Advertisement

ஒத்துழைப்பு இல்லை! அரசு அதிகாரிகளுக்குள் பனிப்போர் குடிநீர் குழாய் பதிப்பதில் பஞ்சாயத்து

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோடு விரிவாக்கப்பணியின் போது, குடிநீர் குழாய் உடைப்பு, பி.எஸ்.என்.எல்., இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னைகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லாததால், ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை, தேர்நிலை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை மொத்தம், 4.5 கி.மீ., துாரத்துக்கு, 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலை விரிவுபடுத்தப்படுகிறது. ரோட்டில் மையத்தடுப்புக்கு இருபக்கமும், தலா, 15 மீட்டர் அகலத்தில் ரோடு அமைக்கப்படுகிறது. நடைபாதை மற்றும் சர்வீஸ் ரோடும் அமைக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையின் இருபக்கமும், உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது.ரோடு விரிவாக்கப்பணிக்காக குழி தோண்டும் போது, குடிநீர் குழாய் உடைப்பு, பி.எஸ்.என்.எல்., இணைப்பு துண்டிப்பு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பி.எஸ்.என்.எல்., கேபிள் இணைப்புகள் அறுபட்டு, இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. இதனால், மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம் பகுதியில் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும், மின்மயானம் அருகேயிருந்த பி.எஸ்.என்.எல்., பில்லர், பொக்லைன் இயந்திரம் பட்டு சிதிலமடைந்தது. இதுவரை இணைப்பு சரி செய்யும் பணி முழு அளவில் முடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுவதால், மக்களுக்கு பி.எஸ்.என்.எல்., சேவை தடைபட்டுள்ளது.உடுமலை ரோட்டில், பொக்லைன் மூலமாக குழி தோண்டும் போது, அருகேயுள்ள கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டது.
தொழிற்பேட்டையில் இருந்து, மின்நகர் வரையுள்ள குழாய்கள் அகற்றப்பட்டன. இதனால், மாக்கினாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை நகர், திருவள்ளுவர் காலனி, கணேஷ் நகர், பாஸ்கர் நகர், கந்தசாமிபுரம் மற்றும் சின்னாம்பாளையம் பகுதிக்குட்பட்ட கிராமங்களிலும் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
கடந்த, 45 நாட்களாக குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காலி குடங்களுடன், தண்ணீரை தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தற்காலிகமாக கிடைக்கும் குடிநீரும் போதுமானதாக இல்லை.உடைந்த குடிநீர் குழாயினை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி ஊராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. குழி தோண்டுவது குறித்து எவ்வித முன் அறிவிப்பும் அவர்கள் கொடுக்கவில்லை. இதனால், தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்களிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், ஒன்றிய அதிகாரிகள் உடுமலை ரோடு தனியார் பள்ளி அருகே, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், 'ரோடு விரிவாக்கம் செய்யும் போது, மீண்டும் ரோட்டை தோண்ட அனுமதிக்க முடியாது,' என்றனர். இதனால், குழாய் பதிக்கும் பணி தடைபட்டது.அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்துக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட முயற்சித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஒன்றிய அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். இதனையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி துவங்கப்பட்டது.
அறிவிப்பு கொடுப்பதில்லை!
தெற்கு ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'இரு ஊராட்சிகளுக்கான குடிநீர் குழாய்கள் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் பதிக்கப்பட்டுள்ளன. ரோடு விரிவாக்கப்பணிக்காக குழி தோண்டும் போது, முன் அறிவிப்பு கொடுப்பதில்லை. இதனால், குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய முடியவில்லை.
போதிய நிதி வசதியில்லாததால், உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் நிதியை எதிர்பார்த்து, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதலில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. பேச்சு நடத்திய பின், தற்போது குழாய் பதிக்க அனுமதித்துள்ளனர்,' என்றனர்.
பொறுப்பேற்க முடியாது!
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு விரிவாக்கப்பணி துவங்கும் போது முறையான தகவல் கொடுக்கப்பட்டது. குழாய் உடைப்பு ஏற்படும் போதும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தான் குழாய்களை இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக இப்பணிகளை செய்ய முடியாது. ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். குடிநீர் குழாய் உடைப்பு, பி.எஸ்.என்., இணைப்பு துண்டிப்பு பிரச்னைக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்க முடியாது. தற்போது, தண்ணீர் குழாய் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement