Advertisement

தமிழக அரசியலில் புதிய மாற்றம்!

தங்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்து செல்ல அரசியல் கட்சிகளை நம்பியிருந்த மக்கள், அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை இழந்து, தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி போராடி வருவதை, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களில் தெரிந்து கொள்ளலாம்.
அரசியல்வாதிகளின் போலி மதச்சார்பின்மை காரணமாக, அவர்களிடம் நம்பிக்கை இழந்த மக்கள், மத குருமார்களிடம் நம்பிக்கை கொண்டனர். ஜனநாயக அமைப்பிற்கே சவால் விடும் அளவிற்கு மத குருமார்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் அமைந்திருந்தது.
இதை, ஹரியானா மாநிலத்தில், 'தேரா சச்சா சவுதா' ஆன்மிக அமைப்பு தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவரின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறை சம்பவங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கடுமையான மதக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில், இன்று அந்த சமுதாயப் பெண்களே, 'முத்தலாக்' என்னும் விவாகரத்து முறையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 'ஹிந்துத்வா' கட்சி என, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் முத்திரை குத்தப்பட்ட, பா.ஜ., அண்மைக் காலத்தில், வட மாநிலங்களில், மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, ஆட்சிக்கு வந்திருப்பது போல, தமிழகத்திலும் வருமா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் இன்று விவாதப் பொருளாக ஆகியிருக்கிறது.
தமிழக அரசியல், 50 ஆண்டுகளாக திராவிட இன உணர்வை மையமாக வைத்து இயங்கிய நிலை மாறி, மதவாத அரசியலாக இருக்குமா அல்லது மதச்சார்பின்மை அரசியலாக இருக்குமா என்ற கேள்விக்கு விடை காணக் கூடிய விதத்தில் இருக்கும் என்பதை, அண்மை காலமாக தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன.
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகி இருக்கிறது. சிறுபான்மை சமுதாயத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, காங்கிரஸ், தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகள், மதச்சார்பின்மையை சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி வருவது தான், மக்களின் இந்த சிந்தனை மாற்றத்திற்கு காரணம்.
இக்கட்சிகள், மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு பதிலாக, இந்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே ஒற்றுமையின்மையை உருவாக்குவதிலும், காழ்ப்புணர்ச்சியை துாண்டும் விதத்திலும் செயல்படுகின்றன.
ஓட்டு வங்கி அரசியலை கடைப்பிடிக்கும் இவர்களால் தான், ஒற்றுமையாக வாழ விரும்பும் பல தரப்பு மக்களிடையே பிளவும், மோதல்களும் நிகழ்கின்றன.
மதச் சார்பின்மை விஷயத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய காங்கிரஸ், தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகள், ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் பண்டிகைகளையும் கேலியும், கிண்டலும் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.
அதே வேளையில், இக்கட்சிகளின் தலைவர்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதச் சடங்குகளில் பங்கேற்று, நோன்பு கஞ்சி சாப்பிடுவதும், அவர்களோடு இவர்களும், மதவாதிகள் போல நடந்து கொள்வதும், ஹிந்துக்கள் மத்தியில் இக்கட்சிகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதை சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஹிந்துத்வா கொள்கையை முன்னிறுத்தும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூற்றில் உண்மை இல்லை என்ற புரிதலும், அக்கட்சிகள் பின்பற்றுவதாகக் கூறும் மதச்சார்பின்மை எந்த அளவுக்கு உண்மையானது என்பது பற்றியும், மாறுபட்ட கருத்துகள் கூறப்படுகின்றன.
அரசியல் கட்சியாக இல்லாமல், ஹிந்து மத கலாசார, பண்பாட்டு இயக்கமாக செயல்பட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, உயிர்த் தியாகம் செய்தும், ஆயுட்கால சிறைத் தண்டனையும் அனுபவித்த பல்லாயிரக்கணக்கான, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் தியாக வரலாற்றை, காங்கிரஸ் மறைத்தது.
மஹாத்மாவின் கொலையை தன் பிரசார ஆயுதமாகக் கையாண்டு, 60 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை, காங்கிரஸ் கட்சியையே சேரும் என்ற, பா.ஜ.,வின் விமர்சனத்தில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
கடந்த, 1930ல் நடந்த சட்ட மறுப்பு போராட்டத்தில் துவங்கி, 1942ல் நடைபெற்ற, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் வரை பிரிட்டிஷ் இந்தியா அரசுக்கு எதிராக பல போராட்டங்களில் பங்கேற்று, ஆயிரக்கணக்கான, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சிறை சென்றனர்; துாக்கிலிடப்பட்டனர்.
அதுபோல, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர், ஹெட்கேவாருக்கு, ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் செய்ததை, மக்களிடம் பா.ஜ., எடுத்துச் சொல்லத் தவறி விட்டது.
கடந்த, 1932 டிசம்பரில், பிரிட்டிஷ் இந்தியா அரசு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், 'அரசு ஊழியர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்தால் கடுமையான தண்டனைக்கு ஆளாவர்' என, எச்சரித்தது.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்யும் நோக்குடன், 1934ல் பிரிட்டிஷ் இந்திய அரசு, அதை ஒரு, 'வகுப்புவாத அமைப்பு' என, முத்திரை குத்தி, தடை செய்ய முயன்றது. ஆனால், அதற்கு முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு இல்லாததால், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசு கைவிட்டது.
கடந்த, 1940, ஆகஸ்ட் 5ல், பிரிட்டிஷ் இந்திய அரசு இந்தியப் பாதுகாப்பு சட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் சீருடை அணிவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் தடை விதித்தது. இதை எதிர்த்த லட்சக்கணக்கான, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர்.
கடந்த, 1942ல் மஹாத்மா, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை அறிவித்த போது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் கலந்து, காவல் நிலையங்களை தாக்கினர்.
காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பலர் கொல்லப்பட்டனர். கைதானவர்களில் பலர் துாக்கிலிடப்பட்டும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் செயல்பட்ட, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு மஹாத்மா காந்தியின் படுகொலை, எதிர்பாராத பின்னடவை
ஏற்படுத்தியது,
இதில், வேடிக்கை என்னவென்றால், 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளாத இடதுசாரிகள், 'ஆர்.எஸ்.எஸ்., சுதந்திரப் போராட்டம் எதிலும் கலந்து கொள்ளவில்லை' என, பிரசாரம் செய்து வருவது தான்.
மதச் சார்பின்மை இன்று, நாடு தழுவிய அளவில், விவாதப் பொருளாக ஆகியிருப்பதற்கு, இந்திய அரசியல் சாசனத்தில் மதங்கள் சம்பந்தமான விஷயங்களில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர், சட்ட வல்லுனர்கள்.
நம் அரசியல் சாசனத்தில், இந்து மதச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது போல், இஸ்லாமிய மதத்தில் செய்யப்படாமல், முஸ்லிம்கள் அவர்களின் மத நுாலில் கூறப்பட்டுள்ள, 'ஷரியத்' சட்ட விதிகளைப் பின்பற்றும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.
மதச் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பினும், மதங்களுக்கிடையே சமத்துவம் இல்லை என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, பா.ஜ., கோருகிறது.
கொள்கை ரீதியாக, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட அப்போதைய பிரதமர் நேரு, அதைச் சட்டமாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்தியா மதச் சார்பற்ற அரசை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, மத நல்லிணக்கத்தை நிலை நாட்டுவது, அனைத்துப் பிரிவு மக்களின் தலையாய கடமை.
அனைத்து அரசியல் கட்சிகளும், போலி மதச்சார்பின்மையைக் கைவிட்டு, மத நல்லிணக்கத்திற்கு பாடுபட வேண்டும். மதச் சார்பின்மை பற்றிப் பேசி, சிறுபான்மை மக்களின் ஓட்டுகளைப் பெற, ஓட்டு வங்கி அரசியல் புரியும், தி.மு.க., மதவாதக் கட்சி என, பா.ஜ.,வை, முத்திரை
குத்துகிறது,
ஆனால், அதே, பா.ஜ.,வுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்து, வாஜ்பாயின் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது, பா.ஜ., மதவாதக் கட்சி என, அந்த கட்சிக்கு எப்படி தெரியாமல் போனது?
தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நடந்த மதக் கலவரங்களை மறைத்து, பா.ஜ., ஆட்சியின் போது தான், மதக் கலவரங்கள் நடந்ததாகவும், நடந்து வருவதாகவும், காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்வது நகைப்புக்குரியது.
ஜெயலலிதாவின் மரணமும், கருணாநிதியின் செயலற்ற நிலையும், காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - த.மா.கா., - இடதுசாரி கட்சிகள் ஆகியவை மக்கள் செல்வாக்கை இழந்துள்ள நிலையில், ஹிந்துத்வா கொள்கையை முன்னிறுத்தும், பா.ஜ.,வுக்கு, தமிழக அரசியலில் புத்துயிர் ஊட்டுவதாக இருக்கிறது.
பெரும்பான்மை ஹிந்துக்களின் பார்வை, பா.ஜ., பக்கம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், பா.ஜ., - அ.தி.மு.க.,வுடனும், கிருஷ்ணசாமியின், 'புதிய தமிழகம்' கட்சியுடனும், கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
தேர்தல் நெருங்கும் போது மட்டும் சில கட்சிகள் இக்கூட்டணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம், பா.ஜ., தமிழகத்தில் வலுவாக கால் ஊன்றுவதற்கும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கும் வழிவகுக்கும்.
தற்போது பலமான எதிர்க்கட்சியாக இருக்கும், தி.மு.க.,வுக்கு இப்புதிய திருப்பம், நிச்சயம் மிகப்பெரிய
சவாலாக அமையும்.இமெயில்: krishna_samy 2010yahoo.com. - ஜி.கிருஷ்ணசாமி --எழுத்தாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், (பணி நிறைவு)
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • balakrishnan - Mangaf,குவைத்

    இன்றய தமிழ் நாட்டின் நிலைமையை சரியாக எடுத்துரைத்துள்ளீர்கள் .

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement