Advertisement

டீ கடை பெஞ்ச்

சைலேந்திர பாபு இடம் மாறிய கதை!


''மேடம் கடையில, சேல்ஸ் கம்மியாயிடுத்துன்னு, பக்கத்துல இருக்கற கடையை, 'குளோஸ்' பண்ணிட்டா தெரியுமோன்னோ...'' என்றபடி, பெஞ்ச் விவகாரம் துவக்கினார் குப்பண்ணா.
''எந்த மேடத்தைச் சொல்றேள்...'' என, குப்பண்ணா மொழியிலேயே கேட்டார்
அன்வர்பாய்.''நெல்லையில இருக்கற, அ.தி.மு.க., மேடத்தைச் சொல்றேன்... சமீபத்துல, நெடுஞ்சாலையில, மாவட்ட, மாநகரா சாலையா இருக்கற இடங்கள்ல, டாஸ்மாக் கடையை மூட வேண்டாம்ன்னு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுதோன்னோ... அந்த வகையில, சில கடைகளை மறுபடி தொறந்திருக்கா... அதுல, ஒரு கடையை, மறுபடியும் திடீர்ன்னு மூடிட்டா...
''கேட்டா, பக்கத்து கடை, அந்த,
எம்.பி.,யோடது... அவங்க கடையில சேல்ஸ் கொறஞ்சு போச்சுன்னு, இந்த கடையை மூடிட்டான்னு, அக்கம்பக்கத்துல இருக்கறவா சொல்றா... இதுவல்லவோ வியாபார தந்திரம்...'' என்றார்
குப்பண்ணா.
''நானும் ஒரு லேடி மேட்டர் சொல்லுதேன்...'' என, அடுத்த விஷயத்துக்கு வந்தார் அண்ணாச்சி.''வில்லங்கமா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''பயப்படாதீரும்... அப்படியெல்லாம் இல்லே... பெரம்பலுார் மாவட்ட பொறுப்புல இருக்கற, சாந்தமான பெண்... சசிகலா ஆதரவாளர்... டெண்டர்ன்னா, ரெண்டு பர்சன்ட்... அதுவும் முன்கூட்டியே
குடுத்திடணும்...''ஆளும் கட்சி,
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களையே மிஞ்சுகிற அளவுக்கு கல்லா கட்டுறாங்க... காசு இருந்தா எதுவும் நடக்கும்... ஊராட்சிகள் உதவியா, 'இயங்குற' ஒருத்தர் தான் இந்தம்மாவுக்கு வேண்டிய கல்லா வேலையைப் பார்க்குதாரு... ஆனா, ஆளுங்கட்சி,
எம்.பி., ஒருத்தரே, இந்தம்மாவோட போக்கு சரியில்லேன்னு, மேலிடத்துக்கு காகிதம் போட்டுட்டாரு... விவகாரம் என்னாகுமோ தெரியலே வே...''
என்றார் அண்ணாச்சி.''ஆளுங்கட்சித் தரப்புக்காரங்களைச் சந்திக்கவே இல்லே... மரியாதையே குடுக்க மாட்டேங்குறாருங்கற கோவம் தான், மாத்தலுக்குக் காரணமாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தமிழக கடலோர, ஏ.டி.ஜி.பி.,யா இருந்த, சைலேந்திர பாபுவை சொல்றேனுங்க... ஜூலை, 15ல் சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி.,யாக பொறுப்பேத்தாரு...
''கையோட, சிறையில் பல சீர்திருத்தங்களை செஞ்சாரு... கவுன்சிலிங் மூலம் பணி மாற்றம், பதவி உயர்வு, பிரிசன் பஜார் சீரமைப்பு என பணிகள் தொடர்ந்துச்சு...
''அதே வேளையில் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து வந்த எந்த கோரிக்கைகளையும் அவர் கண்டுக்கலே... ஆளுங்கட்சி தரப்பினரையும் போய் பார்க்கலே...
''சிறை அதிகாரிகளின் அதிகாரத்தின்படி கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிக்கலாம் என அவர் கருத்து சொல்லி இருந்தாரு... இதனால கோபமான ஆளுங்கட்சி, அவரை, ரயில்வேக்கு மாத்திரிச்சுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
நண்பர்கள் டீ குடிக்கவே, நாயர் தன் வேலையைத்தொடர்ந்தார்!ஹிந்தி படிக்கும் வேலுார் வி.ஐ.பி., பெண்கள்!''புதுசா கட்டுன பாலத்துல, கடமுடான்னு சத்தம் வருது பா...'' என, பெஞ்ச் கச்சேரியை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த ஊருல வே...'' என்றார் அண்ணாச்சி.
''சென்னை அடையாறு, திரு.வி.க., பாலத்தை தான் சொல்றேன்... இங்க, அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, புது பாலம் ஒண்ணை கட்டி, பழைய பாலத்தை ஒருவழி பாதையாக்குனாங்க பா...
''புதுசா கட்டுன பாலத்துல வாகனங்கள் போகும் போது, தடதடன்னு பயங்கரமா சத்தம் வருது... இதனால, வாகன ஓட்டிகள், பீதியிலயே பாலத்தை கடக்குறாங்க பா...
''கட்டுமான பணிகள் தரமா நடந்துச்சான்னு தெரியலை... அதிகாரிகள், பாலத்தை ஆய்வு பண்ணி, பழுது பார்க்க நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும் பா...'' என்றார் அன்வர்பாய்.
''அது சரி... வெள்ளக்காரன் கட்டுன பாலம் எல்லாம், நுாறு வருஷம் தாண்டியும் கம்பீரமா நிக்குது... நம்ம ஆளுங்க கட்டுற பாலங்கள் தான் பல்லை இளிக்கு வே...'' என்ற அண்ணாச்சியே, ''திடீர்னு திருச்சி கூட்டத்தை சென்னைக்கு மாத்திட்டாவ...'' என, அடுத்த விஷயத்திற்கு
நகர்ந்தார்.''என்ன விவகாரம் பா...'' என்றார்
அன்வர்பாய்.
''தமிழக மின் வாரியம், ஒன்பது மண்டலங்களா செயல்படுது... மழைக்கால மின் விபத்துகளை தடுக்குறது சம்பந்தமா, துறையின் அமைச்சர் தங்கமணி, ஒன்பது மண்டலங்களிலும், அதிகாரிகளை கூப்பிட்டு ஆலோசனை நடத்திட்டு இருக்காரு வே...
''போன வாரம், திருச்சி மண்டலத்துல கூட்டம் நடக்க இருந்துச்சு... கடைசி நேரத்துல, கூட்டத்தை சென்னைக்கு மாத்திட்டாவ... அவசர அவசரமா சென்னையில நடத்தி முடிச்சதால, திருச்சி, தஞ்சையில நிலவுற, 'லோ வோல்டேஜ்' பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண முடியாம அதிகாரிகள் கலைஞ்சு போயிட்டாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.
''தமிழ்நாடு சரிப்படாதுன்னு நினைச்சு, ஹிந்தி கத்துக்குறாங்க...'' என, கடைசி தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என்றார்
குப்பண்ணா.''வேலுார் மாநகராட்சி, 'மாஜி' மேயர் கார்த்தியாயினி, வேலுார் சரக, டி.ஐ.ஜி., வனிதா ரெண்டு பேரும், தீவிரமா
ஹிந்தி படிச்சிட்டு இருக்காங்க...
''அ.தி.மு.க.,வுல இருந்த கார்த்தியாயினி, சமீபத்துல, டில்லி போய், அமித்ஷா முன்னிலையில, பா.ஜ.,வுல சேர்ந்தாங்க... ஹிந்தி தெரிஞ்சா, தேசிய தலைவர்களோட பேசறதுக்கு உபயோகப்படும்னு கத்துக்குறாங்க...
''வனிதாவுக்கு, மாநில அரசு போலீஸ் பணி பிடிக்கலையாம்... மத்திய அரசு பணிக்கு போயிடலாம்னு நினைச்சு, ஹிந்தியை கரைச்சு குடிச்சிட்டு இருக்காங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.நாயர் கொண்டு வந்த முந்திரி பக்கோடாவை, பெரியவர்கள், 'பதம்' பார்க்க ஆரம்பித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    மாமன்னன் ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் 1000 வருடங்களை கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.அடுத்து நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் கட்டிய அணைகள், பாலங்கள், கட்டிடங்கள் இன்னும் புதுமை மாறாமல் உள்ளன. அதுபோல் காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் கட்டிய அணைகளும், பாலங்களும் இன்றளவும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.ஆனால் கமிஷன் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியில், போடப்பட்ட பல்லாங்குழி சாலைகள் பல்லை இளிப்பதும், கட்டிய கட்டிடங்கள்,பாலங்கள் குறுகிய காலத்தில் விரிசல் அடைவதும் வேதனை அளிக்கிறது.

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    அவரை மாற்றினால் அவருக்கென்ன நஷ்டம். தண்ணீர் மீது கோபித்துக் கொண்டால்....?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement