Advertisement

ஆக்கிரமிப்புகளால் வணிக பகுதியாக மாறிய... ஏரி நிலம்! ஆளுங்கட்சி பிரமுகர்களின் அட்டூழியம் அம்பலம்

தாசில்தாரின் எச்சரிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பு, நமது நாளிதழ் சுட்டிக்காட்டி வெளியிட்ட செய்தியையும் மீறி, சோழிங்கநல்லுாரில் வருவாய் துறை அதிகாரிகளின் ஆசியோடு, ஏரி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவில் உள்ள, பொன்னியம்மன் கோவில் பகுதி, சர்வே எண், 439ல், தாமரைக்கேணி ஏரி உள்ளது. இந்த ஏரி, ஐ.டி., காரிடார் எனப்படும், ராஜிவ்காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 50 ஏக்கர் பரப்பளவிற்கும் மேல் பரந்து விரிந்து காணப்பட்ட தாமரைக்கேணி ஏரி, ஆக்கிரமிப்பால் தற்போது ஒற்றை இலக்க ஏக்கராக சுருங்கிவிட்டது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய ஏரி மேலும் சுருங்கி வருகிறது. ராஜிவ்காந்தி சாலையை ஒட்டி, கடைக்குட்டை மேடு என்ற பகுதியில், இந்த ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம், சில ஏக்கர் பரப்பளவிற்கு காலியாக இருந்தது.

எச்சரிக்கை பலகை:
இதை, உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளாட் போட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழிங்கநல்லுார் தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரனுக்கு, இது சம்பந்தமாக புகார் வந்தது. பிளாட் கற்களை பிடுங்கி எறிந்துவிட்டு, இது ஏரி புறம்போக்கு நிலம் என்றும், அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவர் என்றும் தாசில்தார் எச்சரிக்கை பலகை வைத்தார்.
தாசில்தார் ரவிச்சந்திரன் பணிமாறுதலாகி சென்றதும், எச்சரிக்கை பலகையை இரவோடு இரவாக பிடுங்கி எறிந்துவிட்டு, மீண்டும் பிளாட் போடுவதற்கான முயற்சியில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் களமிறங்கினர்.
ரூ.1 லட்சம் விலை:
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்த ஏரி புறம்போக்கு நிலத்தை, முழுமையாக தனியார் ஒருவருக்கு விற்பனை செய்ய, ஆளுங்கட்சி பிரமுகர்கள், சென்ட் ஒரு லட்சம் ரூபாய் என விலை பேசினர்.அப்போது, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்த வருவாய் துறை அதிகாரிகள், அந்த இடம் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் கூறினர். ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக, வருவாய் துறை அதிகாரிகள் அந்த பக்கமே தலைகாட்டவில்லை.குறிப்பிட்ட புறம்போக்கு நிலமும் விற்பனை செய்யப்பட்டு, தற்போது வணிக பகுதியாக உருமாறியுள்ளது.
இது குறித்து பகுதிவாசி ஒருவர் கூறியதாவது: தாமரைக்கேணி ஏரியின் பெரும்பகுதி, உள்ளூர் அரசியல்வாதிகளால் தான் விற்பனை செய்யப்பட்டது. முன்பு, குடியிருப்புக்காக சில சென்ட் இடங்களை விற்றனர். தற்போது நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடங்களை, சட்டவிரோதமாக பல லட்சத்திற்கு விற்றுள்ளனர். வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், 'தாமரைக்கேணி ஏரியில் உள்ள ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வலியுறுத்தி, விரைவில் நோட்டீஸ் வழங்கப்படும். 'மேலும் ஏரியை மேம்படுத்தி பாதுகாக்க திட்டம் வகுக்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

  • Siva Kumar - chennai,இந்தியா

    ஏன் தினமலரே பொதுநல வழக்கு தொடரக்கூடாது?

    • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

      அவ்வ்வ்வ்..

  • Indhuindian - Chennai,இந்தியா

    அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்த தில்லு முள்ளுக்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகர் அனைவைரையும் குண்டாசில் உள்ளதள்ளவேண்டும்...

    • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

      கவர்னரும்,, ஜனாதிபதியும், பிரதமரும் சண்டைக்கு வருவார்களே.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    இந்த மாதிரி விஷயங்களை நீதிமன்றத்தில் ஏன் பொதுநல வழக்காய் எடுத்து நடத்தக் கூடாது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement