Advertisement

அதிக குப்பை உருவாகும் வளாகம் மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கும் அதிகமாக குப்பை சேகரிக்கும் வளாகங்கள் எவை என, மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதி, 2016ன் படி, அக்., 2ம் தேதி முதல், குப்பை சேகரிப்பு முறையில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், மக்காத குப்பை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டும் பெறப்படும். மக்கும் குப்பை, தினமும் பெறப்படும்.நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேல் குப்பையை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, தனி குடியிருப்பு வளாகம், வணிக நிறுவனம், ஓட்டல், வர்த்தக பகுதி, வணிக வளாகம் ஆகியவற்றில், சென்னை மாநகராட்சி இனி குப்பையை பெறாது.அந்த வளாகங்களிலேயே குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அவர்களே மறு சுழற்சி செய்ய வேண்டும். இதற்காக, சென்னை மாநகராட்சி, மண்டல வாரியாக, அதிக குப்பையை உருவாக்கும் வளாகங்கள் எவை என, கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேல் குப்பை உருவாக்கும் வளாகங்கள், சென்னையில், ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கின்றன. சென்னை மாநகராட்சியின் பழைய மண்டலங்களிலும், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய பகுதிகளிலும், இந்த வளாகங்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்த துல்லியமான புள்ளிவிபரம், ஒரு வாரத்தில், மாநகராட்சியிடம் வழங்கப்படும்.அதன் பின், இந்த வளாகங்களுக்கு, 'நோட்டீஸ்' அளிக்கப்படும். ஏற்கனவே, வட்டார அளவில் குப்பையை தரம் பிரித்து, மறு சுழற்சி செய்ய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த குறும்படங்களும் தயாராகி வருகின்றன. கால அவகாசம் கேட்கும் வளாகங்களில் மட்டும், ஓரிரு மாதங்களுக்கு மாநகராட்சி குப்பையை பெறும்.ஆனால், அவகாசம் கேட்கும் வளாகங்களில், குப்பை மறு சுழற்சி செய்வதற்கான பணிகளை செய்வது தொடர்பாக, மாநகராட்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதை, மாநகராட்சி கண்காணிக்கும். சென்னையில், 100 கிலோ குப்பைக்கு மேல் உருவாக்கும் வளாகங்களில், ஜனவரி முதல் கட்டாயமாக குப்பை பெறப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement