Load Image
Advertisement

குடிநீர் இல்லாததால் கிராம மக்கள் ஊரை காலி செய்யதிட்டம்:குடம் 15 ரூபாய்க்கு விற்பனை: படிப்பை கைவிடும் மாணவிகள்

சிவகங்கை;திருப்புவனம் அருகே உள்ள மிக்கேல்பட்டினம் கிராமமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாததால் ஊரை காலி செய்து விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேற திட்டமிட்டுள்ளனர். அங்கு ஒரு குடம் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மாணவிகள் பள்ளிபடிப்பை கைவிட்டு விட்டு தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிக்கேல்பட்டினம், பச்சேரி, கல்லுாரணி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. கானுார் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்த இந்த நிலங்கள், கண்மாய் வறண்டதால் தரிசு நிங்களாக மாறிவிட்டன. இக்கிராமங்களில் உள்ள கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் 10 கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய கூலி வேலைகளை நம்பி இருந்த மக்கள் கட்டட வேலைகளுக்கும், 100 நாள் வேலைக்கும் செல்கின்றனர். பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.

குறிப்பாக மிக்கேல் பட்டினம் கிராம மக்கள் கடந்த 9 மாதங்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரில் கட்டப்பட்டுள்ள 3 மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் அரசு நிதியில் சீரமைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு விட்டு வெள்ளையடித்து மட்டும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. அவை தண்ணீர் இல்லாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக நிற்கின்றன.

இங்குள்ள நடுவீதி, வடக்குத்தெரு, கற்பக விநாயகபுரம், பழைய பள்ளியின் பின்புறம் ஆகிய 4 இடங்களில் போர்வெல் மூலம் சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்படும் உவர்ப்பு நீரை கிராமமக்கள் துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும், குளிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. குடிநீர் கிடைக்காததால் தனியார் நிறுவனம் டேங்கர் லாரி மூலம் கொண்டு வந்து விற்கும் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டியுள்ளது.

இக்கிராம மக்கள் முன்னாள் கலெக்டர் மலர்விழியிடம் குடிநீர் கேட்டு பலமுறை மனுக்கொடுத்தும் எந்த பயனும் இல்லாததால், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு நீரேற்றும் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊரைச்சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவிகள் தினமும் தண்ணீர் தேடி வைரம்பட்டி, பெரியகோட்டை, எறும்புகுடி கிராமங்களுக்கு அலைய வேண்டியுள்ளதால், படிப்பை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மிக்கேல் பட்டினத்தை சேர்ந்த கே.மாரி,32, கூறியதாவது: எங்கள் ஊரில் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் தொட்டியை பழுது பார்த்தும் தண்ணீர் கிடைககவில்லை. குடிநீர் தேடி பக்கத்து கிராமங்களுக்கு அலைய வேண்டியுள்ளது.

அரசாங்க நிதியை தவறாக செலவழித்து இருக்கிறார்களே தவிர, தண்ணீர் கிடைக்க எந்த வழியும் செய்யவில்லை. ஊரை காலி செய்து விட்டு வெளியேறலாம் என இருக்கிறோம், என்றார்.
அதே ஊரைச்சேர்ந்த மைக்கேல்,55, மூதாட்டி பஞ்சு, 52, கூறியதாவது:40 லட்சம் ரூபாய் செலவழித்து கட்டியள்ள மேல்நிலை தொட்டி கட்டியும் பயன்படவில்லை. பெண்கள் தண்ணீர் தேடி கிராமம் கிராமமாக அலைய வேண்டியுள்ளது. சம்பாதிக்கும் பணத்தில் குடிநீர் வாங்கவே பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. அரசாங்கம் எங்களுக்கு தண்ணீர் தரவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் சாக விட்டு விட்டு எங்கள் பிள்ளை, குட்டிகளுடன் ஊரை காலி செய்து வேறு எங்காவது போய்விடலாம் என்று இருக்கிறோம், என்றனர்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement