Advertisement

தந்தை, தாய் பேணுவோம்

தந்தை, தாய் பேண்...

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு நிகரானவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே. பிள்ளையைக் கருவுற்ற காலத்திலிருந்து கடைசிக் காலம் வரைக் காப்பாற்றும் பெற்றோர்களை இந்தியாவில் எங்கும் காண முடியும்.
இதை தான் திருவள்ளுவர் தன் திருக்குறளில் 'மக்கட் பேறு' எனும் அதிகாரத்தில் கூறியிருப்பதாவது:'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறவறிந்தமக்கட்பேறு அல்ல பிற'
இதன் பொருள் ஒருவர் பெற வேண்டியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறியத் தகுந்த மக்களை பெறுதலன்றி சிறந்ததொன்றுமில்லை என்பதாகும்.அப்படிப்பட்ட மக்களைப் பெற்ற பின் அந்த தந்தையும், தாயும் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நொடியையும் பிள்ளைகளுக்காக வாழ்வது தான் தனிச்சிறப்பு. ஒரு தாய் தன் குழந்தைகளை பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமக்கிறாள். ஆனால் ஒரு தந்தை தன் பிள்ளையை வயிற்றிலிருந்து வெளியே வந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார்.வாழ்நாள் முழுவதும் வலிகளை சுமப்பதால் தான் ஆண்டவன் ஆண்களுக்கு பிரசவ வலியை வைக்கவில்லை. பொதுவாக அன்பு, தியாகம் இவையனைத்திற்கும் தாயை தான் எல்லோரும் உதாரணமாக கூறுவர். ஆனால் ஒரு தந்தையின் அன்பு அதை விட மிகுதியானது என்பது உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீக்குச்சியின் மரணம். ஆனால் நாம் தியாகத்திற்கு எடுத்துக்காட்டாய் மெழுகுவர்த்தியை தான் கூறிக் கொண்டிருக்கிறோம். மெழுகுவர்த்தி எரிவதற்காக உயிரை விட்ட தீக்குச்சியை கூறுவதில்லை.
ஒரு தந்தையானவர் ரோஜாச்செடியை போன்றவர். ரோஜாச்செடி தனக்காக முட்களையும், பிறருக்காக ரோஜாக்களையும் தருவது போல தான் தன் துன்பத்தை கூடக் கருதாமல் பிள்ளைகளின் நலனை மட்டுமே நினைப்பவன். ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

ஆயிரம் ஆசிரியருக்கு சமமானவர் : ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியருக்கு சமமானவர். ஒவ்வொரு தந்தையும் குழந்தையினுடைய முதல் கதாநாயகன் என்பது உலகறிந்த உண்மை. நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும், தியாகமும் இருக்கிறது என அர்த்தம்.
ஒரு தாயானவள் தன் பிள்ளை தன்னுடனே எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அதை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள். ஆனால் ஒரு தந்தையோ தன் குழந்தை தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்று விட வேண்டும் என்ற துடிப்புடன் அதனைத் தன் தோள்களில் துாக்கி சுமக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் இளம் வயதில் கதாநாயகனாக தெரிந்த தந்தை இளைஞரான பின் வில்லனாக தெரிந்து இறுதியில் இறைவனாக தெரிவான் என்பது தான் காலத்தின் நியதி.
ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைகளுக்கு நல்ல உடை வாங்குவதற்காக தன் ஆசைகளை தியாகம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.

பிள்ளைகளுக்காக தவ வாழ்க்கை : ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளுக்காகவே தவமாய் தவமிருந்து வாழ்கின்றனர். ஒரு வீட்டில் இரு பிள்ளைகள் இருந்து ஒரு மாம்பழம் இருந்தால் தனக்கு மாம்பழம் பிடிக்காது என தன் பிள்கைளுக்காக மாம்பழத்தை விட்டு கொடுப்பவள் தான் தாய்.
ஆனால் இன்று நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது. அன்னையர் தினம் மறந்து விடுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன் கடந்த காலத்தை மறக்கிறோம்; பெற்றவர்களை புறக்கணிக்கிறோம். எதற்காக வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி தெரியாமல் இயந்திரங்களுடன் இயந்திரத்தனமாய் வாழ்கிறோம். காலத்தின் கட்டாயத்தால் பெற்றவர்களை பிரிய வேண்டி சூழ்நிலையோ அல்லது ஒதுக்க வேண்டி நிலையோ உருவாகும் போது அவர்கள் உணர்வுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதில் நமக்கு அக்கறையும் இல்லை.

'பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.
ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

தியாக தீபங்கள் : பிள்ளைகளை வளர்ப்பதற்காக தியாகம் செய்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் வீட்டில் அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக சம்பளமில்லா ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதிலும் முன்னுரிமை அம்மாக்களுக்கே. அப்பாக்கள் எல்லோரும் வாகனத்தின் உதிரி பாகங்கள் போல கழற்றி எறியப்படுகின்றனர். அம்மாக்களை வரவழைப்பதால் தங்களது பிள்ளைகளையும் பராமரிக்க முடியும். குடும்பத்தையும் பராமரிக்க முடியும் என்பதால் மட்டுமே அம்மாக்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு.
அந்த பெற்றோர்கள் நோய்வாய் பட்டிருந்தால் அவர்களை நேரத்திற்கு மருந்து கொடுக்கவும், ஆறுதல் சொல்லவும் கூட நாதியில்லாமல் தனக்கு தானே மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வயதான காலத்தில் தான் பெற்ற பிள்ளைகளோடும், தன் பேரன், பேத்திகளுடனும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய காலத்தை முதியோர் இல்லத்தில் தொலைத்து கொண்டு தொலைந்துபோன பெற்றோர்களும் உண்டு.

வசைபடாத உள்ளம் : இத்தனையும் பொறுத்து கொண்டு பெற்ற மனது பிள்ளைகளை வாழ்த்துமேயன்றி வசைபாடாது. வாழை, தன்னை வெட்டியவன் வீட்டிலேயே தோரணமாக தோங்குவது போல தான் பெற்றோரும் பிள்ளைகள் தங்களை அவமானப்படுத்தினாலும் அவர்கள் நலனையே விரும்புவர். ஒரு நாள் ஒரு முதியோர் இல்லத்தில், ஒரு தந்தை மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரது மகனை முதியோர் இல்லத்திற்கு வரவழைத்தனர். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கழித்து அன்று தான் தன் மகனை சந்திக்கிறார் முதியவர். மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட தந்தையை பார்த்த மகனுக்கு குற்ற உணர்ச்சி மேலிட்டது. அவன் தன் தந்தையிடம் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா. நான் ஏதாவது செய்து தரட்டுமா என கேட்டான். அதற்கு அந்த முதியவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் மகனே. மரணம் என்னை அழைக்கிறது. ஆனால் இந்த முதியோர் இல்லத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. விளக்கு வசதிகளும் இல்லை. எனவே இந்த முதியோர் இல்லத்திற்கு விளக்கு வசதியும், மின் விசிறி வசதியும் செய்து கொடு என்றார். மகனுக்கு மிகவும் ஆச்சர்யம். வாய்விட்டு தந்தையிடம், ''இத்தனையாண்டு காலம் நீங்கள் இங்கு தங்கியிருந்தாலும் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. ஆனால் இறக்கும் தருவாயில் இதை கேட்கிறீர்களே. இதனால் உங்களுக்கு என்ன பயன்,'' என கேள்வி எழுப்பினான்.

எல்லாம் உனக்காக : உடனே முதியவர், ''மகனே, இது எனக்காக அல்ல. உனக்காக. இன்னும் சில ஆண்டுகளில் நீயும் இங்கு வரலாம். அப்போது நீ மின் விசிறியின்றி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தான் கூறினேன்,'' என்றார். வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா?

-எஸ்.ராஜசேகரன்
தலைமையாசிரியர் (பொறுப்பு),
இந்து மேல்நிலைப் பள்ளி,
வத்திராயிருப்பு
94429 84083.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement