Advertisement

சென்னை முழுவதும் 187 டன் மக்காத குப்பை சேகரிப்பு

சென்னை, அக். 13-

சென்னை மாநகராட்சி, இரண்டாவது வாரமாக நேற்று, மக்காத குப்பையை மட்டும் வீடுகளில் இருந்து சேகரித்தது. இதில், 187 டன் குப்பை பெறப்பட்டன. கடந்த வாரத்தை விட, இரு மடங்கு அளவிலான மக்காத குப்பை வீடுகளில் இருந்து பெறப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2016, இம்மாதம், 2ம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி, தினமும் வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை, மாநகராட்சி ஊழியர்கள் சேகரிப்பர். மக்கும் குப்பை, தினமும் பெறப்படும். மக்காத குப்பை, வாரந்தோறும் புதன்கிழமையில் மட்டும் பெறப்படும் என, மாநகராட்சி அறிவித்தது.
இந்த திட்டம் துவங்கப்பட்ட நாளான, 4ம் தேதி, அனைத்து மண்டலங்களிலும் வீடு வீடாக சென்ற ஊழியர்கள், மக்காத குப்பையை மட்டும் பெற்றனர். இதில், மொத்தம், 83.4 டன் மக்காத குப்பை மட்டுமே கிடைத்தது.
பொதுவாக, சென்னை மாநகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 5,000 டன் குப்பை சேகரமாகிறது. அதில் குறைந்தபட்சம், 20 சதவீதம் மக்காத குப்பை வரும் என, கூறப்பட்ட நிலையில், முதல் வாரம், 2 சதவீதம் கூட மக்காத குப்பை சேகரிக்கப்படவில்லை.
அடுத்தடுத்த வாரங்களில், இந்த குப்பை அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பினர். இதன்படி, இரண்டாவது வார புதன்கிழமையான நேற்று, மக்காத குப்பை பெறப்பட்டது.
இதில், ஒட்டு மொத்தமாக, 187 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. கடந்த வாரத்தை விட, இரு மடங்கு குப்பை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, மணலி மண்டலத்தில், 59 டன்னும், குறைந்தபட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில், 2.92 டன்னும், மக்காத குப்பை சேகரிக்கப் பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள், மெல்ல விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். இதனால், மக்காத குப்பை சேகரித்து, மாநகராட்சிக்கு வழங்குகின்றனர். அடுத்தடுத்த வாரங்களில், மக்காத குப்பையின் அளவு மேலும் அதிகரிக்கும்,' என்றார்.

மண்டல வாரியாக பெறப்பட்ட மக்காத குப்பையின் அளவு
மண்டலம் மக்காத குப்பை அளவு (டன்னில்)
கடந்த வாரம் நேற்று
திருவொற்றியூர் 6 16.18
மணலி 8.31 59.01
மாதவரம் 7.87 12.89
தண்டையார்பேட்டை 2.99 6.94
ராயபுரம் 2.96 3.20
திரு.வி.க.நகர் 5.43 5.73
அம்பத்துார் 15.69 16.31
அண்ணாநகர் 2.06 11.32
தேனாம்பேட்டை 0.91 2.92
கோடம்பாக்கம் 5.64 12.36
வளசரவாக்கம் 5.43 14.55
ஆலந்துார் 2.40 3.38
அடையாறு 5.14 5.19
பெருங்குடி 4.46 9.04
சோழிங்கநல்லுார் 8.14 8.12
மொத்தம் 83.4 187.21

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement