Advertisement

குப்பையில் இருந்து மின்சாரம் திட்டத்தில் திருத்தம்: வல்லுனர் குழு பரிந்துரை

சென்னை: பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக சில திருத்தங்களை மேற்கொள்ள, வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், தினமும், 5,400 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில், 2,800 டன் குப்பை கொடுங்கையூரிலும், 2,600 டன் குப்பை பெருங்குடியிலும் கொட்டப்படுகிறது. இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டும் குப்பை, பல லட்சம் டன் கணக்கில் சேகரமாகி, மலை போல குவிந்து கிடக்கிறது.இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கவும், குப்பையில்லா நகரமாக சென்னையை மாற்றிடவும், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை அடிப்படையில், பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளிலும், குப்பை மாற்று திட்டங்களை செயல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது.இதன்படி, பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பையில் இருந்து, 57 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாநகராட்சி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வல்லுனர் குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் நிபுணர், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய வல்லுனர் குழு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், திட்ட அறிக்கை விவரிக்கப்பட்டது.வல்லுனர் குழுவினர், திடக்கழிவு மேலாண்மை விதியின் படி, திட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக சில மாறுதல்களை மேற்கொள்ள பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில், திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. அதன் பின், வல்லுனர் குழு ஒப்புதலும், தமிழ்நாடு கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட உள்ளது.இந்த ஒப்புதலுக்கு பின், இத்திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கும் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement