Advertisement

இமாச்சலில் நவ., 9ல் தேர்தல் குஜராத் தேதி அறிவிப்பில் தாமதம்

இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், நவ., ௯ல் நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, டிச, ௧௮ல் நடக்கிறது. 'குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பா.ஜ.,வை சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ள, குஜராத் மற்றும் காங்கிரசை சேர்ந்த, வீர்பத்திர சிங் முதல்வராக உள்ள இமாச்சல
பிரதேச மாநில அரசுகளின் பதவிக்காலம், ஜனவரி உடன் முடிவடைகிறது.இதையடுத்து, புதிய அரசுகளை தேர்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் ஆயத்த பணிகளை செய்து வந்தது.

இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் கமிஷனர், அச்சல்குமார் ஜோதி, தேர்தல் கமிஷனர் கள், ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் சுனில்அரோரா ஆகியோர், டில்லியில் நேற்று, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இமாச்சலப் பிரதேசத்தில், சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக, நவ., 9ல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கும். இமாச்சலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
வாக்காளர்கள், தாங்கள் எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்தோம் என்பதைக் காட்டும், அடையாள சீட்டுடன் கூடிய, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் முழுமையாக பயன்படுத்தப் படும்.குஜராத் சட்டசபைதேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்; எனினும், இமாச்சல பிரதேசத்தில் ஓட்டு எண்ணிக்கை தினமான, டிசம்பர் ௧௮க்குள், குஜராத்தில் தேர்தல் முடிந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குஜராத்தில் தாமதம் ஏன்?



குஜராத்தில், சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால், சட்டசபை தேர்தல் நடத்த, அவகாசம் தரும்படி, அம்மாநில அரசு, தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்தே, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தும் தேதியை முடிவு செய்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும்,இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement