Advertisement

ஆர்.ராகவன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி; கொள்ளிடக்கரையில் உடல் தகனம்

திருச்சி: 'தினமலர்' பங்குதாரரும், திருச்சி, வேலுார் பதிப்பு ஆசிரியருமான, ஆர்.ராகவனுக்கு, குடும்பத்தினர், உறவினர்கள், ஊழியர்கள் மற்றும் பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவர் உடல், கொள்ளிடக்கரையில், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

'தினமலர்' நிறுவனர், டி.வி.ஆரின் நான்காவது மகனும், 'தினமலர்' பங்குதாரரும், திருச்சி, வேலுார் பதிப்புகளின் ஆசிரியருமான, ஆர்.ராகவன், திருச்சியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள, அவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஆர். ராகவன் உடலுக்கு, தி.மு.க., செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சார்பில், முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலருமான, நேரு தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திர பாண்டியன், மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்,துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் பிரதீப்...தனலட்சுமி சீனிவாசன்
கல்வி குழுமங்களின் சேர்மன் சீனிவாசன்,
தமிழக காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலர் மன்னார்குடி ரங்கநாதன், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன்... தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் கோவிந்த ராஜுலு, திருச்சி கலெக்டர் ராஜாமணி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் இரங்கல்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள்
மத்திய அமைச்சர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த்...திரைப்பட இயக்குனர் பாலா,கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, வேலுார், வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன்...பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி ஆகியோர், ஆர். ராகவனின் மகன்கள், ஆர்.ராமசுப்பு, ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரங்கல் தெரிவித்தனர்.

ஆர்.ராகவனின் இறுதிச் சடங்கு, திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள அவர் இல்லத்தில், நேற்று மதியம், 3:௦௦ மணிக்கு நடந்தது. ஆர்.ராகவன் மகன்கள், இறுதி சடங்கு களை செய்தனர்.ராகவன் உடன் பிறந்தவர்களான, டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஆர்.சத்தியமூர்த்தி, எஸ்.லட்சுமி, ஆர்.ராகவன் மனைவி ஆர். சுப்புலட்சுமி மற்றும் அவர்களின் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், குடும்பத்தினர்கள் மற்றும், 'தினமலர்' ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். பின், ஆர்.ராகவன் உடல், ஊர்வலமாக, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடக் கரையில் உள்ள, திருமங்கை மன்னன் படித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு
ஈமக்கிரியை நடந்தது. ஆர்.ராகவன் சிதைக்கு, அவர் மூத்த மகன், ஆர்.ராமசுப்பு தீ மூட்டினார்.

பண்பாளர் ஆர்.ராகவன் மறைவு
பத்திரிகை துறைக்கு பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி

முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை: 'தினமலர்' நாளிதழின் பங்குதாரரும், திருச்சி மற்றும் வேலுார் தினமலர் பதிப்புகளின் ஆசிரியருமான, ஆர்.ராகவன் அக்டோபர், 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் மகனான, ஆர்.ராகவன், தமிழ்நாடு முழுவதும் நெடிய பயணங்கள் மேற்கொண்டு, அந்தந்த ஊர்களின் பொதுச் செய்திகள், உள்ளூர் வணிகச் செய்திகள் ஆகியவற்றை வெளியிடச் செய்து, 'தினமலர்' நாளிதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்தார்.பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் ராகவன். கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளருமான, ஆர். ராகவனின் மறைவு, பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தினகரன் புகழஞ்சலி
தினமலர் பத்திரிக்கை அதிபர்களில் ஒருவரான திரு ராகவன் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் இவ்வாறு தினகரன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  டி.வி.ராம சுப்பையர் மகன் ஆர். ராகவன் அவர்களது மறைவிற்கு எனது இதய அஞ்சலி... அவர்களது குடும்பத்தினருக்கும், தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்........

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உழைப்பால் உயர்ந்து உதாரணமானவருக்கு அஞ்சலிகள்

 • IRSHAD - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அன்னாரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும் தினமலர் அலுவலர்களுக்கும் .என்னை போன்ற வாசகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ...

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  மரியாதைக்குரிய மாமனிதர். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  தினமலர் நிறுவனரின் புதல்வர், என்ற அளவில் மட்டுமே இந்த இறப்பு செய்தி எனக்கு பட்டது, ஆனால் அவரை பற்றிய செய்திகளை படித்தவுடன் தான் தெரிகிறது அவருடைய திறமை, மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த தினமலரை முன்னேற்ற அவர் ஆற்றிய தொண்டு, புரிந்து கொள்ள முடிகிறது, அந்த காலத்தில் இருந்த பத்திரிக்கைகள் அலைஓசை, நவசக்தி, சுதேசமித்திரன், இப்படி பல மூடுவிழா கண்ட போது, இவர் அசராமல் தினமலரை முதன்மை நாளிதழாக்க பாடுபட்டது, அவரது உழைப்பை புரிந்து கொள்ள முடிகிறது, அவர் ஒரு சாதனையாளர், எப்படி வாழ்ந்தோம் என்பதை விட, எப்படி மரணித்தோம் என்பது தான் முக்கியம், அந்த வகையில் ஆசிரியரின் மறைவு கம்பீரமானது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அன்னார் ஆத்மா சாந்திபெற இறைஞ்சுகிறேன்

 • உஷாதேவன் -

  மரியாதைக்குரிய மாமனிதர் மனதை பாரமாக்கி மறைந்து விட்டார். நம்மை தேற்றிக் கொண்டு பணிகளை தொடர இறைவன் சக்தி தர வேண்டுகிறேன்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  ஆழ்ந்த இரங்கல்கள் ... அன்னார் மறைந்தாலும் தினமலர் தன் பணியை தொடரட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement