Advertisement

தமிழகத்தில் ஆட்சி விரைவில் கவிழும்:பிரேமலதா விஜயகாந்த் ஆருடம்

கோவை;''தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, விரைவில் கவிழும்,'' என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை காண, தே.மு.தி.க., மகளிரணி தலைவர் பிரேமலதா நேற்று கோவை வந்தார்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரித்த அவர், டாக்டர்களிடம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் ஆகியவற்றை அளித்தார். பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வினியோகித்தார்.
இதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சுத்தம், சுகாதாரம் இல்லாததே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு காரணம். திருப்பூரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளனர். கோவையில் நுாற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசு இந்த தகவலை மறைத்து, தவறான புள்ளி விபரங்களை வெளியிடுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், சுகாதாரம் குறித்த கண்காணிப்பு இல்லாமல் போய் விட்டது.
அரசு காப்பீட்டு திட்டத்தில், டெங்கு காய்ச்சலையும் சேர்க்க வேண்டும். மத்திய அரசும் போதுமான உதவி செய்ய வேண்டும்.தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, விரைவில் கவிழும். அமைச்சர்களின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. ஜெ., மரணம் தொடர்பான மர்மம் விலகினால் மட்டுமே, இதற்கு விடை கிடைக்கும்.எந்த நடிகர் கட்சி துவங்கி, அரசியலுக்கு வந்தாலும், அதை தே.மு.தி.க., திறமையாக சமாளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement