Advertisement

நவாஸ் ஷெரீப் மகன்களுக்கு 30 நாள் கெடு விதித்தது கோர்ட்

லாகூர்: பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபின் மகன்கள், ஊழல் வழக்கில் ஆஜராவதற்கு, நீதிமன்றம், 30நாட்கள் கெடு விதித்துள்ளது.
வெளிநாடுகளில், முறைகேடாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபை, உச்ச நீதிமன்றம் தகுதி இழப்பு செய்தது. இதையடுத்து, ஷெரீப், பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
ஷெரீப், அவரது மகன்கள், உசைன், ஹசன், மகள், மரியம், மருமகன், முகமது சப்தார் ஆகியோர் மீது, ஊழல் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்குகள் தொடரப்பட்டன.
இஸ்லாமாபாத், ராவல் பிண்டி தேசிய பொறுப்புஉடைமை நீதிமன்றங்களில், வழக்கு விசாரணைகள் நடக்கின்றன. ஷெரீப், அவரது மகள், மரியம் ஆகியோர், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீது, நாளை, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
ஷெரீபின் மனைவி, குல்சூம், லண்டனில் தங்கி, புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகிறார். ஷெரீபின் மகன்கள், அவருடன், லண்டனில் தங்கி உள்ளனர். பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, இவர்கள், நவ., ௧௦க்குள் ஆஜராகும்படி, ௩௦ நாட்கள் கெடு விதித்து, இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆஜராகாவிடில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி, தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, ஆளும், பாக்., முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி, எம்.பி., பெர்வாஸ் ரஷீத் கூறுகையில், ''ஷெரீபின் மகன்கள், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள்; பாக்., சட்டம், அவர்களுக்கு பொருந்தாது. அவர்கள், பாக்., நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement