கு சுமாராக உள்ளன. இது குறித்து, சீனியர் ரயில்வே போர்டு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில, எம்.பி.,க்கள் ரயில் வசதி சரியில்லை எனில், எங்களிடம் புகார் அளிக்கின்றனர்; இவர்கள், சம்பந்தப்பட்ட ரயில்களில் பயணம் செய்வதோடு, அங்கிருந்தே எங்களுக்கு போனில் புகார் தருகின்றனர். ஆனால், தமிழக, எம்.பி.,க்கள் ரயில் வசதி குறித்து புகார் அளிப்பதில்லை; தமிழகம் செல்லும் ரயில்கள், சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பது, உண்மை தான்' என்றார்.


மகனால் பிரச்னை
மிகப்பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் அவர். காங்கிரசுக்கு நெருக்கமானவர். காங்கிரசால் தான், அந்த பதவிக்கு வந்தவர். அவர் பதவியில் இருந்த போது, மோடி அரசுக்கு, பல பிரச்னைகளை கொடுத்து வந்தார். ஆனால், அவரை விமர்சிக்க முடியாத நிலையில்
இருந்தது, பா.ஜ., காரணம், அந்த நபர் வகித்த பதவி அப்படி. இப்போது, அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.ஒரு பெண்ணை கிண்டல் கேலி செய்தார் என, இந்த நபரின் மகன் மீது, டில்லி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை வைத்து, மிகப்பெரிய பதவியில் இருந்த அவரையும், அவரது மகனையும் ஒரு வழி ஆக்கலாமா என, பா.ஜ.,வினர் யோசித்து
வருகின்றனர்.'எங்களுக்கு என்னென்ன பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் தருமோ, அனைத்தையும் இந்த நபர் பதவியிலிருந்த போது கொடுத்தார்; அத்தோடு, ஓய்வு பெறும் நாளன்று கூட, மோடி அரசை கடுமையாக, பொது மேடையில் விமர்சனம் செய்தவர்; இவருடைய மகன் செய்த கூத்தை சும்மா விடுமோமா; பொறுத்திருந்து பாருங்கள்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  இத்தாலியில நல்ல நல்லா தொகுதி இருக்காமாம்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  மகனால் பிரச்சினை. ஸூபர். நா கண்டுபுச்சிட்டேன். இப்ப இருக்கும் வெங்காயத்தின் place ல அப்பா இருந்த அந்த முஸ்லீம் தாத்தாதானெ. எப்டி. நா பிரில்லியண்ட்.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  சீக்கிரம் செய்யுங்க ஒரு ஊழல் கட்சி காணாப்போக நல்ல வாய்ப்பு.

 • Raj Pu - mumbai,இந்தியா

  ரயிலவெ கமிட்டீ உறுப்பினர் என்று சொல்லி அனுபவித்து வருகிறார்களே அவர்கள் என்ன செய்கிறார்கள்

 • B.Indira - thane,இந்தியா

  ஸ்மிரிதி அடிக்கடி அமேதி செல்கிறார் தோற்றுவிட்டாலும் மக்களை சந்திக்கிறார். தொகுதிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. ராகுலுக்கு தோல்வி நிச்சயம். தமிழ் நாட்டிலிருந்து ரயில் சுத்தம் பற்றி எந்த புகாரும் வருவதில்லை என்பது உண்மையே. நான் கூட இதையே எழுதி இருக்கிறேன். அந்த உயர்ந்த பதவி காரர் துணை ஜனாதிபதி அன்சாரி தானே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement