Advertisement

விரைவில் டெண்டர் கோர முடிவு - ரூ.300 கோடி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை : மிதிவண்டி பகிர்ந்து பயன்படுத்தும் திட்டம், வாகன நிறுத்த மேலாண்மை உள்ளிட்ட, 300 கோடி ரூபாய் செலவிலான, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு, உயர்மட்ட குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான, உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில், 300 கோடி ரூபாய் செலவிலான, 17 வகையான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு, டெண்டர் கோர, உயர்மட்ட குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மொத்தம், 12 ஆயிரத்து, 47 வாகனங்களை நிறுத்தும் வகையில், சென்னை முழுவதும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டங்களுக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இங்கு, ஒரு மணிநேரத்திற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும், பிரீமியம் வாகன நிறுத்த கட்டணங்களுக்காக, 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில், 378 இடங்களில் மிதிவண்டி பகிர்ந்து பயன்படுத்தும் திட்டத்தில், நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 5,000 மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்படும். மக்களின் வரவேற்பை பொறுத்து, மிதிவண்டிகள் மேலும் அதிகரிக்கப்படும்.தி.நகர் பகுதியில் மட்டும், 1,900 கட்டடங்களில், சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவும், இதன் மூலம், ஐந்து மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 25 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக பூங்கா, தி.நகரில், 5.5 கி.மீ., நீளத்திற்கு, 9.37 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம், 210 கோடி ரூபாய் செலவிலான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய திட்டங்களுக்கும் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.மின் வாரியம் சார்பில், 12 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 9.5 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளன. சென்னை குடிநீர் வாரியம், தி.நகரில் குடிநீர் வழங்கும் அளவை துல்லியமாக கணக்கிட, 251 இடங்களில், 11.63 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் மீட்டர் அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி, தி.நகர் பகுதிகளில், 7.98 கோடி ரூபாய் செலவில், தெருவிளக்குகளை கண்காணிக்கும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஒட்டுமொத்தமாக, 300 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு, ஒப்பந்தம் கோரவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை துவங்கவும் துறை அதிகாரிகளுக்கு, உயர்மட்ட குழு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement