Advertisement

மூடும் நிலையில் தொழிற்சாலைகள்! பசுந்தேயிலை விலை விவகாரத்தில் திருப்பம் தரத்தை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தம்

ஊட்டி:பசுந்தேயிலைக்குரிய விலையில், நிலுவைத் தொகையை, தொழிற்சாலைகளிடம் இருந்து பிடித்தம் செய்யும் உத்தரவால், பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; இதனால், தரத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.நீலகிரியில், 150க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் இருந்து பறிக்கும் பசுந்தேயிலையை, தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர்.
கடந்த ஓராண்டாக, தேயிலை விவசாயிகள் வழங்கு பசுந்தேயிலைக்கு, தொழிற்சாலைகள் வழங்க வேண்டிய விலையை, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்கிறது; அதை, கலெக்டர் தலைமையிலான கமிட்டி கண்காணிக்கிறது.
கோடிகளில் நிலுவை
பல மாதங்களாக, பல தொழிற்சாலைகள் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த தொகைக்கு குறைவாகவே, விவசாயிகளுக்கு விலை வழங்குகின்றன. அவ்வகையில், கடந்த, டிச., 2015 முதல், ஏப்., 2017 வரை, தேயிலை தொழிற்சாலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 37 கோடி ரூபாயை தொட்டிருக்கிறது.'தேயிலை சட்டப்படி, இந்நிலுவைத் தொகையை, தொழிற்சாலைகளின் தேயிலை துாளை விற்பனை செய்து கொடுக்கும் பணி செய்யும் புரோக்கர்கள், பிடித்தம் செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்; அதை, செயல்படுத்தும் பணியில் தேயிலை வாரியம் இறங்கியுள்ளது.
மூடுவிழா நிச்சயம்
இந்நிலுவைத் தொகை பிடித்த நடவடிக்கையால், பல தொழிற்சாலைகளின் நிதி நிலை பாதிக்கப்படும்; விளைவு, அத்தொழிற்சாலைகள் மூடப்படும்.மாவட்டத்தின் பல இடங்களில், பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள், தரமற்ற தேயிலை துாளை உற்பத்தி செய்கின்றன; அவை, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. அந்த விற்பனை விலை அடிப்படையிலேயே, விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு விலை வழங்கப்படும் சூழலில், அந்த விலை, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் குறைவாக உள்ளது.தரமற்ற தேயிலை துாள் உற்பத்திக்கு, விவசாயிகள் வழங்கும் தரமற்ற தேயிலை துாளும் ஒரு முக்கிய காரணம். எனவே, தரமான தேயிலை துாள் தயாரிப்புக்கு, தரமான பசுந்தேயிலை பறித்து வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகளும் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து தரமான, முதல் தர பசுந்தேயிலையை மட்டுமே தொழிற்சாலைகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தரத்தை நோக்கி நகர வேண்டிய நிலையை, நிலுவைத் தொகை பிடித்த உத்தரவு ஏற்படுத்தியிருக்கிறது.
தளர்வுக்கு பரிந்துரை
நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் போஜராஜ் கூறியதாவது;நிலுவைத் தொகை பிடித்தம் செய்யும் நடவடிக்கை அமலுக்கு வந்தால், பல தொழிற்சாலைகள் மூடப்படும். கடந்த, ஏப்ரல் துவங்கி, நீலகிரி தேயிலைக்கான சந்தையில், கிராக்கி இல்லை; அதனால், விற்பனை விலை குறைந்தது; அதன் விளைவாக தான், பல தொழிற்சாலைகளால், தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை, விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை.இக்காரணத்தை தேயிலை வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிலுவைத் தொகை பிடித்தம் செய்யும் அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, கடிதம் கொடுத்துள்ளோம். இவ்வாறு, ரமேஷ் போஜராஜ் கூறினார்.
'இன்கோ' நிலைபாடு என்ன?
தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை வழங்காத தொழிற்சாலைகளின் பட்டியலில், மாநில அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 'இன்கோ' தொழிற்சாலைகள் தான், 60 சதவீத அளவுக்கு இடம் பிடித்துள்ளன.'இன்கோ' நிறுவனங்கள், தங்கள் தேயிலை துாளை நேரடியாக, 'டீ சர்வ்' ஏல மையம் மூலம் விற்கின்றன; அங்கு, தனியார் ஏல மையத்தை போன்று, அங்கு புரோக்கர்கள் இல்லை.

'இன்கோ சர்வ்' மேலாண்மை இயக்குனர் வினித் கூறியதாவது;'பாட்லீப்' மற்றும் 'இன்கோ' தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் பல வித்தியாசங்கள் உள்ளன. 'இன்கோ' நிறுவனம், லாப நோக்கில் இயங்குவதில்லை; உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் நலன் கருதியே செயல்படுகிறது. ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாயை அரசுக்கு, 'டிவிடண்ட்' ஆக செலுத்துகிறது.தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை வழங்காத தொழிற்சாலைகளிடம் இருந்து, நிலுவைத் தொகையை பிடித்தம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு தொடர்பாக, அரசின் வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, வினித் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement