Advertisement

வா.பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஆதார் போல் கட்டாயமாகுமா?விடுமுறையில் முகாம்; ஷாப்பிங்கில் கவனம்!

கோவை:கோவை மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இன்னும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளனர். ஆதார் எண் பெறுவது எந்தளவு கட்டாயமோ, அந்தளவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும் கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே, வரும் தேர்தல்களில் நாட்டில் ஆரோக்கியமான புதிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.
இந்தாண்டு ஜன., 5ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில், 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் இருந்தனர். 2018 ஜன., முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, கடந்த 3ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்த பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 28 லட்சத்து 61 ஆயிரத்து 536 பேர் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, பத்து மாதங்களில், 26 ஆயிரத்து 434 பேர் மட்டுமே, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளதாக, இந்த பட்டியல் கூறுகிறது.
ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே, ஜூலை முதல் தேதி முதல் 30ம் தேதி வரை, இளம் வயது வாக்காளர்களை குறி வைத்து ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் ஏறக்குறைய, 12 ஆயிரத்து 524 பேர் புதிதாக சேர்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் 18, 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் நிறைய பேர் உருவாகின்றனர்.இவர்களில் சிலரைத் தவிர, பிற அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை, ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இதனால் மாவட்டத்தில் இன்னும் ஏறக்குறைய ஒரு லட்சத்து 90 ஆயிரம் இளம் வயது வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராமசபா கூட்டங்களும், அக்., 8ம் தேதி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 18 முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் 5,000 பேர், 25 வயதுக்கு மேற்பட்டோர், 7,500 பேர் என மொத்தம், 12,500 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.வாக்காளர் பெயர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள தாசில்தார்கள் சிலர் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள, 2,892 ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையில்தான் வாக்காளர் பட்டியலில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 'முகாம் நடந்த ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம் என்பதால், மக்களின் கவனம் முழுவதும் ஷாப்பிங் செல்வதிலேயே இருந்தது. வரும் 22ம் தேதி நடக்கும் முகாமில், ஏராளமானோர் சேருவர் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
அரசியல் கட்சியினர் சிலர் கூறுகையில், 'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்களை, அந்தந்த மாநிலங்களின் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடும் மாதங்களில் நடத்துவதை தவிர்க்கலாம். 'தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள், ஒரு வாரத்துக்குப் பின்பே திரும்பி வருவர். ஆகவே, வரும் 22ம் தேதி நடத்த நிர்ணயித்துள்ள முகாமை, வேறு தேதிக்கு மாற்றலாம். இதன் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை கூடுதலாக சேர்க்க முடியும்' என்றனர்.
இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:நாடு முழுவதும் ஒரே தேதியில்தான் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன தேதி களில், பண்டிகை, விழாக்கள் நடக்கிறது என்பதையெல்லாம் பார்த்து, முகாம் நடத்துவது சாத்தியமேயில்லை.வரும் 31ம் தேதி வரை பெறப்படும், விண்ணப்பங்களை பரிசீலித்து, 2018 ஜன., 5ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆகவே, முகாமை வேறு தேதிக்கு தள்ளி வைப்பது சாத்தியமில்லை. பெயர் சேர்க்க விரும்புவோர், சிறப்பு முகாமுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வரும் 31ம் தேதி வரை, இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வலியுறுத்தினால் மாற்றம் சாத்தியம்!கோவை மாவட்டத்தில் ஏறக்குறைய 90 சதவீத வாக்காளர்கள், பட்டியலில் இடம் பெற்று விட்டனர். மீதமுள்ள வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ஆகவே, ஆதார் எண் பெறுவது எந்தளவு முக்கியமோ, அந்தளவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும் கட்டாயம் என, கல்லுாரி மாணவ மாணவியரை, கல்லுாரி முதல்வர்கள் வாயிலாக வலியுறுத்தலாம். அப்போதுதான் நாட்டில் ஆரோக்கியமான மாற்றமும் சாத்தியமாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement