Advertisement

 குடிசைகளை அகற்ற வேண்டிய துறை... ஒரு வாரியம்: ரெண்டு காரியம்! கோர்ட் உத்தரவை மதிக்காமல் பிடிவாதம்!

-நமது நிருபர்-குடிசைகளில்லாத நகரமாக கோவையை மாற்ற வேண்டிய குடிசை மாற்று வாரியம், ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னும், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்று வீடுகளை வழங்காமல், முரண்டு பிடித்து வருகிறது; இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டிய கட்டாயம், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், குடிசைப் பகுதிகள் உள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம் துவங்கியபோது, கோவையை குடிசைகளில்லாத நகரமாக மாற்றுவதற்கு, நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கும் திட்டம் (பி.எஸ்.யு.பி.,) செயல்படுத்தப்பட்டது. பட்டா நிலங்களில் இருப்போர்க்கு வீடு கட்டவும், ஏற்கனவே இருக்கும் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றவும் மானியம் தரப்பட்டது.15,717 குடிசைகள்...!அடுத்த கட்டமாக, நீர் நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளில் இருப்போர்க்கு மாற்று வீடுகள் வழங்குவதற்கு, அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியது. தமிழகத்திலேயே, கோவையில் தான் அதிகளவிலான வீடுகள் கட்ட, குடிசை மாற்று வாரியத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டு, குடிசைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கோவை நகரில் 15 ஆயிரத்து 717 குடிசைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.இவர்களில், நீர் நிலைகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மாற்று வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அம்மன் குளம், உக்கடம், வெள்ளலுார், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சுகுணாபுரம் உட்பட 12 இடங்களில், 10 ஆயிரத்து 888 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; பல வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.பல ஆயிரம் குடிசைவாசிகளுக்கு வீடுகளை ஒதுக்கிட, துரிதமாய் வேலை பார்க்கும் குடிசை மாற்று வாரியம், கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியிலுள்ள குடிசைப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னும், மாற்று வீடுகள் வழங்க மறுத்து வருகிறது. ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை அகற்றுவது தொடர்பாக, பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.கடந்த ஜனவரி 19ல், ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், 'இந்த குடிசைகளை அகற்ற தேவையில்லை' என்று 2012 ஜூன் 16ல் கோவை கலெக்டர் வெளியிட்ட செயல் முறை ஆணையை ரத்து செய்ததோடு, அங்கு வசிப்போர்க்கு, மாற்று இடங்களை வழங்கி, ஆக்கிரமிப்புகளை ஆறு மாதங்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு, கடந்த ஆக., 20 உடன் முடிவடைந்தது.ஐகோர்ட் உத்தரவை ஏற்று, மாநகராட்சி நிர்வாகமும், அங்குள்ள 220 குடும்பங்களுக்கு 'பயோ-மெட்ரிக்' எடுத்து, பயனாளிகள் பட்டியலை, குடிசை மாற்று வாரியத்துக்கு அனுப்பி விட்டது. அந்த ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு-தடாகம் ரோடுகளை இணைக்கும் என்.எஸ்.ஆர்., ரோடுக்கு மாற்றுச் சாலையாகவுள்ளதால், அதை மீண்டும் 50 அடிக்கு அகலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மாநகராட்சி தெளிவுபடுத்தி, கடிதம் அனுப்பியுள்ளது.ஆனால், இன்று வரையிலும், அங்குள்ளோர்க்கு மாற்று வீடுகளை வழங்காமல், குடிசை மாற்று வாரியம் இழுத்தடித்து வருகிறது. ஒரு புறத்தில், விரைவில் அவர்களுக்கு வீடு ஒதுக்குவதாகக் கூறும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மறுபுறத்தில், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் துாண்டுதலின்பேரில், வீடு ஒதுக்காமல் தாமதப்படுத்துகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களை சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யவும், இவர்களே துாண்டி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனால், இந்த ரோட்டுக்காக வழக்கு தாக்கல் செய்த கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கு மனு (எண்:140512/2017) தாக்கல் செய்துள்ளது. இது விசாரணைக்கு வரும்போது, ஐகோர்ட் உத்தரவை அமல் படுத்த மறுத்ததற்காக, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மட்டுமின்றி, மாவட்ட, மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும், இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமென்பது நிச்சயம்.
கீரணத்தத்தில் ஒதுக்கப்படும்!தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோவை மண்டல நிர்வாகப் பொறியாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''நகரில் குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு, படிப்படியாக மாற்று வீடுகள் வழங்கப்படும். ஜீவா நகர் மக்களுக்கு, கீரணத்தத்தில் வீடுகள் ஒதுக்கப்படும். அங்கு இன்னும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை; அதற்கான பணம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கட்டப்பட்டு விட்டது. ஒரு வாரத்தில் இணைப்பு கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement