Advertisement

12 அடி உயரத்தில் கன்டெய்னர் லாரிகள் நிற்கணுமாம்! சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் ஏடாகூட முயற்சி

தரையில் இருந்து, 12 அடி உயரத்தில், கன்டெய்னர் லாரிகள் நிற்பதற்கான முனையத்தை, திருவொற்றியூரை அடுத்த, சாத்தாங்காடு பகுதியில் அமைக்க, பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை துறைமுகத்துக்கு வரும் கன்டெய்னர் லாரிகள், சாலையோரங்களில் காத்திருப்பதால், பல்வேறு பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, புதிய கன்டெய்னர் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சாத்தாங்காடு இரும்பு விற்பனை அங்காடிக்கு எதிரே உள்ள, வருவாய் துறை நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தை பெற, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.

நீர் வடிநில பகுதி:
இந்த நிலம், மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கும் பகுதி என கூறப்படுவதால், சி.எம்.டி.ஏ., திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. வருவாய் துறை ஆவணங்களிலும், நீர் வடிநில பகுதியாக இந்நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் கன்டெய்னர் முனையம் அமைப்பதற்காக, தரையில் இருந்து, 12 அடி உயரத்தில், லாரிகள் நிற்பதற்கான தரைப்பகுதி இருக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சான்று அளித்துள்ளனர். இருப்பினும், 'இந்த பகுதி கட்டுமான பணிக்கு ஏற்றது' என, அண்ணா பல்கலைக்கழகத்திடம் சான்று பெறுவதற்கான முயற்சியில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: அதிக சுமையுடன் வரும் கன்டெய்னர் லாரிகள், மேடான பகுதியில் சிரமப்பட்டு தான் நகரும். இத்தகைய சூழலில், தரையில் இருந்து, 12 அடி உயரத்தில் கன்டெய்னர் லாரி முனையம் அமைக்க திட்டமிடுவது, 'ஏடாகூட' முயற்சியாக உள்ளது.

கணிசமான தொகை:
தரை மட்டத்தில், கன்டெய்னர் லாரிகள் நிற்க வேண்டுமானால், தரையை பலப்படுத்த வேண்டும். இதில், 12 அடி உயரத்துக்கு துாண்கள் அமைத்து, கான்கிரீட் தளம் அமைக்க டெண்டர் விட்டு, கணிசமான தொகையை கமிஷன் பார்க்கும் நோக்கம் இருக்குமோ என, சந்தேகம் எழுந்துள்ளது.கலந்தாலோசனை அமைப்பாக இருக்க வேண்டிய, சி.எம்.டி.ஏ., கட்டுமான திட்டங்களில் இறங்கியதன் விபரீத விளைவு இது. துவக்கத்திலேயே இதை தடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement