Advertisement

டீ கடை பெஞ்ச்

நினைவு பரிசு தரத் தயாராகும் அரசு!


''டெண்டருக்கு வந்த நிறுவனத்துக்கு, வங்கி கணக்கு இல்லையாங்க...'' என, முதல் தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.
''சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல, மோசடி நபர்களைக் கண்காணிக்க, கேமரா போட்ருக்காங்க... இதுக்காக, ஒரு தனியார் நிறுவனத்தை, பதிவுத் துறை அதிகாரிங்க, டெண்டர் மூலமா தேர்வு செஞ்சாங்க... அந்த நிறுவனம் கேமராக்களை அமைச்சு, அதை இயக்க, ஒவ்வொரு ஆபீசுக்கும், ரெண்டு பேர் வீதம் ஆட்களை போட்டுச்சு...
''இவங்களுக்கு அந்த நிறுவனம், முறையா சம்பளம் தரலை... பத்திரப்பதிவை, சி.டி., காப்பியா தர்றதுக்கு, அந்த நிறுவனம், 'பீஸ்' வாங்குது... ஆனா, சி.டி., தர்றதில்லே... இதுபத்தி புகார் பதிவுத் துறைக்கு வந்ததும், அதிகாரிங்க, சம்பந்தப்பட்ட கம்பெனியில விசாரிச்சாங்க... உடனே, சம்பளப் பட்டுவாடா ஆகுச்சு... எல்லாம் காசோலை...
''சந்தோஷப்பட்ட பணியாளர்கள், காசோலையே பேங்க்குல போட்டா, அந்த நிறுவனத்துக்கு, பேங்க்குல, 'அக்கவுன்ட்'டே இல்லேன்னு, எல்லாம் திரும்பி வந்திருச்சு... பதிவுத் துறை எந்த நிலையில இருக்கு பாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மாநில தலைவர் படத்தை, அரங்கத்திற்குள்ளே அனுமதிக்கலை பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தி.மு.க., - அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டங்கள் நடக்கும் போது, உறுப்பினர்களுக்கு தடபுடல் விருந்து அளிப்பது வாடிக்கை... அதே பாணியில, தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவுக்கு வந்த உறுப்பினர்களுக்கு, அறுசுவை சாப்பாடு போட்டாங்க...
''மாநில தலைவரு திருநாவுக்கரசரை வரவேற்று, பேனர்களும், கொடி தோரணங்களும், அண்ணாசாலை முழுவதும், வைச்சிருந்தாங்க...
''இதுல வேடிக்கை என்னான்னா, காமராஜர் அரங்கத்திற்கு வெளியே தான், அரசர் படம் வைக்க முடிஞ்சதே தவிர, அரங்கம் உள்ளே ராஜிவ், இந்திரா, காமராஜர், சோனியா, ராகுல் படம் மட்டும் வைக்க தான், தேர்தல் அதிகாரிகள் அனுமதிச்சாங்க...
''அரசர் படத்தை உள்ளே வைக்க அனுமதிக்கலை... அதே மாதிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கழுத்துல தொங்க விடப்பட்ட அடையாள அட்டையிலும், அரசர் படம், 'மிஸ்சிங்' பா...'' என்றார் அன்வர்பாய்.
''நினைவு பரிசு தர போறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.''யாருன்னு, விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார்
அந்தோணிசாமி.''தமிழக அரசு சார்பில், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துண்டு இருக்கு... முதல்வர், அமைச்சர்கள் கலந்துண்டு, நலத் திட்ட உதவிகளை வழங்கறா...
''எல்லா மாவட்டத்துலயும் விழா முடிஞ்சதும், இதுக்காக பாடுபட்ட அதிகாரிகள்லேர்ந்து தொடங்கி, அமைச்சர்கள் வரை எல்லாருக்கும் நினைவு பரிசு வழங்கப் போறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
நண்பர்கள் நடையைக் கட்டினர்.
மின் வாரியம் பேர் சொல்லி ஆன்லைனில் மோசடி!


''அதிருப்தியாளர்கள் வெளியேற, முடிவு செய்துட்டாங்க பா...'' என, முதல் தகவலுடன், பெஞ்ச் விவாதத்தைத் துவங்கினார்அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் மாற்றத்துல, சேலம் மாவட்ட நிர்வாகி ஒருத்தரும், சென்னையைச் சேர்ந்த மாஜி, எம்.எல்.ஏ., ஒருத்தரும் கடும் அதிருப்தியில இருக்காங்க... இத்தனைக்கும், ரெண்டு பேரும், தலைவரோட ரொம்ப நெருக்கமா இருந்த மாநில
நிர்வாகிகள்...''தன் குடும்ப உறுப்பினரின் பேச்சை கேட்டு, மாநில நிர்வாகிகளை விஜயகாந்த் மாத்தின விவகாரம் தான், இவங்களோட அதிருப்திக்குக் காரணமாயிடிச்சு... இப்ப, பா.ஜ.,வுலயும், அ.தி.மு.க.,வுலயும், தலா ஒருத்தரு, ஆதரவாளர்களோட சேர தயாராகிட்டிருக்காங்க பா...''
என்றார் அன்வர்பாய்.''அதிகாரிகளை மாத்தச் சொல்லி, நெருக்கடி தர்றாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாருன்னு, விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ, துறை செயலர்கள், அனைத்து பணிகளையும் பார்ப்பாங்க... அமைச்சர்கள், தங்களுக்கு வேண்டிய காரியங்களை, செயலர்களிடம், 'பவ்யமா' கேட்டு முடிச்சுப்பாங்க... ஜெயலலிதா மரணத்திற்கு பின், பன்னீர்செல்வம், முதல்வரான பின்னும், துறை ரீதியான பணிகளில், அதிகாரிகள்
சுதந்திரமாக முடிவு எடுத்தாங்க...''இப்போ, பழனிசாமி ஆட்சி, நிலையில்லாமல் இருக்கு... இந்த வாய்ப்பை பயன்படுத்தி, துறையில் மேற்கொள்ளப்படும், 'டெண்டர்' உள்ளிட்ட அனைத்து பணிகளையும், அமைச்சர்கள் தான் பார்க்கிறாங்க... அதில், தில்லுமுல்லு நடப்பதால், அதிகாரிகள் அனுமதி தர்றதில்லை...
''இதனால், அதிருப்தி அடைந்த அமைச்சர்கள், செயலர்களை மாற்ற சொல்றதோட, தங்களோட மாவட்டத்திற்கு, தமக்கு வேண்டியவங்களை கலெக்டரா போடச் சொல்லி, நச்சரிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஊழியர்கள் நியமனமே, இன்னும் அபிஷியலா வெளியில வரலே... அதுக்குள்ள, விண்ணப்ப கட்டணம் வாங்கறோம்ன்னு சொல்லி, ஆன்லைன்ல பணம் வசூல் ஆகறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எங்கே வே...'' எனக் கேட்டார்அண்ணாச்சி.''தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர், 300 தொழில்நுட்ப உதவியாளர், 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர், 300 கணக்கீட்டாளர் பணியிடங்களை, எழுத்து தேர்வு வச்சு, நிரப்பப் போறது...
''அதிகாரப்பூர்வ விளம்பரத்தை, இன்னும் வெளியிடலே.. ஆனா சில பேர், இதைச் சொல்லி, ஆன்லைன் மூலமா பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சிருக்கறதா புகார் வந்திருக்கு ஓய்...
''பல இடங்களில், 'மின் வாரியத்தில் வேலை இருக்கு... படிவம், இந்த வெப்சைட்ல கிடைக்கும்... அதுல பதிவு கட்டணம், 1,000 ரூபாய் வரை செலுத்துங்கள்'ன்னு, சில பேர் சொல்லிண்டு திரியறா...
''பணம் கட்டினப்பறமா, மேற்கொண்டு எந்த விவரமும் தெரிவிக்க மாட்டேங்கறா... சைலன்ட் ஆகிடறா... அப்பறமா தான், 'அச்சச்சோ... இது தப்பான விளம்பரம் போலிருக்கு'ன்னு, 'அப்ளை' பண்ணினவாள்லாம் முழிச்சுக்கறா...'' என்றார் குப்பண்ணா.
நண்பர்கள் நடையைக் கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    ஆட்சி பொறுப்பிலுள்ள அதிமுகவினர், டெண்டர்களை பினாமிகள் பெயரால் எடுப்பதால் அரசின் டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. காற்று உள்ள போதே தூற்றி கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement