Advertisement

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் நீதிமன்ற உத்தரவால் மீட்பு

வளசரவாக்கம் : நெடுஞ்சாலை துறை இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி, அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.
சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலையோர உள்ள நிலம், 2013ல், அந்நிலத்தின் உரிமையாளரால், சி.எம்.டி.ஏ.,வுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதை, சி.எம்.டி.ஏ.,வினர், நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த இடத்தை ஆக்கிரமித்த தனிநபர், 'ஷீட்' மூலம் கூடாரம் அமைத்திருந்தார். இதனால், அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து, புகாரை போலீசார் ஏற்க மறுத்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை, நெடுஞ்சாலைத் துறையினர் கிடப்பில் போட்டர். இந்த இடத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு இலவசமாக வழங்கிய உரிமையாளர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்ற உத்தரவிட்டது. போலீசார் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திர உதவியுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நேற்று காலை ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது: இந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த சிலர், கூடாரம் அமைத்திருந்தனர். அவர்கள், பூந்தமல்லி நீதிமன்றத்தில், 'ஸ்டே ஆடர்' பெற்றிருந்ததால், நிலத்தை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, நீதிமன்ற உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement