Advertisement

கொசு ஒழிப்புமுறை பின்பற்றாததால் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்

புதுப்பேட்டை : கொசு ஒழிப்பு முறையை பின்பற்றாத, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 12.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.சென்னை, புதுப்பேட்டையில், பழைய மோட்டார் வாகன உதிரி பாகங்கள், டயர்கள் விற்பனை கடைகள், 600க்கும் மேற்பட்டவை உள்ளன.இப்பகுதியில், சுகாதார துறை முதன்மை செயலர் ராதா கிருஷ்ணன், பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்தியன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் மற்றும் கடை விற்பனையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், தேங்காய் ஓடு, ஆட்டுக்கல், மூடப்படாத டிரம்ப், உடைந்த வாகன உதிரி பாகம், பிளாஸ்டிக் பொருள், கட்டுமான இடங்களில் தேங்கும் மழைநீரில், புழு உற்பத்தியாகும் விதம் குறித்து அறிவுரைகள் வழங்கினர்.இது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பேசியதாவது:சென்னையில் உள்ள, 200 வார்டுகளில், டெங்கு மற்றும் இதர காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதில், மலேரியா தொழிலாளர், துப்புரவு பணியாளர், பொது சுகாதார ஊழியர் என, 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.பொதுமக்கள், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருளை அப்புறப்படுத்த வேண்டும். மீறி, வீடுகளில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்டால் அபராதம்விதிக்கப்படும்.தண்ணீர் தொட்டிகளை உரிய பராமரிப்பின்றி வைத்திருந்த உணவகம், டீ கடை, பழைய இரும்பு, டயர் விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 12.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement